’’குட்மார்னிங்
ஷைலு, நான் பாலு பேசறேன்’’
ஒவ்வொருமுறை என் அலைபேசியில் அவர்
பெயர் வரும்போதும் நான் பதற்றமாகிவிடுவேன். இயல்பாய் பேசத்தொடங்க பத்து நிமிடங்களாவதாகும்.
எவ்வளவு பெரிய ஆளுமை அவர். எத்தனை பேருக்கு
ஆதர்ஷம், கனவு, வாழ்நாள் லட்சியம், தொலைதூரத்து ஏக்கம், மட்டுமல்ல தன் மைல்கற்களை தானே
தாண்டிய ஒரு அபூர்வம், அதன் வழி சிந்தாமலிருக்கும் பூரணத்துவம்.
.
‘‘ஷைலு என்னை அப்பான்னு கூப்பிடும்மா,
மற்றவங்க என்னை கூப்பிடறதை விட நீ கூப்பிடனுன்னு
ஆசையாயிருக்கம்மா’’ என்ற அவரை அப்பா என்று
என்னால் கடைசிவரை கூப்பிட முடிந்ததில்லை. ஒரு
மஹா சமுத்திரத்தை எனக்குள் மட்டும் தேக்கி வைத்திட எனக்கு தைர்யம் வந்ததேயில்லை.
‘‘நான் கெளம்பறேன் ஷைலம்மா’’ என்று
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் மறக்காமல் சொல்வீர்களே, இறுதி சந்திப்பில் மட்டும் என்னிடம்
சொல்லிக்கவேயில்லயே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்தபோது
ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் ஷைலு, நல்லாயிருக்கேன் என நான் நம்பும்படி சொன்னீர்களே
சார். உள்ளுக்குள் எதை மறைத்து வைத்திருந்தீர்கள்?
ஏன் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? பிறந்து சில மாதங்களிலேயே அப்பாவை இழந்த எனக்கு
எதற்காக அந்த உறவின் தளிர்களை தரிசிக்க வைத்தீர்கள்? தலைகோதி கைபிடித்து எதற்காக அதன்
எல்லைவரை அழைத்துசென்றீர்கள்?
ஆனாலும் ஆனாலும் எனக்குள் இதுவரை சேமித்துவைத்திருக்கும் நினைவுகள் போதுமெனக்கு.
இந்தப் பேரிரைச்சலிலும் நான் நிறைவடைந்திருக்கிறேன்.
நான் நல்ல சினிமாவை பார்க்க மட்டுமே
தெரிந்தவள். அதை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடத் தெரியாது. எனக்கு அன்பை பெறவும்,
பொத்தி பாதுகாக்கவும் அதனை அடுத்த நெஞ்சுக் கூட்டிற்குள் கடத்தவும் மட்டுமே தெரியும்,
அதனால்மட்டுமே நான் அவருடைய மகளானேன். பார்க்கிற எல்லோரிடத்திலும், இது ‘ஷைலு’ என் மக என நானே கூச்சப்படுமளவுக்கு என்னை
அறிமுகப்படுத்துவார்.
தன் அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காக திருவண்ணாமலைக்கு
வந்த அவர் தினமும் மாலையில் ‘ வம்சி’ அலுவலகத்திற்கு
வருவார். மிகவும் வித்தியாசமானதொரு காஸ்ட்யூமில் தொப்பியை கழற்றி வைத்துவிட்டு தலையில்
துண்டு கட்டி அதை தோளுக்கும் சற்று கீழே தொங்கவிட்டுக் கொண்டு வந்து உட்காருவார். சென்னையில்
கூட கிடைக்காத உலகத் திரைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறீர்களே என ஆச்சரியப்பட்டு கை
நிறைய படங்களை அள்ளி சேகரித்துக்கொள்வார். புத்தகக் கடைக்கு வரும் நண்பர்களுக்கு அவரின்
இருப்பு பேரதிர்ச்சியாக இருக்கும். என்ன சாப்பிடலாமென்றால் ‘பகோடா சொல்லம்மா, கார பொரி
சாப்பிடலாம்’ என்று கேட்டு சாப்பிடும் அவரை தெருவில் போவோர்களும் வருபவர்களும் அதிசயமாய்
பார்த்துகொண்டே போவார்கள். கடைக்குள்ளே வரும் வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதை
நான் பார்த்ததுண்டு. ஒரு டீ குடித்துவிட்டு நாங்கள் மலை சுற்றும் வழியிலிருக்கும் உணவு விடுதிக்குச்
சென்று கதைகளாகப் பேசிக்கொண்டிருப்போம். தமிழின் ஆகச் சிறந்த கதைகள், மொழிபெயர்ப்பு
கதைகள் தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் ,
தன் சினிமா அனுபவங்கள் தான் எடுக்கப் போகும்
திரைப்படங்கள் என்று சுழலும் அப்பேச்சிலிருந்து துண்டித்துக்கொள்ள எப்போதும் மனசே வந்ததில்லை.
இரு நாட்கள் எங்களுடன் தங்க வந்திருந்த சாரும் மவுனிகாவும்
ஒரு மதிய உணவிற்கு பிறகு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அன்று மாலை அவரின் கதைநேரக்கதைகளை திருவண்ணாமலை பார்வையாளர்களுக்காக
திரையிட்டோம். மிகக் கண்டிப்பானதொரு வாத்தியாராய் மாறி படம் பார்ப்பதற்கு வைக்க வேண்டிய
கலர், காண்டிராஸ்ட், ஒலி என சொல்லித் தருகிறார்.
ஆப்பரேட்டருக்கு அது சரி வர புரியாதபோது அவரே குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதை சரி
செய்கிறார். தன் படைப்பு மிகச் சரியான வடிவத்திலும் துல்லியத்திலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட
வேண்டுமென்ற ஒரு படைப்பாளிக்கே உரிய ஆர்வம் பிரதிபலித்த நிமிடங்கள் அவை. என்னுள் பிரமிப்பாய்
நிலைபெற்றதும்கூட.
அடுத்த நாளே வாய்த்த இரண்டு மணி நேர கார் பயணம் போதும் என் வாழ்வு அர்த்தப்
பட. மாலையும் இரவுமல்லாத மங்கும் பொழுது அது. சில நேரங்களில் நாம் நினைக்கும்போதே
மழை பெய்யுமே அது போல, என்னவென்றே தெரியாமல் காலையிலிருந்தே மனம் சந்தோஷத்தில் அலை
அடிக்குமே அது போல முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சார் சொல்லும் ஒவ்வொரு கதையையும்
நானும் படித்திருந்தேன். ஜி.நாகராஜன், தி.ஜா., சுந்தர ராமசாமி, அவருக்கும் எனக்கும்
எப்போதும் பிடித்த பிரபஞ்சன் என அடித்த சுழல் லா.ச.ரா. வில் வந்து நிலை கொண்டது. லா.ச.ரா.வின்
பச்சைக் கனவொளியில் கிறங்கிய பேச்சின் நடுவே
’எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா நான் கொஞ்சம்
உன் மடியில் படுத்துக்கறேனே’ என பின்னிருக்கையில் என் மடியில் படுத்து உறங்கிப் போன
மவுனியை எங்கள் கதாநாயகர்களும் நாயகிகளும் தொந்தரவு செய்யவேயில்லை.
இந்த ஐந்தாறு வருடங்களில் அநேகமாய்
தினமும் என்னோடு தொலைபேசியில் பேசுவார். தன் சினிமா பட்டறையில் உச்சமாக இலக்கிய வகுப்பெடுத்த
பெருமிதத்தை, தன் மாணவன் மிகக் கண்டிப்பாக நவீன இலக்கியம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை,
எதோ ஒரு மாணவன் கதைகளைப் படித்தபின் எழுதிக்கொடுத்த சினாப்சிஸில் தன்னை கரைத்துக் கொண்டதை,
அவருக்குப் பிடித்த அவருடைய மவுனி புள்ளிகுத்த முடியாத காரணங்களால் அவரிடம் பேசாமல்
இருந்த துக்கத்தை பேசி ஆற்றிக் கொள்ள, எப்போதும் படைப்பாளியிடம் அந்தஸ்து தள்ளியே நிற்கும்
மாயைக்கு தான் இரையாகாத பேராண்மையை, இந்த வயதில் தான் தனியனாய் வாழ நேரிட்ட துயரம்
பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் அடுத்த அழைப்பிலேயே மழை நீர் முகத்தில்பட்ட குழந்தையாய்
குதூகலிக்கவுமான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருந்தது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்ல
தான் தான் மிகப்பொருத்தமானவன் என்றும், அவனவன் தன் வாழ்க்கையிலிருந்துதானேம்மா படம்
எடுக்க முடியும், என் படங்கள் எப்போதும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாவேதான் இருக்கு
என்றும் சிலாகிப்பார். நான்தான் அவரின் சோகங்களிலிருந்து
வெளிவரத்தெரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
.
2011 சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்த
என்னிடம் வந்து உட்கார்ந்து ’ஒரு டீ சொல்லம்மா’ என்று பேச ஆரம்பித்தார்.
வழக்கம்போல மானசி தாத்தாவிற்காக ப்ளாக் டீ வாங்கி வர ஓடினாள். வெற்றியோட ஆடுகளம் படம் பாத்திட்டு நேரா வரேம்மா, அய்யோ எப்படி
எடுத்திருக்கான், ஜட்ஜஸ் சரியா அமஞ்சா இந்தப்படம் ஆறு அவார்டு வாங்கும், ஒரு வேளை ஜூரி
அவார்டு ஜெயபாலனுக்கு கிடைக்கும். சொந்தக்குரலில் பேசியிருந்தால் தேசிய விருதே கிடைக்கும்
என்றார். அந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட
தேசிய விருதுகள் அவ்விதமேயானது. விருது அறிவிக்கப்பட்ட
அன்று அவருக்கிருந்த சினிமா நுட்பமும் சரியான திரைப்படம் குறித்த தன் அவதானிப்பும்
தன் வாழ்வை சினிமாவில் மட்டுமே வைத்து கரைத்துக்கொண்டிருக்கும்
அக்கலைஞனின் அசாத்திய நம்பிக்கையும் என்னை உறைய வைத்தது.
என் ‘வம்சி புக்ஸ்’ சில புத்தகங்களை பதிப்பிக்கும்போது
ஒரு பதிப்பாளராய் பெருமிதத்தில் லேசாய் என் மனம் ததும்பிக்கொள்ளும், அதில் எப்போதும்
எங்கள் பாலுமகேந்திரா சார் தான் இருப்பார். எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் தான் உருவாக்கிய
கதைநேரக்கதைகளை மூன்று பாகங்களாகவும் தனக்கு எப்போதும் ஃப்ரெஷ்ஷாக பார்க்கத் தோன்றும்
வீடு படத்தையும் புத்தகமாக்கி அவர் கைகளில் கொடுத்து அந்த முக சந்தோஷத்தையும் பெருமிதத்தையும்
நான் தரிசித்துவிட்டேன். அட்டை வடிவமைப்பில் சின்ன சின்ன திருத்தங்களைக் கூட மிக நுட்பமாகப்
பார்த்து தன் திரைப்படக் கல்லூரி அலுவலகத்திற்கு டிசைனரை வரச்சொல்லி, திருத்தி மீண்டும்
எனக்கு அனுப்பி சரிபார்த்து என அவர் காட்டும் பொறுமையும் படைப்பின் மீதான அக்கறையும்
நாம் அவரிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டியது. வீடு திரைக்கதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்வது
தொடர்பாக ஒரே நிமிடத்தில் முடிவெடுத்தோம். ‘ என் அம்மாவுக்குன்னு போடலாம்மா. சரிதானே
ஷைலு’ என்றவர் மிக அற்புதமான கவிதையாய் ஒரு சமர்ப்பணம் எழுதி அனுப்பினார்.
.மனுஷ்யபுத்திரனின் கவிதை வரி
போல ‘ நாளைக்கு வந்தேன்’ எனச் சொல்லும் குட்டி
இளவரசியின் மனசொத்தவர்.காலம் நேரம், ஒரு தேதி வைத்து வேலைகளை முடிப்பது என்பதெல்லாம்
அவருக்குத் தெரியாது. மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் கூப்பிடுகிறேன்.
’சார், ஷைலஜா பேசறேன் சார்’
’அய்யோ ஷைலு நம்புவியாம்மா நீ நானே கூப்பிடணும்னு இருந்தேன்.
ஐ வாஸ் சேர்ச்சிங் யுவர் நெம்பர். புது நெம்பர் உன்னோடது சேவ் பண்ணியிருந்தேன். அத
எனக்கு எடுக்கத் தெரியல ஷைலு. ஐம் சாரி ஷைலு வீடு பட டிவிடியை நான் இன்னும் முன்னாடியே
குடுத்திருக்கணும்மா’
‘சார் தயவு செய்து அப்படியெல்லாம்
சொல்லாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்ல சார், நான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கமட்டும்தான்
கூப்பிட்டேன்’
’எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்கேன்.
ஐ ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்’
பேசி இரண்டு நாட்கள்கூட முழுமையாய்
கடந்துபோகவில்லையே. என்னவாயிற்று சார் உங்களுக்கு?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும்,
மாலையில் எங்களுடன் மூன்று மணிநேரம் இருப்பார். கூட்டம் அதிகமாகயிருக்கும் நீங்கள்
வரவேண்டாமென்றால் ‘ஆஃபீஸ்ல போரடிக்குது ஷைலம்மா, என் பேரப் பிள்ளைகளோட இருக்கேனே’ என்று
ஆசை ஆசையாய் வருவார். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வாசகனையும் சினிமா தாகம் கொண்டவர்களையும்
பெயர் கேட்டு ’வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா’
என்று எழுதி தேதியிட்டு கொடுத்து நெகிழவைப்பார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளத்
துடிக்கும் எந்த இளமனதையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை. இனி நான் நிறைய டெலி ஃபிலிம்
எடுக்கப்போகிறேன். சக்காரியாவின் கதைகள் தனக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறதென்றும்
அவருடைய ‘யாருக்குத்தெரியும்’ கதை தனக்குப்
பிடித்த கதைகளில் ஒன்றென்றும் ஜெயஸ்ரீயிடம் பேசினார். அவள் மொழிபெயர்த்த யேசுகதைகள்
தொகுப்பைப் பற்றி நிறைய நேரம் அவளோடு விவாதித்தார்.
’இன்னக்கி இங்க வர்றதுக்கு முன்ன
ஒரு சின்ன நாட் மனசிலப் பட்டுதும்மா, கேளு’
என்று அம்மாவிற்கும் மகனுக்குமான
உறவைப்பற்றிய குறும்படத்திற்கான கதையைச் சொல்கிறார். பிண்ணனியில் அன்னலஷ்மி என்று யாரோ
யாரையோ கூப்பிடுவதைக்கேட்டு அதிர்ந்து, பின் சிரித்துக் கொண்டே பதின் வயதில் தனக்கேற்பட்ட
காதலையும் அவள் தனக்கு சொல்லிக்கொடுத்த காமத்தையும் சொல்லி சிரிக்கிறார்.
நானும் பவாவும் சேர்ந்து நண்பர்களுக்காக
ஒரு சிறு கல்வீடு கட்டினோம். அதன் திறப்புவிழாவை எங்கள் மகன் வம்சியின் பிறந்த நாளன்று வைத்திருந்தோம்.
அந்தக் கல்வீட்டின் தரையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்த அவர், ‘என் அம்மா ஒரு சந்தோஷமான
மனுஷி. அவள் வீடு கட்ட ஆரம்பித்ததும் தன் எல்லா சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள். அந்த
வலியின் மிச்சம்தான் என் ‘வீடு’ ஆனால் என் மகள் ஷைலு இந்த வீட்டைக்கட்டி தன் சந்தோஷங்களை
இதில் நிறைத்திருக்கிறாள். இது அசாத்தியமான ஒன்று. என கவிதையாய் பேசிக்கொண்டே போனார். மாலையில் ஒற்றை
அறை கொண்ட எங்கள் நில கெஸ்ட் ஹவுசை திறந்துவைத்தபோது நாங்கள் விரும்பி அவரோடு எடுத்துக்
கொண்ட புகைப்படம் அபூர்வமாய் எங்களுக்கு நிலைத்துப் போனது.
சென்னைக்கு செல்லும்போதெல்லாம்
ஒருமுறை அவரைப் பார்த்து விடுவதும் ஒன்றாய் ஒருவேளை சாப்பிடுவதுமாய் திரும்பிவருவோம்.
என்கூட தங்க மாட்டேங்கிறீங்க என்று அவருக்கு
பெரிய ஆதங்கமுண்டு. வேறு எந்த வேலையும் இல்லாமல் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமென்று
சென்னை சென்றபோது அவரிடம் நாங்கள் அங்கு வந்து தங்குவதாகச் சொன்னோம். அது மட்டும்தான்
எனக்குத் தெரியும். நானும் பவாவும் ஜெயஸ்ரீயும் நண்பருமாய் போவதற்குள் ஒரு வகுப்பறையை
ஒழித்து சுத்தம் செய்யவைத்து புதிய படுக்கைவிரிப்புகள், தலையணைகளில் ஆரம்பித்து என்னென்ன
தேவையோ அவ்வளவையும் செய்து மூன்றாம் நாள் திரும்பி வரும்போது பெற்ற தகப்பனைபோல மருமகனுடன்
செல்லும் என்னை கண்ணீர் மல்க கார்க் கதவை அடைத்துவிட்டு நின்ற அந்த பிரம்மாண்ட உருவம்
எனக்கும் பவாவிற்கும் வாழ்நாளில் மங்கிப்போகாதது.
இப்போது நினைவுகள் ஊற்றெடுத்து பொங்கி பொங்கி வார்த்தைகளுக்கு
வழிவிடுகிறது.
திரைகலைஞர் மம்முட்டியின் புத்தகத்தை
தமிழில் மொழிபெயர்த்து பெயர் வைப்பதில் யோசனையாக இருந்த நாட்களில் ‘மூன்றாம்பிறை’ என்ற தலைப்பு ஒத்து போகிறது. அந்த
தலைப்பிற்காய் நான் அவரிடம் அனுமதி கோருகிறேன். ‘ very good ஷைலம்மா,
நல்ல தலைப்பு அது, மூன்றாம்பிறையைக் கொஞ்ச
நேரம்தான் பார்க்கமுடியும். ஆனால் அந்த கொஞ்ச நேரத்திற்குள் நல்ல காரியங்கள் பலதையும்
செய்வார்கள். அதயே வைய்யம்மா ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். பின்னாளில் என் வலைதளத்திற்கும்
அதுவே பெயரேயானது.
’பவா என்றொரு கதைசொல்லி’ ஆவணப்பட
வெளியீட்டு விழாவில் படத்தை வெளியிட்டு பேசிக்கொண்டேயிருந்தார். மொத்த உரையும் மிக
நெருக்கமாக குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி எங்களைக் கூச்சத்திலும், அதீத நெகிழ்விலும்
கரையவைத்தார். பத்துமுறையாவது கண்கலங்கி கைதொழுது நின்றிருப்பேன். பவாவிற்கு படைப்பாளி
எப்படி குடும்பத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் படைப்பாளியின் மனைவி என்னென்ன கஷ்டங்களை
அனுபவிக்க வேண்டுமென்றும் அதையெல்லாம் என் மகள் ஷைலுக்கு நீங்கள் கொடுக்கக் கூடாதென்றும்
தன் அனுபவத்திலிருந்து பேசித்தீர்த்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே எஸ்.எல்.ஆர். கேமராவில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு
தாத்தா பேசுவதைப் படம் எடுத்து தான் எடுத்த படத்தைத் திருப்பி பார்த்த வம்சியை அவ்வளவு
கூட்டத்திலும் கவனித்திருக்கிறார். பேச்சின் நடுவே ’வம்சி நாங்களெல்லாம் ஒரு புகைப்படம்
எடுத்தால் அதை லேபில் கொண்டுபோய் கொடுத்து அவன் டார்க்ரூமில் கொண்டுபோய் கழுவி எடுத்திட்டு
வற்ரவரைக்கும் பொறுமையாய் காத்திருந்து பெற்ற பிள்ளையைப் பார்ப்பதுமாதிரி பார்ப்போம்.
புகைப்படம் எடுத்தவுடன் திருப்பி பாக்காதே. அப்படி பாத்தா நீ எடுத்த படத்துமேல உனக்கு
நம்பிக்கையில்லன்னு அர்த்தம். எடுப்பதற்குமுன் இதுதான் நான் எடுக்கபோற ஃப்ரேம்ன்னு
மனசில ஃபிக்ஸ் பண்ணு என்று அவனுக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தார்..
வம்சியையும் மானசியையும் அப்படி
பிடிக்கும் அவருக்கு. பிள்ளைகளை வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாலை வாக்கிங் போய்விட்டு
வரும்போதே காய்கறிகள் வாங்கிவந்து தானே ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து தாத்தாவும் பேரபிள்ளைகளுமாய்
சாப்பிட்டு விளையாடின நாட்களை இனி நான் அவர்களுக்கு மீண்டும் தர முடியாமல் காலம் உறையவைத்துவிட்டதே.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் கேட்டார்,
‘வம்சி என்ன பண்ணபோறான்மா?’
அவன் இப்ப சிக்ஸ்த் படிக்கிறான்
சார், பரோடாவில் போய் டிசைன்ஸ் படிக்கணும்னு சொல்றான் சார்
இல்லம்மா அவன் என்னமோ எங்கிட்ட
வந்திடுவான்னுதான் தோணுது
காலம்தான் எந்த கருணையும் இல்லாமல்
ஓடுகிறதே. இரண்டு வருடங்களுக்கு முந்திய ஒரு டிசம்பர் 31 இரவு பத்து மணியிருக்கும்.
குழத்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சட்டென்று வம்சி சொல்கிறான் ’அம்மா நானொரு ஷார்ட்
ஃபிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்’
சின்ன சின்ன மன அசைவிலும் உடல்
மொழியிலும் சிதறின துளிகளைக் கொண்டு ஒரு மனிதன் ஒரு குழந்தையை எப்படி அவதானித்திருக்கிறார்
என்று நான் மீண்டுமொருமுறை ஆச்சரியப்பட்டு போனேன்.
நானும் ஜெயஸ்ரீயும் அவரைபோய் பார்த்த ஒரு மதிய வேளையில், நான் மொழிபெயர்த்த
‘சுமித்ரா’ நாவல் பற்றி பேச ஆரம்பித்தோம்.
இந்த நாவல் படமாக வந்ததையும் அது சரியாக எடுக்கப் படவில்லையென மூல எழுத்தாளர் கல்பட்டா
நாராயணன் வருத்தப்பட்டார் என்றும் சொன்னேன். மிக கடுமையாகக் கோபம் வந்துவிட்டது அவருக்கு,
கதை மட்டும் தான் எழுத்தாளனுக்கு சொந்தம், அது படமாவது ஒரு ஃபிலிம் மேக்கருக்கானது.
அது அந்தக்கதையின் மறு ஜென்மம். அது பற்றி எழுத்தாளன் பேசவேகூடாது என்றார். பேச்சு
அப்படியே அப்போதுதான் பலசூறாவளியில் அகப்பட்டுவந்த ‘ விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி வந்தது.
கமல் ஒரு அசாத்தியமான கலைஞன், இந்த படத்தில
கமல் வச்ச ஒரு ஷாட்டைக் கூட என்னால வைக்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார்.
வம்சியைப் பற்றி எப்போதும் விசாரித்துக்
கொண்டேயிருப்பார்.
’ஷைலு வம்சி இப்ப என்ன பண்றான்?’’
நிறைய வேர்ல்டு கிளாசிக்ஸ் பாக்கறான்
சார். அவனுக்கு போட்டோகிராபிதான் விருப்பமா இருக்கு சாந்தினிகேதன் போய் படிக்கப் போறானாம்
சார்’.
’வெரி குட், ஆனா அதுக்கு எதுக்கு
அவன் அங்கேயெல்லாம் போணும், இன்னும் மூணு வருஷம் முடிச்சிட்டு தாத்தாகிட்ட வரச்சொல்லம்மா.
அவன நான் பாத்துக்கறேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா உருவாக்கிக் காட்டறேன்.
கடைசிவரை தாத்தாவின் கை பிடித்து
சினிமா மொழி கற்க என் மகனுக்கு வாய்க்காமலே போய்விட்டது.
’ஷைலு அவங்கிட்ட ‘ சந்தியாராகம்’
படம் இருக்கா?’
’இல்ல சார்’
’அப்படியா’ என டேபிளுக்குக் கீழே
குனிந்தவர் ஒரு டிவிடியை எடுத்து பொறுமையாய் ‘ என் அன்பு பெயரன் வம்சிக்கு, வாழ்த்துக்களோடு
தாத்தா பாலுமகேந்திரா’ என்று தன் அழகான கையெழுத்தில் எழுதி ’வம்சிகிட்ட கொடம்மா’ என்றார்.
அவர் எழுதி முடிக்கும்வரை எழுந்துநின்று பெருகும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் நின்றிருந்தேன்.
எனக்குத் தெரியும் தமிழ்நாட்டில் அந்த படம் கிடைக்காமல் தேடியலையும் எத்தனை சினிமா
ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்று.
மகனே தாத்தா கை பிடித்து அழைத்து செல்லவில்லையென்றாலும்
உனக்கான திசையையும் நீ முன்னெடுத்து செல்ல வேண்டிய அக்கினி குஞ்சினையும் உன்னிடம்தான்
விட்டு சென்றிருக்கிறார். அதை இதயத்தில் ஏந்திக் கொள்.
’ஷைலு வாம்மா நாம படம் பாக்கலாம்’
என கூட்டிப் போய் தான் இதுவரை எடுத்த தலைமுறைகள் படத்தின் சில காட்சிகளை எனக்கு போட்டுக்
காண்பிக்கிறார். அதே அறையில் உட்கார்ந்து ஒரு
க்ரீன் டீ குடித்துக் கொண்டெ பெயரிடப்படாத அக்கதையை முழுமையாகக் கேட்ட நியாபகங்கள்
நெஞ்சில் முட்டுகிறது. படத்தில் சுப்புத்தாத்தாவாய் மெல்ல மெல்ல நடந்து, கண்களின் ஓரம்
ஈரம் காட்டி உட்கார்ந்திருக்கும் சாரைப் பார்த்து, கால் தடுக்கி விழும் தாத்தாவைப்
பார்த்து பதறி விழுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாய் அவை மாறிப்
போகும் உன்மத்தத்தில் பல காட்சிகள் தெரியாமல் கண்ணில் நீர் முட்டுகிறது. எழுந்து வெளியே
வருகிறோம். சினிமா பட்டறையில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறார்கள்.
அதை உடனே உணர்ந்தவர், ’இவங்க பேரு ஷைலு, பெஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர். என்னோட படம் மியூசிக்குக்
கூட போகாத கட்டத்தில நான் இதுவரைக்கும் யாருக்கும் போட்டு காண்பிச்சதில்ல, சினிமால
இருக்கற எந்த கொம்பனுக்கும் நான் காட்டமாட்டேன். ஆனா நான் ஷைலுக்கு காட்டுவேன், பிக்காஸ்
ஷீ ஈஸ் மை டாட்டர்’ என்கிறார்.
’ஷைலு’ என பிரியம் ஊறின வார்த்தைகளில்
என்னை அழைக்க இனி யார் இருக்கிறார்கள்? மெல்ல என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வரும்
கால்கள் எங்கே?
கண்ணாடிப்பெட்டிக்குள் என்னைப்பார்த்து
பேசாமல் படுத்திருக்கும் அவரைப்பார்த்த துக்கத்தில் அருகில் நின்ற ‘சுகா’வின் கழுத்தைக்கட்டிக்கொண்டு
வெடித்து அழுகிறேன். சுகாவும் என்னுடன் சேர்ந்து
பதில் தெரியாது உடைந்து அழுகிறார்.
ஆனால் அப்பா, என் அன்பான அப்பா,
‘ ஷைலு நான் என் கடைசிகாலத்தில் திருவண்ணாமலையில்தான் இருக்கப் போகிறேன். நீயும் பவாவும்தான்
என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சொன்னதை ஒரு மகளாக நான் நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் மகனிடமும்
அகிலா அம்மாவிடமும் வேண்டி உங்கள் இன்னொரு
மகன் பாலாவிடம் பெற்ற அஸ்தியை கையில் ஏந்தியபடி மனசும் உடம்பும் பதறப்பதற நிற்கிறோம்.
நானும் பவாவும் சிறிது சிறிதாய் செப்பனிட்டு பிள்ளைகளுக்காகவும் நண்பர்களுக்காகவும்
உருவாக்கியிருக்கும் எங்கள் நிலத்தில் அதை விதைத்து, எங்களோடு நீங்கள் கலந்திருக்கிறீர்கள்.
கொழும்பில் மட்டகளம்பு மாகாணத்தில்
அமிர்தகழி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த அந்த கால்களும் திரும்பி சொந்த மண்ணிற்குப்
போகவே முடியாமல் போனதற்காய் கடைசி நிமிடம்வரை அழுது தீர்த்த கண்களுமாய் என் ஆசான் நாடற்றவனாக மின்சார மயானம் நோக்கிப் போகிறார்
என்று சோமீதரன் கதறினான். அது இல்லை.
உங்களை இதயத்தில் ஏந்திக் கொண்ட
பல ஆயிரம் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம்.
எப்போதும் நீங்கள் சொல்வதுபோல இந்த பிரபஞ்ச
சக்தி எங்களை உங்களிடமே எப்போதும் தக்க வைத்திருக்கும்.
No comments:
Post a Comment