Monday, 3 February 2020

பெண்ணின் வலி சொல்லும் ஒரு ஆண் மனசு....



நான் மொழிபெயர்த்த சிறுகதைத்  தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த என்.எஸ்.மாதவனின்சர்மிஷ்டாபற்றி என்னுடைய நண்பரும் தீவிர வாசகருமான சௌந்திராஜன் அவர்கள் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருக்கிறார். மாதவன் தன் படைப்புகளில் லேசாய் தெரிவதாய் பல நுட்பங்களை உள் மடித்து வைத்து வாசகனை கடந்து போக விடாமல் செய்யும் படைப்பாளி. சில வார்த்தைகளில் நான் உடைந்து போய் அழுதிருக்கிறேன், விக்கித்துப் போய் நின்றிருக்கிறேன், மரத்துப் போயிருக்கிறேன். மூச்சு விட முடியாமால் திணறியிருக்கிறேன். பெரு மூச்சு விட்டு என்னைத் தணித்திருக்கிறேன்.

இதில் வரும்பிறகுகதை வலி நிறைந்தது. பெண் மனம் கொண்டு மாதவன் எழுதிப் பார்த்தவை. அதை பவா மிக நேர்த்தியாய் சாதுர்யமாய் சொல்லியிருப்பார். எல்லாம் ஒரு சேர நினைவில் வந்து மோதுகிறது. 


https://www.youtube.com/watch?v=-sJEUwD7rwo


/* சர்மிஷ்டா - வாசிப்பனுபவம் */
(மலையாளம் : என்.எஸ். மாதவன். தமிழில் : கே.வி. ஷைலஜா)
சென்ற டிசம்பரில், கே.வி. ஷைலஜா அவர்களை சந்தித்தபொழுது, சர்மிஷ்டா வாசித்திருக்கிறீர்கள்தானே என்று கேட்டார்கள். நான் வாசித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்கவேண்டிய மீள்வாசிப்புக்குரிய தொகுப்பு இது என்று சொன்னேன். இந்த முறை உட்கார்ந்து ஆற அமர வாசித்தேன். அதுவும் சர்மிஷ்டா கதையை வாசிப்பதற்கும் புரிவதற்கும், ஜெயமோகனின் வெண்முரசுவில் , யயாதி, தேவயானி, சர்மிஷ்டா, அவர்கள் புதல்வர்கள் , அமைச்சர்கள் வரும் மாமலர் பாகங்களை மீண்டும் வாசித்தேன். காண்டேகர் எழுதிய யயாதி நாவலைப் பற்றிய பல விமர்சகர்களின் வாசிப்பனுபவத்தை வாசித்தேன். புலப்பேடி கதையின் அடிநாதத்தை பிடிப்பதற்கு, ரப்பர் நாவலில் இந்த வார்த்தையை பார்த்தமே என்று மீண்டும் ஜெயமோகனே சரணம் என்று அவரின் தளத்தில் விளக்கம் தேட வேண்டியதாகிவிட்டது.
தனது முதுமையை மகன் புருவிற்கு கொடுத்துவிட்டு அவனது இளமையை தனது சுகத்திற்காக வாங்கிக்கொண்ட, பாண்டவர்களின் கவுரவர்களின் மூதாதை அரசன் யயாதி. இளமையில் கிடைக்கும் காமத்தில் இல்லை இன்பம் , தியாகத்தில்தான் இன்பம் என்று புகட்டுவதற்கே யயாதியின் கதை சொல்லப்படுகிறது. பெண் என்பவள் மகளாக, காதலியாக, மனைவியாக, தாயாக தன் வாழ்நாளில் வாழ்ந்தாலும், அவளின் ஆழம் தாய். அந்த ஆழத்தை, தாயின் பதட்டத்தை காட்சி படுத்தும் புதிய பார்வையே, என்.எஸ். மாதவனின் சர்மிஷ்டா. இங்கு என்.எஸ். மாதவன் யயாதி கதையை, சர்மிஷ்டாவின் பார்வையில் சொல்கிறார். அவன் தனக்கு இளமையை தரும்படி கேட்டு கெஞ்சுவதை, புருவைத் தவிர மற்ற நான்கு மகன்களும் எப்படி அவனை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறாள். தேவயானி, இவள் மகன் புரு , வயதானதால் சீக்கிரம் மரணம் எய்துவான் என்று மகிழ்வு கொள்ள, சர்மிஷ்டா சாந்தமாக இருக்கிறாள். இவள் சாந்தமாக இருக்க அவள் வெட்டி திரும்பி தன்னை பார்ப்பதையே சர்மிஷ்டா வெற்றியாக பார்க்கிறாள். இளமையிலேயே முதுமை அடைந்துவிட்ட புருவின் கண்களில் ஓடுவது இளமையின் கனவாக இருக்குமா என்று துடிக்கிறாள். அந்தக் கண்களுக்கு கனிவுடன் முத்தமிடுகிறாள். இளமை திரும்பி சுகம் தேடி வரும் யயாதியை புருவாக பார்க்கிறாள். அருகில் வராதே என்று கன்னத்தில் அறைகிறாள், சர்மிஷ்டா!.
புலப்பேடி கதையில், சாவித்ரி கணவன் இறந்தபிறகு தனிமையில் வாடும் பெண். நெல்குதிரெல்லாம் வைக்கும் அறைக்கும் மேலே பரண் மாதிரி இருக்கும் பெண்களுக்கான தனியறையில் வாசம் செய்கிறாள். கதவிடுக்கில் தெரியும் வாசலிலும், அதில் வரும் ஒளி மாற்றத்திலும் பகல் இரவு மாற்றத்தை அறிகிறாள்.. அதில் நாட்கள் மாதங்கள் மாறுவது தெரிவதில்லை. அவளது கணவன் இறந்து நாளைக்கு பதினைந்தாவது திவசம் என்று வேலைக்காரி பார்வதி சொல்லித்தான் தெரிகிறது. புதிய நெல்லின் பச்சை மணம் அவளுக்கு பழைய நினைவுகளை கிளறிவிடுகிறது. மாலையில் வயல்களிலிருந்து வீடு திரும்பும் புலையர்கள், தங்களை பார்த்து யாரும் தீட்டு பட்டுவிடக்கூடாது என கூவி பாடிக்கொண்டு அவள் வீட்டை கடக்கிறார்கள். அந்தக் கூக்குரல் சாவித்ரியின் உடலை நடுக்கி சிலிர்க்க வைக்கிறது.
அவள் பார்க்க வளர்ந்த கணவனின் தம்பி படித்து முடித்து அண்ணனின் திவசத்திற்காக வந்திருக்கிறான். வந்தவன் , தவறாக அவளிடம் முயற்சிக்க, குழந்தையாகவே பார்த்த அவனை விபூதிப்பெட்டியை முகத்தில் வீசி தப்புகிறாள். முகத்தில் இரத்தம் வழிய வந்த அவனை பார்த்த அம்மாவிடம், வயிற்று வலியால் துடித்த அண்ணியை என்ன என்று கேட்க போன தன்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தாள் என்று பொய்ப் பழி சுமத்துகிறான். இது கதவில் தலையிடித்து வரும் இரத்தம் என்கிறான். தம்பிரான் குடும்பம் அவளை அடங்காதவள் என பழிச் சொல் நிமித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இப்பொழுதும் புலையன் தெருவில் பாடி வருகிறான். அவன் குரல் கேட்டு முதலில் பயப்பட்ட சாவித்ரி, இப்பொழுது அவன் பெயர் கேட்டு அவன் கை பிடித்து ஆற்றை நோக்கிச் செல்கிறாள். அவனோடு சேர்ந்து இவளும் உரக்கக் கூவுகிறாள்.
இரை - கதை முழுக்க முழுக்க திகில். என்னதான் எதிரில் நிற்கும் பெண்ணைச் சுற்றிலும் கத்தி றிவதில் ப்ரமோத் வித்தகன் என்றாலும், ஒருமுறை அவனால், குத்து வாங்கி அம்மிணி ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். அம்மிணிக்கு முன்பு இருந்தவள் தொடையில் குத்து வாங்கி இறந்தாள் என்பதை மானேஜர் கிண்டல் செய்து அவனை உசுப்பு ஏற்றுகிறார். இரையாக நிற்பதற்கு எந்த முதல் அனுபவமும் இல்லாமல் இன்று நிற்கும் அம்மிணியின் சகோதரி ஜெயலட்சுமி , ப்ரமோத்தின் தவறான முயற்சிக்கு 'போடா வெளியே' என்று சொல்லியிருக்கிறாள். பயிற்சி இல்லாத ஜெயலட்சுமிக்கு, பிரமோத்தின் மீது பகைமை மற்றும் பயம். பகைமை, அம்மணி அக்காவை நிறுத்தி வைத்து வாளை வீசுகிறான். பயம் - மம்முட்டியின் கண்களைப் போல ப்ரமோத்தின் கண்களும் ஒரு நாளும் சிரிப்பை உதிர்த்ததில்லை.
நிற்கும் இரையை கோட்டோவியமாக பார்க்கும் பயிற்சி, ப்ரோமத்திற்கு இருந்தாலும், அவள் 'போடா வெளியே' என்று சொன்னது வந்து போகிறது. ஒரு நிமிடம் கண்ணை மூடி நிதானப்படுத்தி கத்தி வீசுகிறான். வலது கையின் நீண்ட விரல் நகத்தை கத்தி தொட்டும் தொடாமலும் செல்ல , அவள் பயப்படுவதை பிரமோத் உணர்கிறான். காற்றின் வேகம் அறிந்து வீசுகிறான். திரும்பி நின்று கண்ணாடியில் இரையை பார்த்துக்கொண்டு ஜெயலட்சுமியின் தலைக்குமேல் கத்தி குத்தி நிற்கும்படி வீசுகிறான். கடைசி கத்தி உச்சந்தலைக்கு நேராக வரும்பொழுது ஜெயலட்சுமியின் புருவங்களுக்கு இடையில் நமைச்சல். இது கடைசி பக்கத்தின் முதல் வரிகள். திகில் குறைந்த பாடில்லை.
தனது கணவன் முகுந்தன் பற்றி, ஒரு மனைவி சொல்லும் கதை பிறகு. கவிதை நடை. சில நேரங்களில் என் கணவர், சில நேரங்களில் என் குழந்தைகளுக்கு அப்பா, சில நேரங்களில் என் மாமியாரின் பிரியமான இரண்டாவது மகன் என ஒரு பக்கம் முழுவதும் அழகாக நீண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பாக செத்துப் போனான், என்று இறந்த தன் கணவனின் கதையை சொல்கிறாள்.
முகுந்தனின் நாற்பத்து மூன்று வருட வாழ்க்கையை சின்னக் கோடு என்று சொல்லிவிட்டு அந்தக் கோட்டின் பாதியில் தான் வந்து சேர்ந்த இடத்தை சொல்கிறாள். அந்த வருடங்களை உச்சரிப்பதில் உள்ள வலியை சொல்கிறாள். அவனுடன் ஒருமைப்பட முடியாமல் போன வலியைச் சொல்கிறாள்.
முகுந்தனின் கடைசி நிமிடங்கள் குறித்து இரண்டு விஷயங்களை நினைவு கூறுகிறாள். ஒன்று, யாருக்கும் அறிமுகமில்லாத நல்ல நிறமான , உயரமான, கழுத்து நீண்ட பெண் மயானத்திற்கு வந்து முகந்தனின் காலைத் தொட்டு வணங்குகிறாள். கட்டுப்பாடில்லாமல் அழுதபடியும் இருக்கிறாள். இரண்டு, குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் அவசரம் காட்டுகிறாள்.
முகுந்தனுக்கும் நீண்ட கழுத்து உள்ள பெண்ணுக்குமான உறவு, அவள் ஒரு கிளினிக்கு போலாம் வாருங்கள் என்று அவளை துணைக்கு அழைக்கும்பொழுது அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. யாருமில்லாத நளினியை அவளும் , அவள் குடும்பமும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களை அமரவைத்து அவள் கதை சொல்ல, அவர்கள் முகுந்தனாக நளினியைப் பார்க்கிறார்கள். பிறகு கதை , முகுந்தனின் கதை மட்டுமல்ல. பன்முகங்கள் கொண்டு வாழும் பல மனிதர்களின் கதை. கதையின் எந்த இரு பக்கங்களை எடுத்தது படித்தாலும் ஒரு கதை , முகுந்தனின் இன்னொரு முகம் இருக்கிறது.
கதையின் ஆரம்பத்தில் இருந்த நடை , முகுந்தனின் பல முகங்களை அடையாளம் காட்டும் சொல்லாடல்கள், முகுந்தனின் மனைவியும், நளினியின் உரையாடல்களிலும் தொடர்கிறது. (ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பின் அழகும் , நளினமும் இங்கு மிளிர்கிறது.)
நளினி : முதல் முதலாக நான் நாடகத்தில் தலை காட்டியபோது மேடைக்கூச்சத்தை போக்க என்னை இந்தியாகேட்டின் புல் படுக்கையில் நடக்கவைத்த முகுந்தன்.
மனைவி : "அப்புறம்?"
நளினி : "அப்புறம், ம்.. என்னவெல்லாம்.. நான் சமையல் செய்யாத நாட்களில் ஜும்மா மசூதியின் கரீம்ஸிலிருந்து உருமாலி ரொட்டியும், கறிக்குருமாவும் வாங்கிக்கொண்டு வரும் முகுந்தன்"
மனைவி : அப்புறம் உனக்கு உடம்பு சுகம் இல்லாத நேரத்து முகுந்தன் எப்படி ?
நளினி : "ஐ.என்.ஏ. மார்க்கெட்டிலிருந்து நொய்யரிசி வாங்கி வந்து கஞ்சி வைத்துத் தந்த முகுந்தன்"
இருவரிடமும், இரு வேறு ஆணாக இருந்த முகுந்தன் -
மனைவி :"ஜுரம் சரியானபோது உன்னை விட்டுவிட்டுத் தனியாக காரை ஓட்டியபடி பல வாரங்கள் காணாமல் போன முகுந்தன்?"
நளினி: "இல்லை, ஜுரம் சரியானபோது எனக்கு ஒய்வு தேவையென நினைத்து தரம்சாலையின் மக்லோயிட் கஞ்ச்சிற்கு காரில் என்னை அழைத்துக்கொண்டு போன முகுந்தன். அங்கே நான் காண்பித்த திபெத்தியர்களின் அகதி முகங்களை எல்லாம் முகந்தன் புகைப்படமெடுத்தார்."
சுரேஷ்மாத்தான் அறுபத்தைந்து வருடங்களுக்கு அப்புறம், ஹுமாயுன் கல்லறையில் (கதையில்) , பூ விற்ற , பதினாறு வயது பெண்ணான சமேலியிடம், முதலிலேயே ஒரு முழம் பூ வாங்கி இருக்கலாம். ‘முப்பத்தைந்து வயசெல்லாம் ஒரு வயசா சார்’ என்று அவள் கேட்டதில் இளமை திரும்பி, மறைவுக்கு வரச் சொல்லி , சென்ற இடத்தில் அவமானப்பட்டதுதான் மிச்சம்.
அம்மா கதையில், சூசன் தொலை காட்சி நிகழ்வை எடுக்கும்/தொகுக்கும் பெண், சரசம்மா என்ற நக்சல்பாரியின் ஒரு காலத்திய தலைவியை, அவள் வயதாகி ஓய்வாக மகள் நீலிம்மா வீட்டில் பேரன் பைஜுவுடன் விளையாண்டு கொண்டிருக்கும் சமயம் நேர்முகம் காண வருகிறாள். அவளை நேர்முகம் காணும்பொழுது, அவள் முன்னின்று நடத்திய போராட்டத்தில் காலை இழந்த, துஷ்ட இன்ஸ்பெக்டர் கேளு நம்பியாரை பற்றி சொல்ல, கதை , கேளு நம்பியாரை சூசன் பேட்டி காண்பதுபோல் செல்கிறது. எடிட்டரின் கத்தி விளையாடுவதுபோல், கதை சரசம்மாவை பற்றிய தகவல்களை, அந்த போராட்டத்தில் பங்கு கொண்ட மற்ற பெண்களையும் கண்டு பேட்டி காண வைக்கிறது. அவர்களும் சரசம்மாவை பாராட்டுகிறார்கள். குழந்தைகளிடம் பிரியமுடன் இருப்பவர் என்கிறார்கள். கேளு நம்பியாரை மகாதுஷ்டன் என்று திட்டுகிறாரகள். சூசன் எடுத்தது படமாக தொலைக்காட்சியில் வரும்பொழுது, சரசம்மா , மகளையும், பேரனையும் வெளியே அனுப்பிவிட்டு, விளக்கெல்லாம் அணைத்துவிட்டு அமைதியாக பார்க்கிறாள். அவளுக்கு ஏ.கே.ஜி-யை பற்றி அவர் கணவன். சொன்னது நினைவில் வந்து போகிறது. மற்ற குழந்தைகளை விட சரசம்மாவின் பேரன் பைஜுமோனுக்குத்தான் யாரும் கேட்க முடியாத கதைகளை கேட்கும் பாக்கியம் இருக்கிறது என்று சூசன் விளக்கத்துடன் படம் முடிகிறது.
என்.எஸ். மாதவனின் குறியீடுகளையும், மாறுபட்ட நோக்கையும், அழகிய நடையையும் சிறிதும் குலையாமல், கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்து சர்மிஷ்டா தொகுப்பை வாசகன் கையில் கொடுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் முதலில் குறிப்பட்டது போல் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு மறந்துவிடும் கதைகள் அல்ல. உள்வாங்கி வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய கதைகள்.
- வ. சௌந்தரராஜன்
02/02/2020