Wednesday 15 March 2017

புதிய தலைமுறை “பெண்” இதழில்

புதிய தலைமுறை “பெண்” இதழில் ஒரு அவசர நேர்காணல். தலைப்பு மட்டும் நான் கொடுக்கவில்லை. மற்ற எதுவும் மாறாமல் அப்படியே கொண்டு வந்த ஸ்நேகிதி இவள் பாரதிக்கு நன்றி.




Tuesday 7 March 2017

மெகா ஸ்டார் மம்முட்டியின் எளிய மொழிபெயர்ப்பாளராக





“ஷைலஜா பொங்கல் வாழ்த்துகள். எனக்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க உங்க ஊர்லயிருந்து?” கை கூப்பியபடி வாழ்த்து சொன்ன மெகா ஸ்டார் மம்முட்டியிடம் என்ன சொல்ல?

“கொண்டு வந்திருக்கேன் சார், எங்கள் நிலத்து அரிசி, பருப்பு, உளுந்து, மல்லாட்டை, பாசிப் பருப்பு, அவல், கேழ்வரகு, கம்பு என இயற்கையாய் விளைவித்த பொருட்களைக் கொண்டுவந்திருக்கேன் சார்” என்றேன்.

இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பிற்காய் திருவண்ணாமலைக்கு வந்த திரைக்கலைஞர் மம்முட்டியோடு குடும்ப ரீதியான நட்பு எங்களுக்கு உண்டு. முதலில் அவர் வந்தபோது ஒரு சினிமா நடிகரென்ற அளவில் மட்டுமே அவரை அணுக முடிந்தது. ஆனால் பத்து நாட்களிலேயே அவர் வெறும் நடிகரல்ல என்பது புரிய ஆரம்பித்தபோது நாங்கள் இன்னும் அவரோடு அணுக்கமாயிருந்தோம்.

என்னுடைய முதல் புத்தகமான ‘சிதம்பர நினைவுகளுக்கு’ சென்னையில் நடத்திய அறிமுக விழாவிற்கு எந்த ஆடம்பரமும் இல்லாமல் வந்து பேசிப் போகும்போது,   ‘ஷைலஜா, பாலசந்திரன் என்னோட ஜூனியர். நாங்க ரெண்டு பேரும் மகாராஜாஸ் காலேஜ் ஸ்டூண்ட்ஸ், அது போகட்டும் என்னோட புத்தகத்தை ஷைலஜா மொழிமாற்றம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.
 அவருடைய வாழ்வனுபவங்களான  ‘காழ்ச்சப்பாடு’ என்ற புத்தகத்தைத் தேடிக் கிடைக்காமல் (பதிப்பிக்கும் மொத்தப் பிரதிகளும் கேரளவில் விற்றுத் தீர்ந்து போகிறது) ஒரு வருடம் காத்திருந்து எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தை “மூன்றாம் பிறை” (வாழ்வனுபவங்கள்) என்ற பெயரில் மொழிபெயர்த்தேன்.
சின்னச் சின்ன சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்ட அந்தப் புத்தகம் என் வாழ்வில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

எது நிம்மதியென்றும் சந்தோஷமென்றும் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் நம்மிடம் சில செய்திகளைச் சொல்லிவிட்டுப் போகிறார் மம்முட்டி.  “நம் முன்னே தங்கச் சுரங்கமே இருந்தாலும் நமக்கு வேண்டியதை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளும் மனசு தங்கத்தைவிட வசீகரமானது” இந்த மனசு நிஜமாகவே வசீகரமானதுதான்.

முதியோர் இல்லங்களைப் பற்றிச் சொல்லிச்செல்லும் அவர், “மிகவும் பாசமாக வளர்த்த நம் தலைமுறையையே பிள்ளைகள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடும்போது எந்த ஒட்டும் ஈரப் பிசுபிசுப்புமின்றி வளர்ந்த பிள்ளைகளுக்கு இதைவிட வசதியான முதியோர் இல்லங்கள் காத்திருக்கிறதென்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

இது சில வரிகள் மட்டுமே. சின்னச் சின்ன மின்னல்கள் அந்தப் புத்தகம் நிறைய ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன.

அவரின் வாழ்வனுபவங்களை மொழிபெயர்த்தபோது “ என்னங்க ஒரு நடிகரின் வாழ்க்கையையா?” என்று கேட்ட நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களிடமெல்லாம் முதலில் அவர் ஒரு இலக்கியவாதி, பிறகுதான் நடிகர் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது வேறொரு பரிணாமமாய் அவருடைய அறிவின் நுட்பம் நாம் காணும் பல நடிகர்களிடம் காணத்தவறுவதாய் இருக்கிறது. கலை, இலக்கியம், சினிமா, தொழில்நுட்பம்,வாழ்வு குறித்த புரிதல் என அவர் காட்டிய விசாலம் பிரமிப்புக்குள்ளாக்கியது. எதைப் பற்றியும் நாம் அவரிடம் பேசலாம், கேட்கலாம். இப்படியொரு அறிவு தீட்சண்யத்தோடு மற்ற நடிகர்கள் இருக்க வேண்டுமென நாம் ஆசைப்படுவதைவிட நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்ற  போதாமை வெளிப்பட்ட நிமிடங்கள் அவை.

  நடிகராய் அறிமுகமாகிப் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் நண்பராய் மாறி,  புத்தக மொழிபெயர்ப்பில் இறுகி மகள் சுருமி, மகன் துல்கர் சல்மான் திருமணத்திற்குத் தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்ட மிகக் குறைந்த நண்பர்களுள் ஒருவரானோம்.  இயக்குநரும் எங்கள் அன்புத் தம்பியுமான ராமின் அடுத்த படத்தில் மம்முட்டியோடு பவா ஒரு சித்த மருத்துவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்ற அன்பின் அழைப்பைத் தட்டவே முடியவில்லை. அதன்பொருட்டு பவா நடிக்க ஆரம்பித்ததும், பொங்கல் விடுமுறையில் நான் குழந்தைகளோடு கொடைக்கானல் போய் மூன்று நாட்கள் படப்பிடிப்புக் குழுவினரோடு இருந்ததும், மீண்டும் மம்முட்டி சாரோடு பேச, விவாதிக்க, கற்றுக்கொள்ளவென நிறைய நேரம் கிடைத்தது. மம்முட்டி என்ற அந்த மகாக் கலைஞன் நடிப்பில் காட்டும் அக்கறையும் அதில் மேம்பட்டு நிற்கும் தருணமும் அசாதாரணம். அதிலும் அடுத்த நிமிடமே சாதாரணமாகிக் குழந்தைகளுடன் கிண்டல் செய்து விளையாடுவதும் தன் செல்பேசியில் தேடித்தேடி “ஷைலஜா நான் ஒரு கவிதை படித்துக் காட்டட்டுமா?” என்று கேட்டு 4 பக்கக் கவிதையைப் படித்துக் காண்பிப்பதும் அத்தனை சாதாரணமல்ல.

மம்முட்டி அப்படிப் படப்பிடிப்பின் நடுவே எங்களுக்கு வாசித்துக் காண்பித்த ஷாஜிக்குமாரின் கவிதை:


தலைகீழ் விகிதங்கள்

நான் குடிக்கும்போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை...
அன்று அலுவலகத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்தேன்...
மனைவி அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்...
அடுக்களையிலிருந்து உருளும் பாத்திரங்களின்
    சத்தம் கேட்டபடியிருந்தன...
நான் சத்தமெழுப்பாமல் வீட்டின் படியேறி வந்தேன்.
கருநிற அலமாரியிலிருந்து பாட்டிலை மெல்ல
    வெளியே எடுத்தேன்...
தாத்தா மட்டும் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து என்னைப்
    பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது நான் என்ன செய்கிறேனென்று
    யாருக்கும் தெரியாது
காரணம் நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை...
பழைய சிங்கின் மேலே  அலமாரியிலிருந்து
கவிழ்த்து வைக்கப்பட்ட டம்ளரை எடுத்து ஒரு பெக் அடித்தேன்.
டம்ளரைக் கழுவி, மீண்டும் அலமாரியின்
    உள்ளே சரியாக வைத்தேன்...
பாட்டிலை அதே இடத்தில்  பத்திரப்படுத்தினேன்.
தாத்தா மட்டும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
நான் மெல்ல சமையலறைக்குள்ளே நுழைந்தேன்.
மனைவி உருளைக்கிழங்கை வெட்டிக் கொண்டிருந்தாள்.
இதுவரை நான் என்ன செய்கிறேனென்று
யாருக்கும் தெரியாது,
காரணம்,
நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை...
என் மனைவியிடம் மிக இயல்பாய் கேட்டேன்
‘நம்ம நாயர் மக கல்யாணம் என்ன ஆச்சு?’
மனைவி : அது ஒண்ணும் கைகூடி வரல பாவம் அந்தப் பொண்ணு,
ரொம்பப் பரிதாபம் இப்பவும் அவளுக்கு மாப்பிள்ளை
பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்
நான் சட்டென வெளியே வந்தேன்.
கறுத்த அலமாரியிலிருந்து மெலிதான ஒரு சத்தம் வந்தது.
ஆனால் பாட்டிலை எடுத்தபோது  கொஞ்சமும்
சத்தம் வராமல் பார்த்துக்கொண்டேன்.
மீண்டும் சிங்கின் மேலிருந்த ரேக்கிலிருந்து டம்ளரை எடுத்தேன்
படபடவென ரெண்டு ரகசிய பெக் அடித்தேன்.
பாட்டிலைக் கழுவி சிங்கிலும் கறுத்த டம்ளரை
    அலமாரியிலும் வைத்தேன்.
ஆனால் இப்போதும் யாருக்கும் நான் என்ன
    செய்கிறேனென்று தெரியாது,
காரணம் நான்... நான்...
குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.
மீண்டும் நான் மனைவியிடம் “இல்ல அந்த நாயர்
    பொண்ணுக்கு இப்ப என்ன வயசிருக்கும்?” என்றேன்.
மனைவி : என்ன மனுஷன் நீ? இதுகூடத் தெரியாம,
    28 முடிஞ்சிடுச்சாம்.
இப்ப வயசான எருமையப்போல ஆயிட்டாளாம்...
நான் : ஓ... அப்படியா  ம்...
நான் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை உருவாக்கினேன்.
அலமாரியிலிருந்து ஓர் உருளைக்கிழங்கை எடுத்தேன்.
இதெப்படியடா கடவுளே! அலமாரி சத்தமில்லாமல் இருக்கிறது?
நான் ரேக்கிலிருந்து அந்த பாட்டிலைக் கவிழ்த்து
சிங்கில் ஒரு பெக் ஊற்றி ஒரே மூச்சில் அடித்தேன்
தாத்தா இப்போது சத்தமாய்ச் சிரிப்பது எனக்கு மட்டும் கேட்டது
நான் அவசரமாய் ரேக்கை எடுத்து உருளைக்கிழங்கில் வைத்தேன்...
தாத்தாவின் ஃபோட்டோவைக் கழுவி
கறுத்த அலமாரியின் உள்ளே வைத்தேன்...
இவள் என்ன செய்கிறாள்? சிங்கை எடுத்து
    அடுப்பின் மேலே வைக்கிறாள்!
ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று
    யாருக்கும் தெரியாது,
காரணம் நான்... நான்... குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை
(இதென்ன கடவுளே விக்கல் வருது!
    யார் என்னை நினைக்கிறார்கள்)
நான் கோபமாக மனைவியிடம் : நீ எதுக்காக
    அந்த நாயரை எருமைன்னு சொன்னே?
இனி நீ அப்படி பேசினா நான் உன் நாக்கை அறுத்துடுவேன்
மனைவி : அய்யோ நான் இப்ப என்ன சொன்னேன்
நீ இப்ப வெளியப்போறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
நான் உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுத்தேன்.
கறுத்த அலமாரிக்குள்ளே போய் ஒரு பெக் அடித்து
சிங்கைக் கழுவி ரேக்கின் மேலே வைத்தேன்.
இப்போது மனைவி ஃபிரேமிலிருந்து என்னைப் பார்த்து
    சிரித்துக் கொண்டிருக்கிறாள்
தாத்தா அடுக்களையில் அவசரமாய் சமைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று
    யாருக்கும் தெரியாது
காரணம் நான்... நான்...
குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.
நான் மனைவியிடம் இயல்பாய் சிரித்தபடி :
இல்ல இந்த நாயர் போயும் போயும் ஏன்
    ஒரு எருமையக் கல்யாணம் பண்ணப் போறார்?!!!
மனைவி : அய்யோ என்ன மனுஷன்யா நீ? மொதல்ல
    மொகம் கழுவிட்டு வா.
நான் மீண்டும் அடுக்களைக்குப் போய்ச் சத்தமெழுப்பாமல்
ரேக்கின் மேலே  உட்கார்ந்தேன்
ஆஹா... ரேக்கின் மேலேயே அடுப்பிருக்கிறதே.
வெளியே அலமாரியிலிருந்து பாட்டில்
    அசையும் சத்தம் கேட்கிறது.
நான் எட்டிப் பார்த்தபோது, அவள் சிங்கின் மேலே உட்கார்ந்து
ஒரு பெக் ஊற்றி ரசித்துக் குடித்தபடியிருக்கிறாள்!
ஆனால் இதுவரை ஒரு எருமைக்குக் கூட
நான் என்ன செய்தேனெனத் தெரியவில்லை
காரணம், தாத்தா ஒரு போதும் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை
நாயர் எருமை இப்போது என் வீட்டுச் சமையலறையில்
    சமைத்துக் கொண்டிருக்கிறார்
நான் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து  என் மனைவியைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
காரணம்...காரணம்...நான் ஒரு போதும்...என்னானாலும்..
ஒரு போதும் உருளைக்கிழங்கை மட்டும் தொட மாட்டேன்.


கவிதையை அவர் வாசித்து முடித்தபோது சிரிப்பை மீறின வலி இதயத் தமனிகளில் நிறைத்துக்கொ ண்டது.
* பொங்கல் மதுவிற்பனை மூன்று நாட்களில் 315 கோடி
* போன வருடத்தைவிட விற்பனை அதிகம் காட்ட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு நெருக்கடி
 செய்தியைப் படித்தபோது தமிழகமே தள்ளாடுவது போலத் தெரிந்தது. எங்கே போகிறோம் நாம்?