Sunday 28 September 2014

ரத்த நாளங்களில் ஊறிக்கிடக்கும் ஆசிரியம்


(எஸ்.ஆர்.வி.  பள்ளியில் வெளியிட்ட நாங்கள்' என்ற புத்தகத்தில் எனது பள்ளி மற்றும் ஆசிரியர்கள் குறித்த கட்டுரை) 

   என் முதல் ஆசிரியயை நினைக்காமல் இந்தக்கட்டுரையை என்னால் தொடங்க முடியாது. அந்த கால வழக்கப்படி தேங்காய், பூபழங்கள், வெற்றிலைப்பாக்கு, பணம் வைத்த தட்டுடன் அம்மாவின் பின்னால் பதுங்கியபடி தலைமையாசிரியரின் வகுப்பிற்கு நடந்து செல்கிறேன். காது எட்டுகிறதா என்று பார்த்தபடி சில கேள்விகள் கேட்டு என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள். ஒண்ணாங்கிளாசில் கொண்டுபோய் விடுவதற்காக அம்மா கூடவே வந்தபோது டீச்சரைப் பார்த்து நான் இன்னும் பயந்து போகிறேன். நல்ல  அடர் கருப்பில் கருநீல புடவை கட்டி ரிங் கொண்டை போட்ட டீச்சர் என்னை மிகவும் பயமுறுத்தினார். நான் கறுப்பு டீச்சர் வகுப்பில் படிக்கவேமாட்டேன் என அடம்பிடித்து அழுது புரண்டேன். என் அழுகையின் தீவிரம் பார்த்து பக்கத்து வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்த ஒரு வெள்ளை டீச்சர் என் பாட்டியை போலிருந்ததால் என் அழுகை மட்டுப்பட்டது. வெள்ளை டீச்சர் கிளாஸுக்குப் போனபிறகுதான் கைகளில் எத்தனை முட்டி இருக்கிறதென்பது புரிய ஆரம்பித்தது. அது வேறு வகையான சோகம்கருப்பு டீச்சர் என்று ஒரு ஆசிரிய மனதை எவ்வளவு புண் படுத்தியிருக்கிறேன் என்று நான் யோசித்ததேயில்லை. இருபத்திமூன்று வருடங்களுக்குப் பிறகு திருவண்ணாமலை லயன்ஸ் கிளப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்து அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். அங்கு போனபோது நான் முதல்முதலாய் சந்தித்த அந்தக் கருப்பு டீச்சரும் அதிலிருந்தார். அவர் என்னைப்பார்த்து ஏம்மா நான் கருப்புன்னு என் கிளாசுக்கு வரமாட்டேன்னு அடம்புடிச்சயே. இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா என்று பவாவைப் பார்த்து சிரித்துக் கொண்டேதான் கேட்டார். [என் கணவர் அடர் கருப்பு] ஆனால் அதற்குப் பிறகான இந்த பத்து வருடங்களில் டீச்சர் கேட்டது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் ஒரு ஆசிரிய மனதை, அது எத்தனை ஆழமாய் பதிந்திருந்தால் இருபத்திமூன்று வருடங்கள் கழித்து இப்படி வெளிப்பட்டிருக்கும். சின்ன வயதில் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் எனக்கு தெருவில் காலையிலும் மாலையிலும் கருப்பு பர்தா போட்டுக் கொண்டு வேலைக்குப் போய் வரும் முஸ்லிம் பெண்ணைக் காண்பித்து பயமுறுத்தியதன் விளைவே அதுவென்றாலும், அது புத்திக்கு புரிந்தாலும் மனசு இன்னமும் அடங்கவே மறுக்கிறது. இப்படியாவது அவரிடம் மன்னிப்பு கேட்க முயல்கிறேன்.

   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம்., முடித்துவிட்டு பெருங்கனவில் எம்.ஃபில்., அப்ளிக்கேஷனுடன் திருவண்ணாமலைக்கு வந்தேன். எப்படியும் எம்.ஃபில் முடித்து கல்லூரிப் பேராசிரியராகிவிடும் கனவு கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. ஆனால் வாழ்க்கை ஒன்றும் அப்படி கனவுகளின் மீது ஒற்றியெடுக்கும் கருணையோடில்லையே.

   அப்போதுதான் இந்தியா முழுவதும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த ஒரு தனியார் பள்ளியில் என் எதிர்பார்ப்பை மீறின சம்பளத்துடன் வேலை கிடைத்தது. படித்தது வணிக பட்டமேற்படிப்பு என்பதால் எல்.கே.ஜி. வகுப்பிற்கு ஆசிரியையானேன். அந்த இடம்தான் வகுப்பறை யாருடையதாக இருக்கவேண்டும் என்பதை எனக்கு தெளிவாக்கிய முதல் களம்.

   உடல் முழுக்க குழந்தைகளாய் பூத்திருக்கும் என்னை எனக்கே பிடித்த காலமது. அம்மா, அக்கா, சித்தி என்றெல்லாம் கலவையாய் குழந்தைகளின் அழைப்பினூடே என்னைக் கரைத்த நாட்கள் அவை. எப்போதும் வகுப்பறைக்கு வெளியே பாடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் ரயில் பெட்டியாய் எதற்கும் நிற்காமல் எங்கள் செயல்பாடுகளின் மும்முரம் பார்த்து, ஒரு வருடம் காத்திருந்தாலும் பரவாயில்லை, என் குழந்தைக்கு இந்த மேடம் வகுப்பில்தான் அட்மிஷன் வேண்டுமென்ற பிடிவாதத்தில் ஆரம்பித்து பிரச்சனை ஆனதெல்லாம் என்  காதுகளுக்கு மெல்லத்தான் வந்து சேர்ந்தது. அதற்கு பிறகான நாட்களில், ‘இவன் ரொம்பக் குறும்புப் பையன் யாருக்கும் அடங்கவேமாட்டான்’, ‘இந்தப் பொண்ணு ரொம்ப பொசசிவ் யாரோடையும் ஒத்துபோகமாட்டா’, ‘வேற ஒரு ஸ்கூல்ல சேத்தோம் டீச்சர்ஸ் டார்ச்சர்ல ஸ்கூலுக்கே போகமாட்டேன்னுட்டான்’, ‘என்னை விட்டுட்டு இருக்கவே மாட்டான் அதனால் நானும் இப்படி ஒரு ஓரமா இப்படி உக்காந்துக்கறேனேஎன்ற விதவிதமான குழந்தைகளின் கூடாரமானது என் வகுப்பு. இப்படியான குழந்தைகள் கொஞ்சம் தயங்கி, யோசித்து என் மீது கருணை வைத்து பிறகெப்போதும் இறங்கிவிடாத பிடிவாதத்துடன் எங்கள் ரயிலில் ஏறிக் கொண்டார்கள். நாங்கள் புதிது புதிதாய் படித்தோம். இசையையும் வண்ணங்களையும் வைத்து வாழ்வின் உன்னதங்களை  நகலெடுத்தோம்மனித சூழ்ச்சிகளற்ற அந்த குழந்தைகள் பச்சை மண்ணாய் தங்களை என்னிடம் ஒப்புவித்திருந்தார்கள். பள்ளி நேரத்திற்குப் பிறகும் வீட்டிற்குப் போகாத குழந்தைகளும், எப்படியாவது இன்னும் இரண்டு மணிநேரம் நீங்கள் பார்த்துக் கொள்ளமுடியுமா என்ற கேள்வியோடு அம்மாக்களும் வகுப்பு வாசலில் காத்திருந்தார்கள். இப்படியான அற்புதங்களாய் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த ஒரு ஏப்ரல் மாத காலையில் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து மறந்திருந்த வேலை வந்தது. கனவு கலைந்த மிரட்சியோடும் ஆசைப்பட்ட வேலை கிடைத்த சந்தோஷத்தோடும் கல்லூரிப் பணிக்குப் போனேன்.

   கல்லூரி அதற்கே உரிய அழகோடும் பதின்வயதின் துள்ளலோடும் இருந்தது. அந்த பொறியியல் கல்லூரியின் கலை அறிவியல் கல்லூரிக்கு அடுத்த வருடமே நான் மாற நேர்ந்தது. அவை என் நினைவில் தங்கி இனிமையாய் உறைந்து போன நாட்கள். என்னைவிட கொஞ்சமே வயதில் சிறிய பெண்கள் வண்ணத்துப்பூச்சிகளாய்  தங்கள் வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கத் துடித்த நாட்களில் நான் அவர்களோடு இருந்தேன். பேரார்வத்திலும், கட்டாயத்தின் பேரிலும், தான் நினைத்த பாடப்பிரிவுகள் கிடைக்காமல் வணிகவியல் படிக்கவும், வீட்டில் இதுதான் நல்ல படிப்பு என்றும் இது படித்தால் வேலை கிடைக்கும் என்றதாலும், தான் படிக்க முடியாமல் போனதை மகளின்மேல் ஏற்றி சுமத்த தயாராய் இருந்த பெற்றோர்களின் கனவினையும்  ஒருசேர என் வகுப்பிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் அதொன்றும் எங்கள் சந்தோஷத்தை கோருபவையாக இல்லை. கார்ப்பரேட் அக்கவுண்ட்ஸிலிருந்து தங்கள் காதல் வரை என்னிடம் விவாதித்தார்கள். அவர்கள் தங்கள் ரகசியங்களை என்னில் பாதுகாத்து சற்றும் கசிந்து விடாத கூடாரமாய் என்னை உணர்ந்தார்கள். தன்னைப் பெற்றவர்களைவிடவும் அதிகமான ப்ரியத்தைக் கொட்டினார்கள். நான் அவர்களின் எல்லா கஷ்டங்களுக்கும் களிம்பிடுவேன் என நம்பினார்கள்.  என்னிடம் வந்த அந்த இளமனங்களை நானும் ஒருபோதும் வெறுமையாய் திருப்பியனுப்பியதில்லை.

   வாழ்வின் அலை அடிப்புகளுக்கெல்லாம் திசை திரும்பவில்லையென்றாலும் சில தீவிரமான புயலுக்கு மண்டியிட்டு நிற்கதானே வேண்டியிருக்கிறது. அப்படிதான் நானும் கல்லூரியிலிருந்து பதிப்பக வேலைகளுக்கு வரவேண்டியதாயிற்று. கல்லூரியைவிட்டு வெளியே வந்த இந்த பத்து வருடங்களில் இன்னும்கூட பேர் வராத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வரும். சுவிட்சர்லாந்திலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ ஒரு குரல், ‘மேடம் நான் படித்த என் மொத்த பள்ளி கல்லூரி வாழ்க்கையில் உங்களைப்போல ஒருத்தரை பார்த்ததில்லை. டீச்சர்ஸ் டே ன்னா உங்களை மட்டும்தான் நியாபகம் வருது. எங்களை எப்படியெல்லாம் உருவாக்கினீங்க? அதான் மேம் நன்றி சொல்லக் கூப்பிட்டேன்என்றோமேம் சயின்ஸ் படிச்சிருந்த என்னை காமர்ஸ் படிக்கச் சொல்லி வீட்டில் கட்டாயப்படுத்தினபோது முதல் ரெண்டு மாசம் அழுதுகிட்டேதான் வந்தேன். அதுக்குப் பிறகு உங்களாலதான் சப்ஜெக்ட் மேல ஆர்வமே வந்தது. அது இப்ப என்னை சி.. இண்டர் முடிக்க வச்சிருக்கு. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல மேம்என்றோஃபேஸ் புக்கில் உங்களையும் சாரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம், இது எங்க மேடம்ன்னு சொல்லகூட முடியாத மொழி தெரியாத ஊரில வந்து மாட்டின மாதிரி இருக்கு. நீங்க மட்டும்தான் வெளிச்சக் கீற்றா இருக்கீங்க என நெகிழும் மாணவிகளும் இன்னும்கூட தங்கள் பிரச்சனைக்கு என்னிடம் பேசிவிட்டால் போதும் என்று நினைக்கும் மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கை விதையை என்னிலிருந்து தூவ முடிந்த நிறைவில் நானுமிருக்கிறேன்.

   ஆனால் ஆசிரியம் என்பதில் என் முதல் அனுபவம் வலி நிறைந்ததாகவே இருந்தது. எனக்கான ஆசிரியைகள் என்னுடையவர்களாக இல்லை. என் கனவை, துள்ளலை, தோட்டத்திற்கு வெளியே பூக்க நினைக்கும் என் தாவர பகிர்தலை, நினைவுகளை யாரும் ஏறெடுத்ததேயில்லை. ஆசிரியப் பணியை வேலையாய், சம்பளமாய், ரிங் மாஸ்டரிடம் மாட்டிக்கொண்ட விலங்கினை பயிற்றுவிப்பதாய் நினைப்பவர்களிடம் உழன்ற நாட்களாகவே என் பால்யம் கழிந்தது. மழை நாட்களில் ஜன்னலுக்கு வெளியே மேகக் கூட்டங்களை, நூல் மழையை, அரிதாய் விழும் ஆலங்கட்டிகளை பார்க்கத் துடித்த என் விரிந்த விழிகளை அவர்களின் பார்வை சந்தித்ததேயில்லை.
   
   என்னுடைய 17 வருட பள்ளிக் கல்லூரி வாழ்வில் என் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒன்றோ இரண்டோ தவிர அத்தனைபேரும் என் நியாபக் அடுக்குகளை காலியாகவே வைத்திருக்கின்றனர். என்னை விட நான்கைந்து வயதே கூடின இந்திரா மிஸ் எனக்கு மிக நெருக்கமாக சிலபஸ் தாண்டி என் கவிதைகளுக்கு மொழியாய், நான் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் என் ஒவ்வொரு செயலுக்கும் இசைவாய் இருந்தார்கள். என்னோடு மைதானத்தில் விளையாடினார்கள், எனக்காக சுற்றுலா ஏற்பாடு செய்தார்கள், அதற்காக எங்கள் வீட்டில் அனுமதி பெற வந்தார்கள், என்னைக் கல்லூரியில் சேர்த்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள்.என் சினேகிதி போல, நான் நேசித்த மலர் என்னை நேசித்ததுபோல, நான் விரும்பின வாழ்வை எனக்களித்தார்கள். அவரே என் படிப்பையும் அதன் மூலம் என் வாழ்வையும் வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்ற முதல் ஆசிரியை. இந்திரா மிஸ் போல வகுப்பெடுக்கவேண்டும், அவர்போல பாடங்களைப் புரிய வைக்கவேண்டும், என்னுடைய மாணவர்கள் நான் இந்திரா மிஸ்ஸை நேசித்ததுபோல என்னோடு நேசமாய் வைத்திருக்கவேண்டுமென்று நான் ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.

   அதற்குப் பிறகான பல்கலைகழகப் படிப்பில் என்னை ஈர்த்த, குருவாய் நான் மதித்தது எங்கள் நமச்சிவாயம் சாரைத்தான். கண்களை மூடிக்கொண்டு சங்கீதம் கேட்பதுபோன்ற ஈடுபாட்டுடன் மார்க்கெட்டிங் கிளாசஸ் கேட்கலாம். மாலைகளில்  விருப்பப் பட்ட மாணவர்களுக்காக பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்பெடுத்தால் நம்மை நாமே மிக உயர்வாய் மட்டுமல்ல நம்மால் எல்லாம் முடியும் என உணர வைப்பார். எனக்குத் தெரியாமலே என் கடமையை உணரவைத்து அதற்கேற்ப என் பாதையை வகுத்து அதில் பயணிக்க தைரியமும் தெம்பும் ஏற்படுத்தியவர். ஒல்லியான உயரமான மிஸ்டர் க்ளீன் என்று பார்த்தவுடன் சொல்லவைக்கும் நமச்சிவாயம் சாரும் இந்திரா மிஸ்ஸும் மட்டும் ஏன் என் மனதில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நிலையாய் நிலைத்திருக்கிறார்கள். அவர்களின் மீதிருந்து வரும் சந்தனம் கலந்த விபூதி வாசனை கூட என் புலன்களில் தங்கிவிட்டது எப்படி? எனக்கு மீதி பதினைந்து வருடங்களில் எத்தனைஎத்தனை ஆசிரியர்கள் வந்து போயிருப்பார்கள்? ஏன் அவர்களில் ஒருவர்கூட எனக்கு நெருக்கமாகவில்லை? நான் அவர்களிடமும் எவ்வளவெல்லாம் கற்றிருப்பேன்? எனக்கு சொல்லிக்கொடுக்க அவர்களும் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? ஆனாலும் ஆனாலும் வேலிகளைக் கடந்து முளை விட்டிருந்த என் துளிரை அந்த இரண்டுபேர்தான் கண்டடைந்திருந்தார்கள். நீரூற்றி பாதுகாத்தார்கள், பூ பூக்கக் காத்திருந்தார்கள். எல்லோருக்கும் அப்படி தோள் மீது ஒரு கரம் நான் இருக்கிறேன் என்று விழவேண்டியிருக்கிறது. அது ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் வானமே எல்லையாக நீள்கிறது.

  இந்தக் கட்டுரையை அப்படியே கணினியில் அடிக்க ஆரம்பித்தபோது ஆறாங்கிளாஸில் படிக்கும் என் மகள் மானசி கூடவே வாசித்தாள். சட்டென அவளிடம் திரும்பி, ‘உன் வகுப்பு எப்படி இருக்கணும்னு நீ நெனக்கறடாஎன்று கேட்டேன். தடையில்லாமல் அவளிடமிருந்து பதில் வந்தது. ‘என்னோட க்ளாஸ் டீச்சர்ஸோட க்ளாசா இருக்கக் கூடாது, நாங்களும் கலந்துக்கறதா இருக்கணும், சப்ஜெக்ட் தாண்டி எல்லா விஷியங்களையும் விவாதிக்கணும், கரண்ட் அஃபேர்சை பேசணும், எல்லாத்துக்கும் மேல எங்களை ஃபிரெண்ட்லியா நடத்தற டீச்சர்ஸ் மட்டுமே இருக்கணும் என்கிறாள்.

   எல்லா காலகட்டத்திலும் குழந்தைகளோ பெரிய பிள்ளைகளோ அப்படியேதான் இருக்கிறார்கள். தன் மேல் விழும் மழைத்துளிக்காய் உருகி கரைகிறார்கள். ஆனால் நாம்தான் இன்றைய காலகட்ட குழந்தைகள் சரியில்லையென்றும் எந்த நேசத்தையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்றும் சொல்கிறோம். அப்படியெல்லாம் இல்லை. நிலவு எப்போதும் அழகாய்தானிருக்கிறது, தண்ணென்றுதானிருக்கிறது.