Friday, 14 August 2015

கவிதையும் நெகிழ்வுமாய்


மே மாத கடுமையான வெயில் தெரியாமல் இந்த முறை திருவண்ணாமலை மழையில் நனைந்தது. மழை தந்த இதத்தை இழக்க விரும்பாமல் நிலத்தில் ஜெயஸ்ரீயின் வீட்டிலேயே இருந்தோம். உறக்கம் வராத பின்னிரவில் வழக்கத்திற்கு மாறாக கம்ப்யூட்டர் திறந்து வந்த மின்னஞ்சலைப் பார்க்கிறேன். கடந்த பத்து வருடங்களாக வரும் என் மொழிபெயர்ப்பு புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பதாகவும் அது மிக வடிவாக இருப்பதால் இந்த வருட கனடா இலக்கியத் தோட்ட விருதுக்கு உங்கள் பெயரைத் தேர்வு செய்திருக்கிறோம் என்றும் வாழ்த்துக்களுடன் மின்னஞ்சல் ஒன்று எழுத்தாளர் .முத்துலிங்கம் ஐயாவிடமிருந்து வந்திருந்தது. அது நிச்சயமாய் கோடை கால மழையாய்தான் என்னுள் விழுந்தது.





என் நண்பர்கள் அதில் என்னை விட குதூகலித்தார்கள். பாராட்டு விழாவாக அல்லாமல் படைப்புகள் குறித்த ஒரு அமர்வாய் அதை வடிவமைத்தார்கள். ஆகஸ்டு 9 ந்தேதி மாலை 6.00 மணி என தேதியும் நேரமும் குறித்தார்கள். மெல்ல மெல்ல அது மெருகேறி மறக்க முடியாததொரு நிகழ்வாய் மாறியது. என் நண்பர்களுக்கு நன்றி சொல்லியாகவேண்டிய தருணமிது.

திருவண்ணாமலை மக்கள் கலை இலக்கியங்கள் மீதும், எங்கள் மீதும் எவ்வளவு நேசமாய் இருக்கிறார்கள் என்பதை மீண்டுமாய் எங்களுக்கு உணர்த்தினார்கள். குடும்பம் குடும்பமாய் வந்து திக்கு முக்காட வைத்தார்கள்.

வீட்டில் ஏராளமான உள்ளூர் வெளியூர் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் மதிய உணவிற்குப் பின் அனுப்பிவிட்டு கிளம்பி எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள சாரோன் போர்டிங் பள்ளிக்கு போனபோது பிரபல நாதஸ்வர வித்வான் கலைமாமணி பிச்சாண்டி அவர்களின் மகன் கார்த்திகேயனும் மருமகள் சாரதாவும் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் பார்வையாளர்கள் அவர்களை எவ்வளவு ரசிப்பார்கள் என்றும் எப்படித்தான் அத்தனை ரசனை மிக்க பார்வையாளகளை இத்தனை காலமாக நீங்கள் தக்க வைத்திருக்கிறீர்கள் என்று வாசிப்பின் சுருதி கூடி அக மகிழ்ந்து தம்பி கார்த்திகேயன் சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.








தம்பி ஷபி, கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், ஜெய், மகன் வம்சி, மகள் மானசி என எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய அரங்கம் எங்களை வேறு ஒரு மனநிலைக்கு இட்டுச்சென்றது. பாறை இடுக்குகளில் பாக்கு மரத்திலான இருக்கை அமைத்து கற்சிற்பங்கள் சுடுமண் சிற்பங்கள் வைத்து  ஒளியூட்டி, சரக்கொன்றை மலர்கள் அடுக்கி என அந்த இடமே ரசனைக்குரியதானது.

      நேரம் மெல்ல இருட்டத் தொடங்கியபோதும் எங்களால் நிகழ்ச்சியைத் தொடங்க முடியவில்லை. சிறப்பு விருந்தினர்கள் யாருமே வந்து சேரவில்லை. நானும் பவாவும் பதட்டத்தின் உச்சிக்கே போய்விட்டோம். இருட்டில் பத்து பதினைந்து நிமிட இடைவெளிக்குப்பிறகு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். தாமதத்தின் காரணத்தை மிஷ்கின் தான் சொன்னார்.





மசனக்குடிக்கு போயிருந்தபோது வழியில் கத்தி சாணைப்பிடித்து கொண்டிருந்த தொழிலாளியைப் பார்த்திருக்கிறார் மிஷ்கின். அதில் லயித்த அவர் இரண்டு கத்திகளையும் ஒரு அருவாமணையும் வாங்கியிருக்கிறார். அது உபயோகப்படுத்தப்படாமல் கார் டிக்கில் கிடந்திருக்கிறது.

      நிகழ்வன்று எங்கள் ஊர் எஸ்.பி. அவர்களே நான்கு கார்களில் ஆயுதங்களை வைத்துவிட்டு சரியாக கண்டுபிடிக்கும் போலீஸ்காரர்களுக்கு பரிசினையும் அறிவித்திருக்கிறார். அதனால் எல்லா வாகன சோதனையும் கடுமையாக்கபட்டிருக்கிறது.

போலீஸ் எங்கள் வாகனத்தை பரிசோதித்துவிட்டு, “சார் வெப்பன்ஸ் இருக்கு சார்என்ற விநாடி என்னை ஒரு கொலைகாரனாக கொள்ளைக்காரனாக அந்த வார்த்தை மாற்றிவிட்டது. பம்பரம் சீவ நான் பயன்படுத்த நினைத்த கத்தி தவறான ஒரு மனிதனின் கையில் கிடைக்கிறபோது அது வெப்பன்ஸ் ஆகிவிட்டது. ஒரு வார்த்தை வேறு மொழியில் சொல்லப்படுகிறது என்று மிஷ்கின் தன் பேச்சை ஆரம்பித்தார்.
மொழிபெயர்ப்பு அவ்வளவு எளிதான காரியமல்ல. அது சிலுவை சுமப்பது மாதிரி. சிலுவை சுமப்பதென்பது ஒரு ஏசு கிருஸ்துவால் மட்டுமே முடிந்திருந்தது. துயரப்பட்டு அவன் சுமக்கும் சிலுவை மக்களுக்கானது. அந்த சிலுவையை யார் கேட்டாலும் அவன் தரமாட்டான், தரவும் முடியாது. அப்படி ஒரு வேளை ஏசு தர முடிவு செய்தால் அதை ஒரு மொழிபெயர்ப்பாளனிடம் மட்டும்தான் கொடுக்க முடியும். அவன்தான் அதை தாங்கும் வல்லமை உள்ளவன். படைப்பாளிக்கு நிகரானவன். நான் ஏசு என்று சொல்வது இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் படைப்பாளியை.

ஷைலஜா தான் வாழ்ந்த அரபிக்கடலின் காற்றை தன் கையிலிருக்கும் ஒற்றைப் புல்லாங்குழலால் ஊதி இதயத்தில் தேக்கிவைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து நம்மை இசையால்  நிரப்புகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று மிஷ்கின் பேசி முடித்தபோது இன்னும் என் வேலைகளை சரியாய் செய்ய வேண்டும் என்ற கணத்தை நான் சுமப்பதுபோலவேயிருந்தது.





விமர்சகரும் எழுத்தாளருமான என் நண்பர் ராஜகோபால் மிக ஆழமானதொரு உரையோடு பார்வையாளர்களை அணுகினார்.  ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ருஷ்ய இலக்கியங்களைப் படிக்காமல் விட்டிருந்தால் எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு நேர்ந்திருக்கும் என்றும் கம்பன், காண்டேகர் ஆகியோரின் தொடர்ச்சியாகவே நான்  ஷைலஜாவைப் பார்க்கிறேன் என்றார். நிகழ்வு முடிந்த இந்த இரண்டு மூன்று நாட்களில் அவரை யாரென்றும் அவர் மிக சரியாக பேசினாரென்றும் திருவண்ணாமலை நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாஜி வழக்கம்போலவே அதிரடியாக, தான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ஆரம்பித்தார். தான் திருவனந்தபுரம் சென்று பால் சக்காரியாவைப் பார்த்ததாகவும் சக்கரியா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர் திருவண்ணாமலை பேச்சு வந்ததும் அவ எப்படி இருக்கா என்னோட பப்ளிஷர் ஷைலு , ஜெயஸ்ரீதான் என்னோட புத்தகங்கள் எல்லாம் ட்ரேன்ஸிலேட் பண்ணா, அவங்க ஃபேமிலியே எனக்குப் பிடிக்கும் பவாவை நான் கேட்டேன்னு சொல்லுங்க என சொல்லியிருக்கிறார். அவர் அவ்வளவு உரிமையோடு இந்த குடும்பத்தை அணுகியது வெறும் மொழிபெயர்ப்பாளர் பதிப்பாளர் உறவு முறை மட்டுமாக நான் பார்க்கவில்லை என்று ஷாஜி பேசினார்.





ஏற்புரைக்கு வந்த சிஹாபுதின் பொய்த்தும்கடவு தன் பேச்சின் மொழிபெயர்ப்புக்கு ஷாஜியை கூப்பிட்டுக்கொண்டார். ஷைலஜா எனக்கு தந்த ஐந்து பிரதிகளில் மூன்று பிரதிகளைக் குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் நண்பர்களிடம் கொடுத்தேன். அவர்களே இந்த  ‘யாருக்கும் வேண்டாத கண்தொகுப்பை பாரட்டினார்கள், அதில் ஒன்று ஷாஜி என்று அவர் நிறுத்த ஷாஜி மொழிபெயர்க்க மறுத்து அமைதியானார்.




நிகழ்வு மிக நேர்த்தியாக கவிதையாக குறைந்த ஒளியில் மிக நிறைவுடன் நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் மிக நிச்சயமாக ஒரு படைப்பாளிக்கு போதை தராது, மாறாக அவனைக் கனப்படுத்தும் பொறுப்பாக நடந்து கொள்ள வைக்கும். இன்னும் சிறப்பாக எழுத வைக்கும். எழுதுவேன்.

No comments: