Thursday 15 February 2018

'முத்தியம்மா' தொகுப்பு விமர்சனம் - பத்மநாபபுரம் அரவிந்தன்.



   கே.வி. ஷைலஜாவை சிறந்த மொழிபெயர்ப்பாளராக அனைவரும் அறிவோம். ஜாலங்களற்ற யதார்த்தமான வார்த்தைகளால் அவர் செய்யும் மொழிபெயர்ப்புகள் மூல நூலின் தரத்தையோ, வாசிப்பானுபவத்தையோ ஒரு போதும் குறைக்காததாய் இருக்கும்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடாகட்டும், எம்.டி ஆகட்டும் மற்றும் என்.எஸ். மாதவன், கல்பட்டா நாராயணன், சிஹாபுதின் பொய்த்தும்கடவு எனும் பலரின் மலையாள எழுத்துக்களையும் அதே கவித்துவமான நடையில் ஷைலஜாவால் தமிழுக்குத் தர முடியும் என்பதனை அவர் தம் மொழிபெயர்ப்புகளில் நிரூபித்துள்ளவர்.
ஷைலஜாவின் மொழிபெயர்ப்பை வாசித்த அனைவருக்கும், அவர் தமிழில் சுயமான படைப்பை தர வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். நானும் அவர்களிடம் பலமுறை இதனை தெரிவித்துள்ளேன்.
முத்தியம்மாவை ஒரு சுழி போட்டு துவங்கி இருப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.
இந்த புத்தாண்டின் விடிவே எனக்கு பவா அண்ணா, ஷைலஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ந்தது. நானும் என் குடும்பத்துடன் திருவண்ணாமலை போயிருந்தேன். அன்றுதான் நான் 'முத்தியம்மா' தொகுப்பை வாங்கினேன்.
காரில் சென்னை வரும் வழியிலேயே படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை (கட்டுரை) முத்தியம்மா வாசித்து முடித்து சற்று நேரம் அக்கதையினை காட்சிகளாக மனதுள் ஓட்டிப் பார்த்தேன். ஒருவரின் மனதினையும், எண்ண ஓட்டங்களையும் மிக சரியாக உள்வாங்கும் ஒருவரால் மட்டுமே இத்தனை தத்ரூபமாய் எழுத முடியும். சபாஷ் ஷைலஜா..
யாருக்கும் தான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரும் இடங்களும் நினைவுகளும் மறக்காது. அதிலும் பசுமை உறைந்து கிடக்கும் ஷைலஜாவின் கேரளாவின் நினைவுகளுள் நம்மையும் கைபிடித்து தன் பாட்டி வீட்டுக்கே அழைத்து செல்கிறார்.
வேறிடத்தில் எத்தனை ஆழமாய் வேரூன்றி கிளைபரப்பி பூக்களை சொரிந்தாலும் அடிவேரின் ஒரு பகுதியில் பிறந்து வளர்ந்த ஊரின் வாசம் கமழத்தான் செய்யும். அது அத்தனைக் கிளைகளிலும் பூக்களிலும் மிஞ்சும்.
இப்பொழுது மாதம் இருமுறை ஹெலிகாப்டரில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் நான் ஒவ்வொரு முறை அதில் ஏறும் போதும் , என் மனதுள் பால்ய காலத்தில் எப்பொழுதாவது ஊரின் மேலே பறந்து செல்லும் ஹெலிகாப்டரைக் காண அண்ணாந்து பார்த்தபடியே பத்மநாபபுரம் தெருவில் ஓடிய ஒரு சிறுவனின் நினைவும், உலகில் எங்கு சென்றாலும்.. பல சமயங்களில் வேளிமலையும், அடர் வனமும், எப்பொழுதும் நீர் நிரம்பி கிடைக்கும் பெருமா குளமும் மனதுள் வந்து நிற்கும். ஷைலஜாவின் ' நினைவில் காடுள்ள மிருகம் நான்' , அதனை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
கடைசியில் சச்சிதானந்தனின் வரிகளான ," நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது ..என் நினைவில் காடுகள் இருக்கின்றன", என்று மிகப் பொருத்தமாய் முடித்துள்ளார்.
நினைவிலிருந்து காடுகளை இழந்த மிருகங்களாகிப்போன மனிதர்கள் இதனைப் படிக்கும் போது தன் பால்யகாலத்தையும், பிறந்து வளர்ந்த ஊரையும் மனதுள் துழாவிப் பார்ப்பார்களென்பது நிச்சயம்.
இயக்குனர் பாலு மகேந்திராவின் மீது பவாவும், ஷைலஜா மற்றும் வம்சியும் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு சகலமும் அழகாய் சொல்லிப்போகிறார்.
தன் தம்பியாய், மகனாய் இருந்த நா. முத்துக்குமாரின் மரணம் தந்த பெருவலியும், அவரது நினைவுகள் தந்துகொண்டிருக்கும் துயரும் மிக உருக்கமாக நம்மை உறைய வைக்கிறது.
உமா பிரேமனைப் பற்றிய கட்டுரை ரொம்பவே மனதினை பாதித்தது. அதனை படித்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் மம்முட்டி ஷைலஜாவிடம் வாசித்துக் காட்டிய, குடியை பற்றிய ஷாஜி குமாரின் நையாண்டிக் கவிதையை சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.
அக்கவிதையினைப் படித்து முடித்ததும் சற்று நேரம் சிரித்தேன். ஆயினும் அக்கவிதை சொல்லும் நிஜம் என்னையும் யோசிக்க வைத்தது.
ஏனெனில் நானும் எப்பொழுதும், '' குடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை..  ''அதே போல குடியின் முடிவில்'' நான் ஒருபோதும் என்னானாலும் உருளைக்கிழங்கை மட்டும் தொடமாட்டேன்'', இக் கவிதையின் சம்பவம் எனக்கும் பலமுறை நிகழ்ந்துள்ளது.
யோசிக்க வைத்த கவிதை. குடி மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதனை சுய அனுபவத்தில் அறிந்தவன் நான்.
இப் புத்தாண்டிலிருந்து குடியை நான் மட்டுப்படுத்தி விட்டேன். இருபத்தி எட்டு நாட்கள் கடலில் குடிக்காமல் இருக்க முடிகிற எனக்கு விடுப்பில் வந்ததும் ஏன் அளவிற்கதிகமாய் குடிக்க தோன்றுகிறது?.. நான் ஏன் அக் கவிதையில் வருவது போல ' உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுக்க வேண்டும்', என்றெல்லாம் யோசிக்க வைத்தது.
கவிதையை எழுதிய ஷாஜி குமாருக்கும், வாசித்துக் காட்டிய நடிகர் மம்முட்டிக்கும் அதனை மொழிபெயர்த்து படிக்க வைத்து யோசிக்க வைத்த ஷைலஜாவிற்கும் நன்றிகள் பல.
மொத்தத்தில் தொகுப்பு முழுக்க பல விதமான விஷயங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷைலஜா தொடர்ந்து மொழிபெயர்ப்புடன் சிறந்த புனைகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதவேண்டுமென ஒரு நண்பனாய் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் 
பத்மநாபபுரம் அரவிந்தன்

Wednesday 14 February 2018

சுமித்ரா - வாசிப்பனுபவம்




    
சீனிவாசன் அவர்களின் அழகிய கோட்டோவியங்கள் பத்து பக்கம், எஸ் ராமகிருஷ்ணனின் ஆழமான முன்னுரை இவையெல்லாம் போக நூறு பக்கங்களே இருக்கும் ‘சுமித்ரா’ நாவலை இரண்டாவது முறையாக படிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். என்ன செய்வது , கல்பட்டா நாராயணனின் , “இத்ரமாத்திரம்” எனும் மலையாள நாவலை , சுமித்ரா என்ற பெயரில், கே வி ஷைலஜா அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் வாசிக்க வாசிக்க, ஒரு கவிதை புத்தகத்தை வாசிப்பதுபோல் இருந்தது. நூறு பக்க நாவலைப் படிக்க வேண்டுமானால் படிப்பவர்களின் வேகத் திறனைப்பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மணி ஆகும். எவ்வளவு வேகமாக படிப்பவர் என்றாலும், அதே கவிதை புத்தகமாக இருந்தால் வாரம் அல்லது மாத கணக்கு ஆகும் அல்லவா? கவிதைகளை படிக்கும்பொழுது ஒவ்வொருவரும் செய்யும் செயல்பாடுகள் ஒன்றுதானே. நிலை குத்திய பார்வையில் உள்ள ஒரு பைத்தியக்காரனாக (பிடித்துப்போய்த்தான்) இருந்தேன். படித்துவிட்டு கொஞ்சம் தொண்டையில் எச்சில் விழுங்கினேன். மேலே அண்ணாந்து பார்த்தேன். தலையைச் சொறிந்துகொண்டு எனக்குத் தெரிந்த அந்தப் பெண்களை போல் , அந்த உறவினரைப் போல், இறந்துபோன தெரிந்த ஒருவரைப்போல் என்று நினைவுகளை கொஞ்சம் பின் நோக்கி கடத்தினேன்.
ஒரு மரணம் பற்றி சொல்லிவிட்டு, அதற்கான காரணம் என்ன என்ற தேடலில் வாசகனை ஒரு துரித மனப்பான்மையில் படிக்கவைக்காமல், மரணமடைந்தவளின் சுற்றியிருப்பவர்களுடைய வாழ்வியலை முகத்தில் அடிக்கும் உண்மை நிகழ்வுகளுடன், அவர்களின் அகங்களை காட்சிப்படுத்திக் கொண்டு செல்லும் நாவல். முதல் முறை படித்து மூன்று மாதங்களாகியும், சுமித்ராவும், அவளுக்கு பிடித்த பழங்கலம் இடமும், அவளது தலைவலியும், மாதவியும், வயநாட்டு ஆண்களும் , அவர்களை பற்றி காப்பிச்செடிகள் தெரிந்து வைத்திருந்த ரகசியமும், எதிர்த்து வந்து நின்றாலும் அடையாளம் தெரியாத வாசுதேவனும், அண்ணனும் தம்பியும் சேர்ந்து வியாபாரம் மட்டும் செய்யவில்லை என சொல்லும் கீதாவும், எல்லோருக்கும் வேலை செய்யும் தாசனும் , அழுமூஞ்சி அனுசூயாவும், தனக்குமுன் ஆறு கால்கள் வட்டமிடும் சமயம் நிலைகுலைந்து நடுங்கிய தாமோதரன் சாரும், வெற்றிலை போட்டுக்கொண்டு வெண்கல செம்பு விற்கும் பொதுவாளும், குத்துக்காலிட்டு அமரும் கருப்பியும், அவள் சார்ந்த மக்களும் ஞாபகத்தில் அழியாமல் இருந்தார்கள். மனிதர்களல்லாமல், சுமித்ரா தூங்கும்பொழுது எப்படி தனது கைகளை வைத்துக்கொள்வாளோ அப்படித்தான் மரணம் நிகழ்ந்தும் படுத்திருக்கிறாள், பணிச்சிகள் மூத்திரம் அடிக்க எப்படி நிற்பார்கள், பணியன்கள் குழந்தைகளுக்கு கந்தக சாலா என்றோ, சீராக சாலா என்றோ பெயரிடவில்லை, குள்ளர்கள் வயதானவர்கள் என்று தெரிந்ததில் , குழந்தைகள் உற்சாகம் இழந்தார்கள், சித்திரை மாதங்களில்தான் அங்கு அதிக பிரசவங்கள் நடந்தன, போன்றவைகளும் படத்தின் காட்சிகளை போல மனதில் ஒன்றிவிட்டிருந்தன. ஆதலால் இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது, முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பித்தாலும், வயநாட்டில் யாரை மறந்துவிட்டோம் , எந்தக் கவித்துவத்தை திரும்பவும் அசைபோடலாம் என்று எந்த பக்கத்தை வேண்டுமானாலும் சுதந்திரமாக புரட்டி வாசித்தேன்.
இந்தமுறை புருஷோத்தமன், சுமித்ராவிடம் கொண்ட அன்பை, அவள் அவனை ஆணாக மதித்து கால்சட்டை போட்டுவிட்ட விதத்தை , நிர்மலாவில் அவன் சுமித்ராவை அடையாளம் கண்டதில் நானும் தெரிந்து உணர்ந்தேன். நீண்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்த சுமித்ராவின் மீது வெறுப்பு ஏற்பட்டு காறித்துப்ப துணிந்த மரியாவின் காரணம் மறந்துவிட்டிருந்தது. மீட்டெடுத்துக்கொண்டேன். தண்ணீரின் முதல் குளிர்ச்சியை தாங்க முடியாத அப்புவின் வீட்டில் சுமித்ரா இருந்திருக்கிறாளா, ஒரே போர்வைக்குள் தூங்கினாளா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். கௌடரின் இருமலும் , அது ஆரம்பிக்கும் நாளை சுமித்ரா வட்டமிட்டு நினைவு படுத்தி நெய்யரிசி கஞ்சி எடுத்துக்கொண்டு செல்வதையும் அறிந்து , ஒரு தோழியின் இழப்பு அவருக்கு எப்படி இருக்கும் என வருந்தினேன். சுபைதாவுக்கு யானைக்குட்டி என்ன செய்தது என்ற ரகசியம் அறிந்து, முதல் முறை வாசித்தபொழுது அவமான வலியை எப்படி இனம் காணாமல் இருந்துவிட்டேன் என்று அதிசயித்தேன். வாசுதேவனை விளக்கமாக சொல்லும் , அவர்கள் பரஸ்பரம் பார்த்ததில்லை அத்தியாயத்தில், "ஒருவேளை அப்படி ஒரு மனநிலை வாய்த்தால் பிரியத்தின் மேல்தான் அவள் மனம் சாயும்" எனும் வரிகளில் மனம் லயித்தேன். "போபனையும் மொழியையும்" படிப்பதை விட்டுவிட்டு சுமித்ரா மரம் வெட்டுபவனின் உடல் அசைவுகளை எண்ணியதை நான் மறந்திருக்கவில்லை. ஆனால் செய்யதலி, சூப்பியிடம் கோவேறு கழுதைகள் எப்படி உருவாகிறது என்று சொல்லி சிரித்ததை மறந்துவிட்டிருந்தேன்.
“ஒரு பண்பாடு முழுமையாக அழிந்தபின் அதில் ஒரு நூல் மட்டும் எஞ்சுமென்றால் அந்நூலில் இருந்து அப்பண்பாட்டை ஏறத்தாழ மீட்டுவிட முடியும் என்றால் அதுவே காவியம்” என்று ஜெயமோகன் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அப்படி பார்த்தால், செவ்வாயில் காலூன்றி வாழ நேரிடும் பிற்கால மனிதன் வயநாடு என்ற கிராமத்தையம், மனிதர்களையும், சூழலையும், பண்பாட்டையும் சுமித்ரா அல்லது இத்ரமாத்திரம் நூலை வைத்துக்கொண்டு உருவாக்கிவிட முடியும் என நினைக்கிறேன்.
வ.சௌந்தரராஜன் 
02/11/2018



Tuesday 13 February 2018

நாங்கள் விழுதுகளாய்  இருக்கிறோம்  அப்பா...







“குட்மார்னிங் ஷைலு, நான் பாலு பேசறேன்”
ஒவ்வொருமுறை என் அலைபேசியில் அவர் பெயர் வரும்போதும் நான் பதற்றமாகிவிடுவேன். இயல்பாய்ப் பேசத் தொடங்க பத்து நிமிடங்கள் ஆகும்.  எவ்வளவு பெரிய ஆளுமை அவர். எத்தனை பேருக்கு ஆதர்ஷம், கனவு, வாழ்நாள் லட்சியம், தொலைதூரத்து ஏக்கம், மட்டுமல்ல தன் மைல்கற்களைத் தானே தாண்டிய ஒரு அபூர்வம், அதன்வழி சிந்தாமலிருக்கும் பூரணத்துவம்.
“ஷைலு என்னை அப்பான்னு கூப்பிடும்மா, மற்றவங்க என்னைக் கூப்பிடறதை விட நீ  கூப்பிடனுன்னு  ஆசையாயிருக்கம்மா” என்ற அவரை அப்பா என்று என்னால் கடைசிவரை  கூப்பிட முடிந்ததில்லை. ஒரு மஹா சமுத்திரத்தை எனக்குள் மட்டும் தேக்கி வைத்திட எனக்கு தைர்யம் வந்ததேயில்லை.
“நான் கௌம்பறேன் ஷைலம்மா” என்று ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் மறக்காமல்  சொல்வீர்களே, இறுதிச் சந்திப்பில் மட்டும் என்னிடம் சொல்லிக்கவேயில்லயே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்தபோது “ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் ஷைலு, நல்லாயிருக்கேன்” என நான் நம்பும்படி சொன்னீர்களே சார்.  உள்ளுக்குள் எதை மறைத்து வைத்திருந்தீர்கள்? ஏன் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? பிறந்து சில மாதங்களிலேயே அப்பாவை இழந்த எனக்கு எதற்காக அந்த உறவின் தளிர்களைத் தரிசிக்க வைத்தீர்கள்? தலைகோதி, கைபிடித்து எதற்காக அதன் எல்லைவரை அழைத்துச் சென்றீர்கள்?
ஆனாலும் ஆனாலும் எனக்குள்  இதுவரை சேமித்து வைத்திருக்கும் நினைவுகள் போதுமெனக்கு. இந்தப் பேரிரைச்சலிலும் நான் நிறைவடைந்திருக்கிறேன்.
நான் நல்ல சினிமாவைப் பார்க்க மட்டுமே தெரிந்தவள். அதை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடத் தெரியாது. எனக்கு அன்பைப் பெறவும், பொத்திப் பாதுகாக்கவும் அதனை அடுத்த நெஞ்சுக் கூட்டிற்குள் கடத்தவும் மட்டுமே தெரியும், அதனால் மட்டுமே நான் அவருடைய மகளானேன். பார்க்கிற எல்லோரிடத்திலும், ‘இது
ஷைலு என் மக’ என நானே கூச்சப்படுமளவுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்.
தன் அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காகத் திருவண்ணாமலைக்கு வந்த அவர் தினமும் மாலையில் ‘வம்சி’  அலுவலகத்திற்கு வருவார். மிகவும் வித்தியாசமானதொரு காஸ்ட்யூமில் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டுத் தலையில் துண்டுகட்டி அதைத் தோளுக்குச் சற்று கீழே தொங்கவிட்டுக்கொண்டு வந்து உட்காருவார். சென்னையில் கூடக் கிடைக்காத உலகத் திரைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறீர்களே என ஆச்சரியப்பட்டு கை நிறைய படங்களை அள்ளி சேகரித்துக்கொள்வார். புத்தகக் கடைக்கு வரும் நண்பர்களுக்கு அவரின் இருப்பு பேரதிர்ச்சியாக இருக்கும். என்ன சாப்பிடலாமென்றால் ‘பகோடா சொல்லம்மா, காரப்பொரி சாப்பிடலாம்’ என்று கேட்டு சாப்பிடும் அவரைத் தெருவில் போவோர்களும் வருபவர்களும் அதிசயமாய் பார்த்துக்கொண்டே போவார்கள். கடைக்குள்ளே வரும் வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதை நான் பார்த்ததுண்டு. ஒரு டீ குடித்துவிட்டு நாங்கள்  மலை சுற்றும் வழியிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று கதைகளாகப் பேசிக்கொண்டிருப்போம். தமிழின் ஆகச் சிறந்த கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள்,  தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் , தன் சினிமா அனுபவங்கள்,  தான் எடுக்கப்போகும் திரைப்படங்கள் என்று சுழலும் அப்பேச்சிலிருந்து துண்டித்துக்கொள்ள எப்போதும் மனசே வந்ததில்லை.
 இரு நாட்கள் எங்களுடன் தங்க வந்திருந்த சாரும் மவுனிகாவும் ஒரு மதிய உணவிற்குப் பிறகு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அன்று மாலை அவரின்  கதைநேரக் கதைகளைத் திருவண்ணாமலை பார்வையாளர்களுக்காகக் திரையிட்டோம். மிகக் கண்டிப்பானதொரு வாத்தியாராய் மாறி படம் பார்ப்பதற்கு வைக்க வேண்டிய கலர், கான்டிராஸ்ட், ஒலி என  சொல்லித் தருகிறார். ஆப்பரேட்டருக்கு அது சரிவரப் புரியாதபோது அவரே குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதைச் சரி செய்கிறார். தன் படைப்பு மிகச் சரியான வடிவத்திலும் துல்லியத்திலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்ற, ஒரு படைப்பாளிக்கே உரிய ஆர்வம் பிரதிபலித்த நிமிடங்கள் அவை. என்னுள் பிரமிப்பாய் நிலைபெற்றதும்கூட.
அடுத்தநாளே வாய்த்த  இரண்டு மணிநேர கார் பயணம் போதும் என் வாழ்வு அர்த்தப்பட.  மாலையும் இரவுமல்லாத  மங்கும் பொழுது அது. சில நேரங்களில் நாம் நினைக்கும்போதே மழை பெய்யுமே அது போல, என்னவென்றே தெரியாமல் காலையிலிருந்தே மனம் சந்தோஷத்தில் அலையடிக்குமே அது போல, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சார் சொல்லும் ஒவ்வொரு கதையையும் நானும் படித்திருந்தேன். ஜி.நாகராஜன், தி.ஜா., சுந்தர ராமசாமி, அவருக்கும் எனக்கும் எப்போதும் பிடித்த பிரபஞ்சன் என அடித்த சுழல் லா.ச.ரா. வில் வந்து நிலைகொண்டது. லா.ச.ரா.வின் பச்சைக் கனவொளியில்  கிறங்கிய பேச்சின் நடுவே ’எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா  நான் கொஞ்சம் உன் மடியில் படுத்துக்கறேனே’ எனப் பின்னிருக்கையில் என் மடியில் படுத்து உறங்கிப்போன மவுனியை எங்கள் கதாநாயகர்களும் நாயகிகளும் தொந்தரவு செய்யவேயில்லை.
இந்த ஐந்தாறு வருடங்களில் அநேகமாய் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசுவார். தன் சினிமாப் பட்டறையில் உச்சமாக இலக்கிய வகுப்பெடுத்த பெருமிதத்தை, தன் மாணவன் மிகக் கண்டிப்பாக நவீன இலக்கியம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை, ஏதோ ஒரு மாணவன் கதைகளைப் படித்தபின் எழுதிக் கொடுத்த சினாப்சிஸில் தன்னைக் கரைத்துக் கொண்டதை, அவருக்குப் பிடித்த அவருடைய மவுனி புள்ளி குத்த முடியாத காரணங்களால் அவரிடம் பேசாமல் இருந்த துக்கத்தைப் பேசி ஆற்றிக் கொள்ள, எப்போதும் படைப்பாளியிடம் அந்தஸ்து தள்ளியே நிற்கும் மாயைக்குத் தான் இரையாகாத பேராண்மையை, இந்த வயதில் தான் தனியனாய் வாழ நேரிட்ட துயரம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் அடுத்த அழைப்பிலேயே மழைநீர் முகத்தில்பட்ட குழந்தையாய்க் குதூகலிக்கவுமான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருந்தது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லத்தான் மிகப்பொருத்தமானவன் என்றும், அவனவன் தன் வாழ்க்கையிலிருந்துதானேம்மா படம் எடுக்க முடியும், என் படங்கள் எப்போதும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாவேதான் இருக்கு என்று பேசி சிரிப்பார். நான்தான் அவரின் சோகங்களிலிருந்து வெளிவரத் தெரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
2011 சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்த என்னிடம்  வந்து  உட்கார்ந்து ’ஒரு டீ சொல்லம்மா’ என்று பேச ஆரம்பித்தார். வழக்கம்போல மானசி தாத்தாவிற்காக ப்ளாக் டீ வாங்கி வர ஓடினாள். ‘வெற்றியோட  ஆடுகளம் படம் பாத்திட்டு நேரா வரேம்மா, அய்யோ எப்படி எடுத்திருக்கான், ஜட்ஜஸ் சரியா அமஞ்சா இந்தப் படம் ஆறு அவார்டு வாங்கும், ஒரு வேளை ஜூரி அவார்டு ஜெயபாலனுக்குக் கிடைக்கும். சொந்தக்குரலில் பேசியிருந்தால் தேசிய விருதே கிடைக்கும்’ என்றார்.  அந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட  தேசிய விருதுகள் அவ்விதமேயானது. விருது அறிவிக்கப்பட்ட அன்று அவருக்கிருந்த சினிமா நுட்பமும் சரியான திரைப்படம் குறித்த தன் அவதானிப்பும் தன்  வாழ்வை சினிமாவில் மட்டுமே வைத்துக் கரைத்துக் கொண்டிருக்கும் அக்கலைஞனின் அசாத்திய நம்பிக்கையும் என்னை உறைய வைத்தது.
என்  ‘வம்சி புக்ஸ்’ சில புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது ஒரு பதிப்பாளராய்ப் பெருமிதத்தில் லேசாய் என் மனம் ததும்பிக் கொள்ளும். அதில் எப்போதும் எங்கள் பாலுமகேந்திரா சார் தான் இருப்பார். எந்த காம்ப்ரமைசும் இல்லாமல், தான் உருவாக்கிய கதைநேரக் கதைகளை மூன்று பாகங்களாகவும் தனக்கு எப்போதும் ஃப்ரெஷ்ஷாகப் பார்க்கத் தோன்றும் வீடு படத்தையும் புத்தகமாக்கி அவர் கைகளில் கொடுத்து அந்த முக சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் நான் தரிசித்துவிட்டேன். அட்டை வடிவமைப்பில் சின்னச் சின்ன திருத்தங்களைக் கூட மிக நுட்பமாகப் பார்த்து தன் திரைப்படக் கல்லூரி அலுவலகத்திற்கு டிசைனரை வரச்சொல்லி, திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி சரிபார்த்து என அவர் காட்டும் பொறுமையும் படைப்பின் மீதான அக்கறையும் நாம் அவரிடம் கற்றுக்கொண்டே ஆக வேண்டியது. வீடு திரைக்கதை புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்வது தொடர்பாக ஒரே நிமிடத்தில் முடிவெடுத்தோம். ‘ என் அம்மாவுக்குன்னு போடலாம்மா. சரிதானே ஷைலு’ என்றவர் மிக அற்புதமான கவிதையாய் ஒரு சமர்ப்பணம் எழுதி அனுப்பினார்.
மனுஷ்யபுத்திரனின் கவிதைவரி போல ‘நாளைக்கு வந்தேன்’ எனச் சொல்லும் குட்டி  இளவரசியின் மனசொத்தவர். காலம், நேரம், ஒரு தேதி வைத்து வேலைகளை முடிப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் கூப்பிடுகிறேன்.
‘சார், ஷைலஜா பேசறேன் சார்’
‘அய்யோ ஷைலு,  நம்புவியாம்மா நீ? நானே கூப்பிடணும்னு இருந்தேன். ஐ வாஸ் சேர்ச்சிங் யுவர் நெம்பர். புது நெம்பர் உன்னோடது சேவ் பண்ணியிருந்தேன். அத எனக்கு எடுக்கத் தெரியல ஷைலு. ஐம் சாரி ஷைலு. வீடு பட டிவிடியை நான் இன்னும் முன்னாடியே குடுத்திருக்கணும்மா’
‘சார் தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்ல சார், நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்க மட்டும்தான் நான் கூப்பிட்டேன்’
‘எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்கேன். ஐ ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்’
பேசி இரண்டு நாட்கள்கூட முழுமையாய்க் கடந்து போகவில்லையே. என்னவாயிற்று சார் உங்களுக்கு?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், மாலையில் எங்களுடன் மூன்று மணிநேரம் இருப்பார். கூட்டம் அதிகமாகயிருக்கும். நீங்கள் வரவேண்டாமென்றால் ‘ஆஃபீஸ்ல போரடிக்குது ஷைலம்மா, என் பேரப் பிள்ளைகளோட இருக்கேனே’ என்று ஆசைஆசையாய் வருவார். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வாசகனையும்
சினிமா தாகம் கொண்டவர்களையும் பெயர் கேட்டு  ‘வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா’ என்று எழுதித் தேதியிட்டுக் கொடுத்து நெகிழவைப்பார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளத் துடிக்கும் எந்த இளமனதையும்
அவர் உதாசீனப்படுத்தியதில்லை. இனி தான் நிறைய டெலி
 ஃபிலிம் எடுக்கப்போவதாகவும் சக்காரியாவின் கதைகள் தனக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறதென்றும் அவருடைய  ‘யாருக்குத் தெரியும்’ கதை தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றென்றும் ஜெயஸ்ரீயிடம் பேசினார். அவள் மொழிபெயர்த்த யேசுகதைகள் தொகுப்பைப் பற்றி நிறைய நேரம் அவளோடு விவாதித்தார்.
‘இன்னக்கி இங்க வர்றதுக்கு முன்ன ஒரு சின்ன நாட் மனசிலப் பட்டுதும்மா, கேளு’
என்று அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப் பற்றிய குறும்படத்திற்கான கதையைச் சொல்கிறார். பிண்ணனியில் அன்னலஷ்மி என்று யாரோ யாரையோ கூப்பிடுவதைக் கேட்டு அதிர்ந்து, பின் சிரித்துக் கொண்டே பதின் வயதில் தனக்கேற்பட்ட காதலையும், அவள் தனக்குச் சொல்லிக்கொடுத்த காமத்தையும் சொல்லி சிரிக்கிறார்.
நானும் பவாவும் சேர்ந்து நண்பர்களுக்காக ஒரு சிறு கல்வீடு கட்டினோம். அதன் திறப்புவிழாவை  எங்கள் மகன் வம்சியின் பிறந்த நாளன்று வைத்திருந்தோம். அந்தக் கல்வீட்டின் தரையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்த அவர், ‘என் அம்மா ஒரு சந்தோஷமான மனுஷி. அவள் வீடு கட்ட ஆரம்பித்ததும் தன் எல்லா சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள். அந்த வலியின் மிச்சம்தான் என் ‘வீடு’. ஆனால் என் மகள் ஷைலு இந்த வீட்டைக்கட்டித் தன் சந்தோஷங்களை இதில் நிறைத்திருக்கிறாள். இது அசாத்தியமான ஒன்று, எனக் கவிதையாய்ப் பேசிக்கொண்டே போனார். மாலையில் ஒற்றைஅறை கொண்ட எங்கள் நில கெஸ்ட் ஹவுசைத் திறந்துவைத்தபோது நாங்கள் விரும்பி அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் அபூர்வமாய் எங்களுக்கு நிலைத்துப்போனது.
சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் ஒருமுறை அவரைப் பார்த்து விடுவதும், ஒன்றாய் ஒருவேளை சாப்பிடுவதுமாய்த் திரும்பிவருவோம். என்கூட தங்க மாட்டேங்கிறீங்க என்று  அவருக்குப் பெரிய ஆதங்கமுண்டு. வேறு எந்த வேலையும் இல்லாமல் மருத்துவப் பரிசோதனைக்காக மட்டுமென்று சென்னை சென்றபோது அவரிடம் நாங்கள் அங்கு வந்து தங்குவதாகச் சொன்னோம். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். நானும் பவாவும் ஜெயஸ்ரீயும் நண்பருமாய்ப் போவதற்குள் ஒரு வகுப்பறையை ஒழித்து சுத்தம் செய்யவைத்து புதிய படுக்கை விரிப்புகள், தலையணைகளில் ஆரம்பித்து என்னென்ன தேவையோ அவ்வளவையும் செய்து மூன்றாம் நாள் திரும்பி வரும்போது பெற்ற தகப்பனைப்போல மருமகனுடன் செல்லும் மகளைக் கண்ணீர் மல்க கார் கதவை அடைத்துவிட்டு நின்ற அந்த பிரம்மாண்ட உருவம் எனக்கும் பவாவிற்கும் வாழ்நாளில் மங்கிப் போகாதது.
 இப்போது நினைவுகள் ஊற்றெடுத்துப் பொங்கிப் பொங்கி வார்த்தைகளுக்கு வழிவிடுகிறது.
திரைக்கலைஞர் மம்முட்டியின் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பெயர் வைப்பதில் யோசனையாக இருந்த நாட்களில்  ‘மூன்றாம் பிறை’ என்ற தலைப்பு ஒத்துப் போகிறது. அந்தத் தலைப்பிற்காய் நான் அவரிடம் அனுமதி கோருகிறேன். ‘ திஞுணூதூ ஞ்ணிணிஞீ ஷைலம்மா, நல்ல தலைப்பு அது, மூன்றாம் பிறையைக்  கொஞ்ச நேரம்தான் பார்க்கமுடியும். ஆனால் அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் நல்ல காரியங்கள் பலதையும் செய்வார்கள். அதயே வைய்யம்மா ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். பின்னாளில் என் வலைதளத்திற்கும் அதுவே பெயராக ஆனது.
‘பவா என்றொரு கதைசொல்லி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் படத்தை வெளியிட்டு பேசிக் கொண்டேயிருந்தார். மொத்த உரையும் மிக நெருக்கமாகக் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி எங்களைக் கூச்சத்திலும், அதீத நெகிழ்விலும் கரைய வைத்தார். பத்து முறையாவது கண்கலங்கிக் கைதொழுது நின்றிருப்பேன். பவாவிற்குப் படைப்பாளி எப்படி குடும்பத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் படைப்பாளியின் மனைவி என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றும் அதையெல்லாம்
என் மகள் ஷைலுக்கு நீங்கள் கொடுக்கக்கூடாதென்றும் தன் அனுபவத்திலிருந்து பேசித் தீர்த்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே  எஸ்.எல்.ஆர். கேமராவில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு தாத்தா பேசுவதைப் படம் எடுத்து, தான் எடுத்த படத்தைத் திருப்பிப் பார்த்த வம்சியை அவ்வளவு கூட்டத்திலும் கவனித்திருக்கிறார். பேச்சின் நடுவே ‘வம்சி நாங்களெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதை லேபில் கொண்டுபோய்க் கொடுத்து, அவன் டார்க்ரூமில் கொண்டுபோய்க் கழுவி எடுத்திட்டு வர்றவரைக்கும் பொறுமையாய்க் காத்திருந்து, பெற்ற பிள்ளையைப் பார்ப்பதுமாதிரி பார்ப்போம். புகைப்படம் எடுத்தவுடன் திருப்பிப் பாக்காதே. அப்படிப் பாத்தா நீ எடுத்த படத்துமேல உனக்கு நம்பிக்கையில்லன்னு அர்த்தம். எடுப்பதற்குமுன் இதுதான் நான் எடுக்கப்போற ஃப்ரேம்ன்னு மனசில ஃபிக்ஸ் பண்ணு’ என்று அவனுக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தார்..
வம்சியையும் மானசியையும் அப்படிப் பிடிக்கும் அவருக்கு. பிள்ளைகளை வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாலை வாக்கிங் போய்விட்டு வரும்போதே காய்கறிகள் வாங்கிவந்து, தானே ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து, தாத்தாவும் பேரப்பிள்ளைகளுமாய்ச் சாப்பிட்டு விளையாடின நாட்களை இனி நான் அவர்களுக்கு மீண்டும் தர முடியாமல் காலம் உறைய வைத்துவிட்டதே.
 நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் கேட்டார்,
 ‘வம்சி என்ன பண்ணப்போறான்மா?’
‘அவன் இப்ப சிக்ஸ்த் படிக்கிறான் சார், பரோடாவில் போய் டிசைன்ஸ் படிக்கணும்னு சொல்றான் சார்’
‘இல்லம்மா, அவன் என்னமோ எங்கிட்ட வந்திடுவான்னுதான் தோணுது’
காலம்தான் எந்தக் கருணையும் இல்லாமல் ஓடுகிறதே. இரண்டு வருடங்களுக்கு முந்திய ஒரு டிசம்பர் 31 இரவு பத்து மணியிருக்கும். குழந்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சட்டென்று வம்சி சொல்கிறான், ‘அம்மா நானொரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்’
சின்னச் சின்ன மன அசைவிலும் உடல் மொழியிலும் சிதறின துளிகளைக்கொண்டு ஒரு மனிதன் ஒரு குழந்தையை எப்படி அவதானித்திருக்கிறார் என்று நான் மீண்டுமொருமுறை ஆச்சரியப்பட்டுப் போனேன்.
நானும் ஜெயஸ்ரீயும்  அவரைப்போய்ப் பார்த்த ஒரு மதிய வேளையில், நான் மொழிபெயர்த்த  ‘சுமித்ரா’ நாவல் பற்றிப் பேச ஆரம்பித்தோம். இந்த நாவல் படமாக வந்ததையும் அது சரியாக எடுக்கப்படவில்லையென மூல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் வருத்தப்பட்டார் என்றும் சொன்னேன். மிகக் கடுமையாகக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. கதை மட்டும்தான் எழுத்தாளனுக்குச் சொந்தம், அது படமாவது ஒரு ஃபிலிம் மேக்கருக்கானது. அது அந்தக் கதையின் மறு ஜென்மம். அது பற்றி எழுத்தாளன் பேசவே கூடாது என்றார். பேச்சு அப்படியே அப்போதுதான் பல சூறாவளியில் அகப்பட்டு வந்த ‘விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி வந்தது. கமல் ஓர் அசாத்தியமான கலைஞன்,  இந்தப் படத்தில கமல் வச்ச ஒரு ஷாட்டைக் கூட என்னால வைக்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார்.
வம்சியைப் பற்றி எப்போதும் விசாரித்துக் கொண்டேயிருப்பார்.
‘ஷைலு, வம்சி இப்ப என்ன பண்றான்?”
நிறைய வேர்ல்டு கிளாசிக்ஸ் பாக்கறான் சார். அவனுக்கு போட்டோகிராபிதான் விருப்பமா இருக்கு. சாந்தினிகேதன் போய்ப் படிக்கப் போறானாம் சார்’
‘வெரி குட், ஆனா அதுக்கெதுக்கு அவன் அங்கேயெல்லாம் போணும், இன்னும் மூணு வருஷம் முடிச்சிட்டு தாத்தாகிட்ட வரச் சொல்லம்மா. அவன நான் பாத்துக்கறேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா உருவாக்கிக் காட்டறேன்.
கடைசிவரை தாத்தாவின் கை பிடித்து சினிமா மொழி கற்க என் மகனுக்கு வாய்க்காமலே போய்விட்டது.
‘ஷைலு அவங்கிட்ட ‘ சந்தியாராகம்’ படம் இருக்கா?’
‘இல்ல சார்’
‘அப்படியா’ என டேபிளுக்குக் கீழே குனிந்தவர் ஒரு டிவிடியை எடுத்துப் பொறுமையாய் ‘ என் அன்பு பெயரன் வம்சிக்கு, வாழ்த்துக்களோடு தாத்தா பாலுமகேந்திரா’ என்று தன் அழகான கையெழுத்தில் எழுதி ‘வம்சிகிட்ட கொடம்மா’ என்றார். அவர் எழுதி முடிக்கும்வரை எழுந்துநின்று, பெருகும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் நின்றிருந்தேன். எனக்குத் தெரியும் தமிழ்நாட்டில் அந்தப் படம் கிடைக்காமல் தேடியலையும் எத்தனை சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்று.
மகனே தாத்தா கை பிடித்து அழைத்துச் செல்லவில்லையென்றாலும் உனக்கான திசையையும் நீ முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அக்கினிக் குஞ்சினையும் உன்னிடம்தான் விட்டுச் சென்றிருக்கிறார். அதை இதயத்தில் ஏந்திக் கொள்.
‘ஷைலு வாம்மா, நாம படம் பாக்கலாம்’ எனக் கூட்டிப் போய், தான் இதுவரை எடுத்த ‘தலைமுறைகள்’ படத்தின் சில காட்சிகளை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறார். அதே அறையில் உட்கார்ந்து  ஒரு க்ரீன் டீ குடித்துக்கொண்டே பெயரிடப்படாத அக்கதையை முழுமையாகக் கேட்ட நியாபகங்கள் நெஞ்சில் மூள்கிறது. படத்தில் சுப்புத்தாத்தாவாய் மெல்ல மெல்ல நடந்து, கண்களின் ஓரம் ஈரம் காட்டி உட்கார்ந்திருக்கும் சாரைப் பார்த்து, கால் தடுக்கி விழும் தாத்தாவைப் பார்த்துப் பதறி விழுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாய் அவை மாறிப் போகும் உன்மத்தத்தில் பல காட்சிகள் தெரியாமல் கண்ணில் நீர் முட்டுகிறது. எழுந்து வெளியே வருகிறோம். சினிமாப் பட்டறையில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறார்கள். அதை உடனே உணர்ந்தவர், ’இவங்க பேரு ஷைலு, பெஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர். என்னோட படத்துக்கு மியூசிக் கூட போடாத கட்டத்தில நான் இதுவரைக்கும் யாருக்கும் போட்டுக் காண்பிச்சதில்ல, சினிமால இருக்கற எந்தக் கொம்பனுக்கும் நான் காட்டமாட்டேன். ஆனா நான் ஷைலுக்குக் காட்டுவேன், பிக்காஸ் ஷீ ஈஸ் மை டாட்டர்’ என்கிறார்.
‘ஷைலு’ எனப் பிரியம் ஊறின வார்த்தைகளில் என்னை அழைக்க இனி யார் இருக்கிறார்கள்? மெல்ல என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வரும் கால்கள் எங்கே?
கண்ணாடிப் பெட்டிக்குள் என்னைப் பார்த்துப் பேசாமல் படுத்திருக்கும் அவரைப் பார்த்த துக்கத்தில் அருகில் நின்ற ‘சுகா’வின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெடித்து அழுகிறேன்.  சுகாவும் என்னுடன் சேர்ந்து  பதில் தெரியாது உடைந்து அழுகிறார்.
ஆனால் அப்பா, என் அன்பான அப்பா, ‘ஷைலு நான் என் கடைசிகாலத்தில் திருவண்ணாமலையில்தான் இருக்கப் போகிறேன். நீயும் பவாவும்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சொன்னதை ஒரு மகளாக  நான் நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் மகனிடமும் அகிலா அம்மாவிடமும்  வேண்டி உங்கள் இன்னொரு மகன் பாலாவிடம் பெற்ற அஸ்தியைக் கையில் ஏந்தியபடி மனசும் உடம்பும் பதறப்பதற நிற்கிறோம். நானும் பவாவும் சிறிது சிறிதாய்ச் செப்பனிட்டு பிள்ளைகளுக்காகவும் நண்பர்களுக்காகவும் உருவாக்கியிருக்கும் எங்கள் நிலத்தில் அதை விதைத்து, எங்களோடு நீங்கள் கலந்திருக்குமாறு செய்திருக்கிறோம்.
கொழும்பில் மட்டக்களம்பு மாகாணத்தில் அமிர்தகழி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த அந்தக் கால்களும், திரும்பி சொந்த மண்ணிற்குப் போகவே முடியாமல் போனதற்காய் கடைசி நிமிடம்வரை அழுது தீர்த்த கண்களுமாய்  என் ஆசான் நாடற்றவனாக மின்சார மயானம் நோக்கிப் போகிறார் என்று சோமீதரன் கதறினான்.
உங்களை இதயத்தில் ஏந்திக்கொண்ட பல ஆயிரம் பிள்ளைகளாய்  நாங்கள் இருக்கிறோம்.  எப்போதும் நீங்கள் சொல்வதுபோல இந்தப் பிரபஞ்ச சக்தி எங்களை உங்களிடமே எப்போதும் தக்க வைத்திருக்கும்.  

Monday 5 February 2018

பெருநிலத்தின் ஒற்றை விருட்சம் பாக்யலஷ்மி

ஒரு சுயசரிதையைப் படிப்பதால் நமக்கு என்ன நேரும். அதில் ஒருவகைப்புனைவும் இருக்காதே என்ற பல கேள்விகளுடன் தான் ஸ்வரபேதங்கள் என மலையாளத்தில் பாக்யலட்சுமி என்கிற டப்பிங் கலைஞர் எழுதி தமிழில் கே. வி. ஷைலஜா அவர்கள் மொழிபெயர்த்த நூலினை எடுத்தேன்.
சுயசரிதையில் காந்தியடிகளின் சத்தியசோதனையும்,உ.வே.சாவின் என்சரித்திரம் வாசித்திருந்தாலும்,இரண்டு பெரிய ஆளுமைகளும் தனக்கென பாதை வகுத்து அதில் பயணிக்கையில் ஏற்படும் சோதனகளை அறிந்து இந்த சமூகத்தின் கொடையாக தான் வாழ ஆசைப்பட்டடு பயணித்தவர்கள்.சில கலைஞர்களின் சுய சரிதையினையும் வாசித்திருக்கிறேன்.அவர்கள் அந்தக் கலைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அதனால் ஏற்படும் உயரங்களையும், வீழ்ச்சிகளையும் தெரிந்தே பயணப்பட்டவர்கள்.ஆனால் பாக்யலட்சுமியின் வாழ்க்கை இலட்சியத்திற்காகவோ,கலைக்காகவோ ஒப்புக்கொடுக்க பயணப்பட்ட வாழ்க்கை அல்ல.டப்பிங் தியேட்டருக்குள் அதைப்பற்றி எவ்வித மனத்தயாரிப்புமின்றி வாழ்க்கை அவளை பெரும் காற்றினில் தூக்கிவீசப்பட்ட ஒரு இலையைப் போலத்தான் ஸ்டுடியோவிற்குள் வீழ்கிறாள்.
பிறந்து தாயின் கைபிடித்து நடக்கத் துவங்கிய கணத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் துயரமும்,தனிமையுமே வழிகாட்டுகிறது.தனிமை ஒன்றே அவருக்கு துணையாக வருகிறது.ஒவ்வொரு அன்பிலும் ஏமாற்றமும்,பரிகசிப்பும்,சுரண்டலுமே அவளுக்கான பரிசாக உலகம் தருகிறது.பதிலுக்கு அனைவருக்கும்,அன்பையும்,மெளனத்தையும் அளித்படி ஒரு துறவியென கடந்து செல்கிறார்.தன்மீது அன்பு கொண்ட சிலரையும் வாழ்வு பறித்துக் கொள்கிறது.புரிந்து கொள்ளப்படாத தன் பணத்தின் மீது மட்டுமே வெறி கொண்ட ஒரு தாம்பத்யம்,அதற்காகவே பெற்ற தாயிடமிருந்து பிரித்து டப்பிங் தியேட்டருக்குள் இழுத்து தள்ளிவிட்ட பெரியம்மா,
முன் எச்சரிக்கையுன் வரும் காதல்,என வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவள்மீது துயரமும்,தனிமையும் கொண்ட நதி யின் கரையினில் அமர வைக்கிறது. இன்னும் சில மணித்துளிகளில் பிரசவிக்க நேரிடும் என்கிற நொடியிலும் பிறருக்காக குரல். கொடுக்க ஓடும் அவலம்.ஆனால் அவளுக்கென்று குரல் கொடுக்க யாரும் இல்லாத உலகம்.கேரளத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் அவள் குரல் சிரிக்கிறது,அழுகிறது.ஆனால் அவளின் அவளுக்காக நிஜவாழ்வின் அனைத்தும் ஊமைகளாகவே இருக்கிறார்கள்.அனைத்தும் இருந்தும் பெருநிலத்தின் ஒற்றை. விருட்சமென தனித்தே அனைத்து திசைகளிலிருந்து வரும் துரோக ஊழிக்காற்றினையும்,எப்போதோ சில நண்பர்கள் தான்.
பெற்ற இரு குழந்தைகள் இருக்கும் திசையிலிருந்து வரும் தென்றலையும் தழுவியபடி அவ்விருட்சத்தின் கிளைகள் காற்றில் விரித்து அலைந்தபடி இருக்கிறது.ஒவ்வொரு பெண்ணும் இல்லை துரோகத்தை நம் மீது எந்த நிமிடமும் வீசத் தயாரக இருக்கும் இப் பூவுலகில் பிறக்க நேர்ந்திட்ட அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழ்க்கை பாக்யலட்சுமியினுடையது.
கே.வி.ஷைலஜா மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார்.பாக்யலட்சுமியுடன் இலகுவாக நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சாமிநாதன், 
திருவண்ணாமலை

Sunday 4 February 2018

”சிதம்பர நினைவுகள்” – புத்தக அனுபவம்!

            பொதுவாகவே வம்சியின் புத்தகங்கள் என்னை வசீகரிக்கும் – நல்ல வாசிப்பானுபவம், எழுத்தாளர்கள், வடிவமைப்பு, எழுத்துரு என எல்லா வகையிலும்! ஜெயமோகனின் ‘அறம்’. பாரதி மணியின் ‘புள்ளிகள். கோடுகள், கோலங்கள்’ போன்ற புத்தகங்கள் இதில் அடக்கம்!
டிசம்பர் 2003 லிருந்து டிசம்பர் 2016 வரை ஒன்பது பதிப்புகள் கண்ட ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகத்தை, இந்த வருடம்தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன் – பெயரும், முதல் கட்டுரையும் சொந்த ஊரின் நினைவுகளாக இருக்கின்றனவே என்றுதான் வாங்கினேன் – மற்றபடி, புத்தகத்தைப் பற்றி வேறெதுவும் நான் அறிந்திருக்கவில்லை! கவிஞர் பாலசந்திரனின் கட்டுரை ஒவ்வொன்றிலும் அவரது வாழ்வானுபவம் வாசகனின் மனதைக் கரைக்கிறது – மொழிபெயர்ப்பென்றே தெரியாத அளவுக்கு உணர்வுகளைக் கடத்தும் ஷைலஜா அவர்களின் நடை பிரமிக்க வைக்கிறது!
“ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று.
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்திவைத்துக் காத்திருக்கும்.
எப்போதும்.”
முகவுரையில் உள்ள பாலசந்திரனின் இவ்வரிகள் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்பட்டு, நம்மை வியப்பிலாழ்த்துகிறது!
எல்லோர் வாழ்விலும் அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிலருக்கே அவற்றை எழுத்தில் வடிக்க வாய்க்கிறது. அதிலும் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த உரைநடைக்கு ஒரு கலை நயத்தோடு கூடிய இலக்கியத் தரம் கிடைத்துவிடுகிறது. அப்படித்தான் சுள்ளிக்காடு பாலசந்திரனின் இருபது கட்டுரைகளும் வாழ்க்கையை உள்ளபடி, அதன் ஏற்ற இறக்கங்களுடன், அன்பு, இரக்கம், கோபம், வெறுப்பு, காதல், ஈர்ப்பு என எல்லாவற்றுடனும் ஒளிவு மறைவின்றி படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறபோது, படைப்பாளிகள் மறைந்து, நாமும் ஒரு பார்வையாளனின் நிலையை அடைந்து விடுகிறோம்!
பாலசந்திரன் வித்தியாசமான மனிதர் – வாழ்க்கையுடன் உண்டான போராட்டங்களில், சமரசத்துக்கே இடம் தராமல், பல தழும்புகளுடன் வெற்றி பெரும் போராளி! ஏற்றங்களை விட சறுக்கல்களில் அதிக அனுபவம் பெறுபவர் – சிறிதும் தயக்கமின்றி அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், மூன்றாம் மனிதனாக எட்டி நின்று நம்முடன் வேடிக்கை பார்ப்பவர். சமூகத்தின் மீதான கோபம், ஏழ்மையின் வலி, காதலின் சுவையும், கசப்பும், மனித மன விகாரங்கள், விஸ்வரூபங்கள், மனித நேயம் அனைத்தையும் உள்ளபடி, எந்தவித மறைப்புகளும் இன்றி எளிதாக எழுதிச் செல்கின்றார். வாசகனால் அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாதவை அந்த அனுபவங்களின் ஆழமான பதிவுகள். உண்மைதானா அல்லது புனைவா? என்ற சந்தேகம் எழும்போதெல்லாம், அந்த அனுபவங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் அந்தக் கேள்வியையே அர்த்தமற்றதாக்கி விடுகின்றன!
சிதம்பரம் கோயில் பின்னணியில், வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் கதையில் தன்னம்பிக்கை ஆனந்த நடமாடுகிறது. அப்பாவின் அஸ்தியுடன் நதியில் நாமும் கரைந்தோடுகிறோம். தீயில் கருகிய காதல், திருப்பித் தரும் முத்தத்தில் நிறைவு பெறுகிறது.
அம்மாவை நினைத்து, “அவமதிப்பவனாக……. பாசமற்றவனாக…….நன்றி இல்லாதவனாக…….குற்ற உணர்ச்சியில் எனக்கு மூச்சு முட்டியது” என்கிறார்.
“பசிதான் பரம சத்தியம். பைத்தியம்கூடப் பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.”
முதல் கர்ப்பத்தைக் கலைத்துவிட நேரும்போது அவர் படும் வேதனை
“உலகின் முடிவுவரை பிறக்காமல் போக இருக்கும் என் மகனே,
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத் தவிர –
ஆனாலும் மன்னித்துவிடு என் மகனே.”
மார்த்தா அம்மாவின் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட காரணம், சிவாஜியுடன் சந்திப்பு, ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் வாங்கிய அறை, அமைதியாக இரவு முழுதும் கடற்கரையில் தங்கிய சாந்தம்மா, விஷக்கன்னி லைலாவின் தற்கொலை, ஸ்ரீவத்சனின் கவிதையும், தரித்திரமும், தான் மோகித்த ராதிகா, தற்கொலை செய்துகொள்ளும் மனநோயாளி – இப்படி அவரது அனுபவங்கள் நம்மைப் புரட்டிப் போடுகின்றன!
தேங்காய் எண்ணை வாசத்துடன் வக்கணையாகச் செய்யும் அவியல் குறிப்பும் உண்டு!
படிக்க வேண்டிய நல்லதொரு மொழிபெயர்ப்புப் புத்தகம் – வாழ்வியல் கட்டுரைகள் - வாழும் வரை நினைவில் வாசம் செய்யும் அனுபவப் பதிவுகள்!
அன்புடன்,

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.