Tuesday 26 June 2018

தென்னிந்தியச் சிறுகதைகள் (வாசிப்பனுபவம்)



ஒரு மாங்கனி வேண்டும் என்று ஒரு கல்லை மாமரத்தில் எறிந்தேன். அது என்னுடைய மிகச் சிறந்த குறியாக அமைந்து , ஒரு பழத்திற்கு பதில் , வெவ்வேறு கிளைகளில் இருந்து பழங்கள் பல உதிரக் கண்டேன். அவைகள் மல்கோவா , செந்தூரா, பங்கனப்பள்ளி, ருமானி, கருத்த கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, செம்பட்டான், தேமா, புளிமா என்று பல வகைகளில் கிடைக்கப்பெற்று சுவைத்து மகிழ்ந்தேன். வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள , 'தென்னிந்தியச் சிறுகதைகள்' என்ற புத்தகத்தை முந்நூறு ரூபாய்க்கு வாங்கிப் படித்தது அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான். 28 தென்னிந்திய எழுத்தாளர்கள் தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெவ்வேறு தொனியில் எழுதிய , படிப்பவனை பரவசப்படுத்தும் சிந்திக்கவைக்கும் கதைகளின் சிறந்ததொரு தொகுப்பு. தமிழ் அல்லாத மற்ற தென்னக மொழியில் வந்த கதைகளை, பன்மொழி அறிந்த மொழிபெயர்ப்பாளர்களை வைத்து தக்கபடி மொழிபெயர்த்து, கே. வி. ஷைலஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருக்கும் பாராட்டத்தக்க சிறந்ததொரு செயல்பாடு.
சில கதைகளை, நான் திரும்ப திரும்ப படித்தேன். என்னிடம் கதை பற்றி கதைக்கும் நண்பர்களிடம் சில கதைகளை சிலாகித்து பேசினேன். வாய்ப்பு கிடைத்ததில் , இருபத்தெட்டு எழுத்தாளர்களில் ஒருவரை நேரில் சந்தித்து , “அம்மா, உங்களை சந்தித்ததில் அகம் மகிழ்கிறேன்” என்று சொன்னேன். ஒரே ஒரு முறை படித்தாலும், கதையின் சாராம்சமோ , பாத்திரமோ , மனதில் அழியாத சித்திரமாக நின்றுவிட்ட கதைகளும் உண்டு.
தொகுப்பில் இருக்கும் தமிழ் கதைகளில் , ஜே பி சாணக்யாவின் , "படித்துறை ஆண்கள்", தமிழில் நான் படித்த கதைகளில் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று என என்னை சொல்ல வைக்கிறது. ஒரு வேளை, அந்த விஷயத்தை , கதை சொல்லி கையாண்ட விதமாக இருக்கலாம். அன்னம்மாள் ஆண்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் கணக்குகளும், அவள் மகள் லலிதா தெரிந்து வைத்திருக்கும் கணக்குகளும் சரிதான். அதை அவர்கள் எடுத்தாலும் விதத்தில் உள்ள இரண்டு பரிமாணங்கள் , கதை முடிந்தும் வாசகனுக்கு தொடரும் கேள்விகளையும், வலியையும் விட்டுச்செல்கிறது. இது திரும்ப திரும்ப படித்த மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட கதைகளில் ஒன்று.
“உண்ணியைப் போன்றவனின் சாயலில் ஒருவனைப் பார்த்ததும், வேகமாக வந்து கொண்டிருக்கும் ரயிலில் பறந்துபோய் விழுந்து உடல் சிதறியதை போல உயிர் கலங்கி நின்றேன்”, என்று காதலின் வலி சொல்லும், சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" , நல்லதொரு காதல் கவிதை. இன்று காலை, நண்பன் லிவியுடன் பேசும்பொழுதுகூட இந்தக் கதையை எடுத்துச் சொன்னேன்.
ஒரே ஒரு முறை படித்தாலும், மனசுக்குள் சித்திரத்தை விட்டுச் சென்ற, தொகுப்பிலுள்ள மற்ற தமிழ் கதைகள். காசிரிக்கா நற்றினால் கட்டப்பட்டு தண்டிக்கப்படவிருக்கும் திருடன் தப்பிக்க, ஈரம் தர வந்தது ஒரு காட்டு மழை என, பவா செல்லத்துரை சொல்லும் கதை, "சத்ரு". பெண் பெற்றவர்கள் தனது மகளை கொடுக்கவும், கல்யாண வயதில் உள்ள பெண்கள், தனது கணவனாக்கி கொள்ளவும், என எல்லோருக்கும் பிடித்த கிறிஸ்டோபர் வரும் கதை , எஸ் செந்தில்குமாரின் - "மறையும் முகம்". தாது வருஷ பஞ்சத்தின் போது, ரகசியங்கள் நிறைந்த பட்டியாக இருந்த ஒரு விவசாயியின் இடம் , வளரும் நகரின் பூங்காவாக ஆகிய காலத்தின் கதை சொல்லும் காலபைரவன் எழுதிய “பட்டித் தெரு”. ஊரில் மழை பெய்ய வேண்டி முனி அப்புச்சி கோயில் சாட்ட, மாரியாண்டி முனி வேஷம் போட்டு கோழி குஞ்சின் குரல் வளையம் கடித்து ரத்தம் குடிக்கிறான். எல்லாம் முடிந்து , வேஷம் கலைந்து மாயாண்டியின் குழந்தை, அவனை இன்னும் முனியாகவே பார்க்கிறது என முடியும் , என் ஸ்ரீராம் எழுதிய முனி விரட்டு கதை. மனோஜ் எழுதியிருக்கும், “அட்சர ஆழி” கதையில் எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆழத்துடன் சொல்லியிருப்பதை அறிந்து சபாஷ் போட வைக்கிறது.
மலையாளம் என்றால் கதைகள் நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் நிலை நிறுத்துகின்றன. நண்பன் வாங்கிய கடனுக்கு சாட்சி கையெழுத்துப் போட்ட காரணத்திற்காக , ஓடிப்போன அவனைப் பிடிக்க முடியாமல், வங்கிக்காரன், இவனை வந்து கேட்க , குண்டூர் வாசகன், சுதந்திர தினத்தன்று குடும்பத்துடன் தற்கொலை செய்கிறோம் என்று வீட்டின் முன் அறிவுப்பு பலகை வைக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய 'கொமாலா'. ஊரில் இருக்கும் சட்ட நிபுணர், மன நல மருத்துவர் , சமூக ஆர்வலர் என கூட்டி வைத்து, அப்படி தற்கொலை செய்வது சரியா என கேள்வி கேட்டு ஆராயும் தொலை காட்சி நிகழ்வு, அவர்கள் சொல்லும் வியாக்கியானங்கள், இடையில் வரும் விளம்பரங்கள் என கதை மிகவும் சுவாரஷ்யமாகவும் நகைச்சுவையாகவும் செல்கிறது. " கடன் தலைக்கு மேல ஏறி வாழ வழியில்லாத உங்களுக்கு கள்ளு வாங்கித்தர நிறையப்பேர் இருப்பாங்க, ஆனா ஒரு கிலோ அரிசி வாங்க பணம் கேட்டா ஒருத்தனும் திரும்பி பார்க்கமாட்டான் " என தொலை காட்சி நிகழ்ச்சியில் கருத்து சொல்லும் விசுவன், ஆத்மாக்கள் நிறைந்த 'கொமாலோ' கிராமத்தை பற்றி தெரிந்துகொள்ள, 'பெட்ரோ பராமோ' எழுதிய மெக்ஸிகன் நாவலை படிக்கிறான். தன் வாழ்க்கையும் கொமாலோவைப் போல வறண்டுபோனதுதான் என புரிந்துகொள்ளும் அவன் , ஒரு மரணத்தை நேரில் பார்க்க நேரிடுகிறது. அதற்குப் பின் அவனது தற்கொலை பற்றிய எண்ணம் மாறுகிறது. இன்றைய வாழ்க்கை நிலையையும், மனிதர்களையும் பற்றிய ஒரு புரிதலை கொடுக்க , தொகுப்பில் இருக்கும் இந்த ஒரு கதை போதும்.
அசோகன் செருவில் எழுதியுள்ள "பலவிதமான வீடுகள்" கதையில், இருந்த நகையெல்லாம் விற்று, கிடைக்கின்ற கடன்களையெல்லாம் பெற்று, ஏற்கனவே அறுபது வீடுகள் உள்ள அந்த குடித்தனத்தில் அறுபத்தோராவது வீடு கட்டி இரு குழந்தைகளுடன் ஒரு தம்பதியினர் குடி வருகின்றனர். கிரகப் பிரவேசம் முடிந்த காலையில், பாதிரியார் அவர்களது புது வீட்டில் அழையா விருந்தாளியாக நுழைந்து , “ இறந்தால் கல்லறை கட்டி நல்ல முறையில் அடக்கம் செய்ய இப்பொழுதே தவணை முறையில் பணம் கட்டும் ஒரு திட்டத்தில் சேருங்கள்”, என்று விண்ணப்பம் ஒன்றை வைக்கிறார்.
நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆன பெண்கள் ஒன்று சேர்ந்து சுற்றலா செல்லும் பெண்களின் நகைச்சுவை கலந்த, காயங்கள் கொண்ட உரையாடலால் நிறைக்கப்பட்ட கதை, உண்ணி எழுதியுள்ள , கே. வி. ஷைலஜாவால் மொழி பெயர்க்கப்பட்ட "ஆனந்த மார்க்கம்" கதை. உதாரணத்திற்கு ஒன்று. "என்னோட சொத்து விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும்னு நெனப்பு. தெரியும். மற்றதெல்லாம் தெரியும். ஆனா இது மட்டும் தெரியாது" உஷா தேவி சுடிதாரின் பேண்ட்டை கீழே இறக்கி காண்பித்தாள். பத்து பவுனில் தங்க அரைஞானம் அவள் இடுப்பில் மின்னியது.
ஈ. சந்தோஷ் குமார் மலையாளத்தில் எழுதி ,கே வி ஜெயஸ்ரீயால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கதை, "மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த கதை". கண்ணால் பார்த்து அறிந்ததை, பார்வை அற்றவர்களுக்கு எப்படி விளக்குவது என்பதை சிறிதே அங்கதம் கலந்த தொனியில், நுணுக்கத்துடன் சொல்லப்பட்டுள்ள கதை. உதாரணத்திற்கு, யானை கருப்பாக இருக்கும் என்று பார்வையற்றவனிடம் சொல்ல முடியுமா? ஒரு முறை கூட , பார்வையற்றவர்களிடம் பேசி அறியாதவர்கள், இந்தக் கதை படித்தால் , ஒரு புதுவிதமான புரிதலை அடைவார்கள். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) , மெய்நிகர் உண்மை(virtual reality) பற்றி பேசும் நாம், இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்று நண்பர்கள் சிலரிடம் சொன்னேன்.
குடும்பத்தின் பெருமை காக்க, பெண்கள்தான் எல்லா தியாகங்களும் செய்ய வேண்டும். வீட்டுக்குள் ஒரு கட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும். இல்லை அப்படியெல்லாம் இல்லை, மருமகளே , கணவனை இழந்து நிற்கும் இவளையும் , அவனுக்கு முன்னால் மனைவியாக இருந்த உன்னுடன் அழைத்து செல், என சொல்லும் ஒரு ஆணை (மாமனாரை) அறிமுகப்படுத்தும் கதை - அத்தலூரி விஜயலட்சுமி தெலுங்கில் எழுதி, இளம் பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள , "தொடர் ஓட்டம்". (கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் , இவரைத்தான் (அத்தலூரி விஜயலட்சுமி) ஆஸ்டின் நகருக்கு அவர் உறவினர் வீட்டிற்கு வந்தபொழுது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன்).
கிராமத்து மிராசுதாரின் இச்சைக்கு உடன்பட மறுத்து, கிராமத்து குடிசை வாழ்க்கையை விட்டு , நகரம் வந்து , தெருவில் தூங்கி , கூலி வேலை செய்து வாழ்க்கையை பழகிக் கொள்ளும் தம்பதிகளின் கதையைச் சொல்கிறது - வி ராஜாராம் மோகன்ராவ் எழுதியுள்ள பழகிப் போகும் வாழ்க்கை.
தெலுங்கு கதைகளில், என் புருவங்களை உயர்த்த செய்த கதை , எல் ஆர் இந்திரா எழுதியுள்ள "பலாத்காரம்". ஆட்டோக்காரனால், 'ரேப்' செய்யப்பட்ட பெண் , அவளை பலாத்காரம் செய்தது, அவள் சந்தித்த எல்லா ஆண்களும் என்கிறார். அவர் சொல்லும் பலாத்காரம் ,பெண் என்பதால் , நல்ல படிப்பு படிக்க வேண்டியதில்லை எனச் சொல்லும் ஒரு தகப்பனின் பலாத்காரம். படிப்பும், வேலையும் இருந்தாலும் தனக்கென்று ஒரு மரியாதையை தராத கணவனின் பலாத்காரம். 'ரேப்' விஷயத்தில் தப்பிக்க ஒவ்வொரு நிபுணரும் சொல்லும் முறைகளை இந்த கதை விவாதித்திருப்பது , பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்களும், இல்லை, எல்லா பெண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நல்லுள்ளம் படைத்தவர்களும் படிக்கவேண்டிய கதை.
இந்த தொகுப்பில் இருக்கும் ஏழு கன்னடக் கதைகளும், சிறுவர்களின் பார்வையில் பெரியவர்களைப் பற்றிச் சொல்லும் அற்புத கதைகள். அமானுஸ்ய கதைகளின் தொனியில் , மோஹள்ளி கணேஷ் எழுதியுள்ள , செம்மானின் கங்கை, மனிதனின் பேராசையையும், அதனால் வரும் அழிவையும் அழுகுற சொல்லும் கதை. சித்தப்பா தனது வீட்டுக்கு கூட்டி வரும் பெண் பற்றிய தந்தையின் உரையாடலும், சினிமா பார்க்கச் சென்ற இடத்தில் சித்தப்பாவும் , அந்த பெண்ணும் நடந்து கொண்ட விதமும், எஸ். பி. ஜோ. குரு எழுதியுள்ள வைப்பாட்டி கதையில், கதை சொல்லும் குழந்தைக்கு வினோதமாக இருக்கிறது. நடுங்கும் குளிரில் அதிகாலையில் எழுந்து, "சம்பள நாள்" என்று குஷியுடன் வேலைக்கு செல்லும் சிறுவன் , சாராயம் குடிக்க , அவனது தந்தை ஏற்கனவே முன்பணம் வாங்கிவிட , மாலையில் வீட்டுக்கு போகும் எண்ணம் இல்லாமல் குத்துக்கல்லாக நிற்கிறான் (எழுதியவர் - நாயகபாட). தந்தை சொன்னார் என்பதற்காக, தான் திருடியதாக சொல்லப்பட்ட கேப் தொப்பியை திருப்பித்தர, பத்ம நாப பட் ஷேவ்கர் எழுதிய கதையில், மழையில் செல்லும் சிறுவனுக்கு, அந்த அத்தையும், மாமாவும் நல்லவர்கள் இல்லை என்பது தெரிந்தே இருக்கிறது. கதை சொல்லும் சக்கக்கா அவனுக்கென்று இன்னொரு கதை சொல்லுவாள் என காத்திருக்கும் சிறுவன் வரும் கதை – சந்தீப் நாயக் எழுதியுள்ள “இன்னும் ஒரு கதை”. பெரியவர்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்கும் அவனுக்கு , ராஜகுமாரன் என்று அவனை சொல்லும் அந்த அக்காவிற்கு மறுமணம் நடந்தது என்று அவன் அம்மா சொல்லவே இல்லை. அவனுக்கும் கேட்கும் தைரியம் இல்லை.
மகுடத்தில் வைரம் சூட்டியதுபோல் இன்னொரு விஷயமும் இந்தத் தொகுப்பிற்கு உண்டு. கதைகளின் சக்கரவர்த்தி பிரபஞ்சன், சிறுகதைகள் வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதியிருக்கும் முன்னுரை. அதற்கே இந்த தொகுப்பிற்கு முந்நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டும்.
நன்றி
- வ.சௌந்தரராஜன் (காற்றின்நிழல்©)
06/25/2018