Sunday, 28 September 2014

ரத்த நாளங்களில் ஊறிக்கிடக்கும் ஆசிரியம்


(எஸ்.ஆர்.வி.  பள்ளியில் வெளியிட்ட நாங்கள்' என்ற புத்தகத்தில் எனது பள்ளி மற்றும் ஆசிரியர்கள் குறித்த கட்டுரை) 

   என் முதல் ஆசிரியயை நினைக்காமல் இந்தக்கட்டுரையை என்னால் தொடங்க முடியாது. அந்த கால வழக்கப்படி தேங்காய், பூபழங்கள், வெற்றிலைப்பாக்கு, பணம் வைத்த தட்டுடன் அம்மாவின் பின்னால் பதுங்கியபடி தலைமையாசிரியரின் வகுப்பிற்கு நடந்து செல்கிறேன். காது எட்டுகிறதா என்று பார்த்தபடி சில கேள்விகள் கேட்டு என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள். ஒண்ணாங்கிளாசில் கொண்டுபோய் விடுவதற்காக அம்மா கூடவே வந்தபோது டீச்சரைப் பார்த்து நான் இன்னும் பயந்து போகிறேன். நல்ல  அடர் கருப்பில் கருநீல புடவை கட்டி ரிங் கொண்டை போட்ட டீச்சர் என்னை மிகவும் பயமுறுத்தினார். நான் கறுப்பு டீச்சர் வகுப்பில் படிக்கவேமாட்டேன் என அடம்பிடித்து அழுது புரண்டேன். என் அழுகையின் தீவிரம் பார்த்து பக்கத்து வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்த ஒரு வெள்ளை டீச்சர் என் பாட்டியை போலிருந்ததால் என் அழுகை மட்டுப்பட்டது. வெள்ளை டீச்சர் கிளாஸுக்குப் போனபிறகுதான் கைகளில் எத்தனை முட்டி இருக்கிறதென்பது புரிய ஆரம்பித்தது. அது வேறு வகையான சோகம்கருப்பு டீச்சர் என்று ஒரு ஆசிரிய மனதை எவ்வளவு புண் படுத்தியிருக்கிறேன் என்று நான் யோசித்ததேயில்லை. இருபத்திமூன்று வருடங்களுக்குப் பிறகு திருவண்ணாமலை லயன்ஸ் கிளப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்து அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். அங்கு போனபோது நான் முதல்முதலாய் சந்தித்த அந்தக் கருப்பு டீச்சரும் அதிலிருந்தார். அவர் என்னைப்பார்த்து ஏம்மா நான் கருப்புன்னு என் கிளாசுக்கு வரமாட்டேன்னு அடம்புடிச்சயே. இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா என்று பவாவைப் பார்த்து சிரித்துக் கொண்டேதான் கேட்டார். [என் கணவர் அடர் கருப்பு] ஆனால் அதற்குப் பிறகான இந்த பத்து வருடங்களில் டீச்சர் கேட்டது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் ஒரு ஆசிரிய மனதை, அது எத்தனை ஆழமாய் பதிந்திருந்தால் இருபத்திமூன்று வருடங்கள் கழித்து இப்படி வெளிப்பட்டிருக்கும். சின்ன வயதில் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் எனக்கு தெருவில் காலையிலும் மாலையிலும் கருப்பு பர்தா போட்டுக் கொண்டு வேலைக்குப் போய் வரும் முஸ்லிம் பெண்ணைக் காண்பித்து பயமுறுத்தியதன் விளைவே அதுவென்றாலும், அது புத்திக்கு புரிந்தாலும் மனசு இன்னமும் அடங்கவே மறுக்கிறது. இப்படியாவது அவரிடம் மன்னிப்பு கேட்க முயல்கிறேன்.

   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம்., முடித்துவிட்டு பெருங்கனவில் எம்.ஃபில்., அப்ளிக்கேஷனுடன் திருவண்ணாமலைக்கு வந்தேன். எப்படியும் எம்.ஃபில் முடித்து கல்லூரிப் பேராசிரியராகிவிடும் கனவு கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. ஆனால் வாழ்க்கை ஒன்றும் அப்படி கனவுகளின் மீது ஒற்றியெடுக்கும் கருணையோடில்லையே.

   அப்போதுதான் இந்தியா முழுவதும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த ஒரு தனியார் பள்ளியில் என் எதிர்பார்ப்பை மீறின சம்பளத்துடன் வேலை கிடைத்தது. படித்தது வணிக பட்டமேற்படிப்பு என்பதால் எல்.கே.ஜி. வகுப்பிற்கு ஆசிரியையானேன். அந்த இடம்தான் வகுப்பறை யாருடையதாக இருக்கவேண்டும் என்பதை எனக்கு தெளிவாக்கிய முதல் களம்.

   உடல் முழுக்க குழந்தைகளாய் பூத்திருக்கும் என்னை எனக்கே பிடித்த காலமது. அம்மா, அக்கா, சித்தி என்றெல்லாம் கலவையாய் குழந்தைகளின் அழைப்பினூடே என்னைக் கரைத்த நாட்கள் அவை. எப்போதும் வகுப்பறைக்கு வெளியே பாடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் ரயில் பெட்டியாய் எதற்கும் நிற்காமல் எங்கள் செயல்பாடுகளின் மும்முரம் பார்த்து, ஒரு வருடம் காத்திருந்தாலும் பரவாயில்லை, என் குழந்தைக்கு இந்த மேடம் வகுப்பில்தான் அட்மிஷன் வேண்டுமென்ற பிடிவாதத்தில் ஆரம்பித்து பிரச்சனை ஆனதெல்லாம் என்  காதுகளுக்கு மெல்லத்தான் வந்து சேர்ந்தது. அதற்கு பிறகான நாட்களில், ‘இவன் ரொம்பக் குறும்புப் பையன் யாருக்கும் அடங்கவேமாட்டான்’, ‘இந்தப் பொண்ணு ரொம்ப பொசசிவ் யாரோடையும் ஒத்துபோகமாட்டா’, ‘வேற ஒரு ஸ்கூல்ல சேத்தோம் டீச்சர்ஸ் டார்ச்சர்ல ஸ்கூலுக்கே போகமாட்டேன்னுட்டான்’, ‘என்னை விட்டுட்டு இருக்கவே மாட்டான் அதனால் நானும் இப்படி ஒரு ஓரமா இப்படி உக்காந்துக்கறேனேஎன்ற விதவிதமான குழந்தைகளின் கூடாரமானது என் வகுப்பு. இப்படியான குழந்தைகள் கொஞ்சம் தயங்கி, யோசித்து என் மீது கருணை வைத்து பிறகெப்போதும் இறங்கிவிடாத பிடிவாதத்துடன் எங்கள் ரயிலில் ஏறிக் கொண்டார்கள். நாங்கள் புதிது புதிதாய் படித்தோம். இசையையும் வண்ணங்களையும் வைத்து வாழ்வின் உன்னதங்களை  நகலெடுத்தோம்மனித சூழ்ச்சிகளற்ற அந்த குழந்தைகள் பச்சை மண்ணாய் தங்களை என்னிடம் ஒப்புவித்திருந்தார்கள். பள்ளி நேரத்திற்குப் பிறகும் வீட்டிற்குப் போகாத குழந்தைகளும், எப்படியாவது இன்னும் இரண்டு மணிநேரம் நீங்கள் பார்த்துக் கொள்ளமுடியுமா என்ற கேள்வியோடு அம்மாக்களும் வகுப்பு வாசலில் காத்திருந்தார்கள். இப்படியான அற்புதங்களாய் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த ஒரு ஏப்ரல் மாத காலையில் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து மறந்திருந்த வேலை வந்தது. கனவு கலைந்த மிரட்சியோடும் ஆசைப்பட்ட வேலை கிடைத்த சந்தோஷத்தோடும் கல்லூரிப் பணிக்குப் போனேன்.

   கல்லூரி அதற்கே உரிய அழகோடும் பதின்வயதின் துள்ளலோடும் இருந்தது. அந்த பொறியியல் கல்லூரியின் கலை அறிவியல் கல்லூரிக்கு அடுத்த வருடமே நான் மாற நேர்ந்தது. அவை என் நினைவில் தங்கி இனிமையாய் உறைந்து போன நாட்கள். என்னைவிட கொஞ்சமே வயதில் சிறிய பெண்கள் வண்ணத்துப்பூச்சிகளாய்  தங்கள் வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கத் துடித்த நாட்களில் நான் அவர்களோடு இருந்தேன். பேரார்வத்திலும், கட்டாயத்தின் பேரிலும், தான் நினைத்த பாடப்பிரிவுகள் கிடைக்காமல் வணிகவியல் படிக்கவும், வீட்டில் இதுதான் நல்ல படிப்பு என்றும் இது படித்தால் வேலை கிடைக்கும் என்றதாலும், தான் படிக்க முடியாமல் போனதை மகளின்மேல் ஏற்றி சுமத்த தயாராய் இருந்த பெற்றோர்களின் கனவினையும்  ஒருசேர என் வகுப்பிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் அதொன்றும் எங்கள் சந்தோஷத்தை கோருபவையாக இல்லை. கார்ப்பரேட் அக்கவுண்ட்ஸிலிருந்து தங்கள் காதல் வரை என்னிடம் விவாதித்தார்கள். அவர்கள் தங்கள் ரகசியங்களை என்னில் பாதுகாத்து சற்றும் கசிந்து விடாத கூடாரமாய் என்னை உணர்ந்தார்கள். தன்னைப் பெற்றவர்களைவிடவும் அதிகமான ப்ரியத்தைக் கொட்டினார்கள். நான் அவர்களின் எல்லா கஷ்டங்களுக்கும் களிம்பிடுவேன் என நம்பினார்கள்.  என்னிடம் வந்த அந்த இளமனங்களை நானும் ஒருபோதும் வெறுமையாய் திருப்பியனுப்பியதில்லை.

   வாழ்வின் அலை அடிப்புகளுக்கெல்லாம் திசை திரும்பவில்லையென்றாலும் சில தீவிரமான புயலுக்கு மண்டியிட்டு நிற்கதானே வேண்டியிருக்கிறது. அப்படிதான் நானும் கல்லூரியிலிருந்து பதிப்பக வேலைகளுக்கு வரவேண்டியதாயிற்று. கல்லூரியைவிட்டு வெளியே வந்த இந்த பத்து வருடங்களில் இன்னும்கூட பேர் வராத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வரும். சுவிட்சர்லாந்திலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ ஒரு குரல், ‘மேடம் நான் படித்த என் மொத்த பள்ளி கல்லூரி வாழ்க்கையில் உங்களைப்போல ஒருத்தரை பார்த்ததில்லை. டீச்சர்ஸ் டே ன்னா உங்களை மட்டும்தான் நியாபகம் வருது. எங்களை எப்படியெல்லாம் உருவாக்கினீங்க? அதான் மேம் நன்றி சொல்லக் கூப்பிட்டேன்என்றோமேம் சயின்ஸ் படிச்சிருந்த என்னை காமர்ஸ் படிக்கச் சொல்லி வீட்டில் கட்டாயப்படுத்தினபோது முதல் ரெண்டு மாசம் அழுதுகிட்டேதான் வந்தேன். அதுக்குப் பிறகு உங்களாலதான் சப்ஜெக்ட் மேல ஆர்வமே வந்தது. அது இப்ப என்னை சி.. இண்டர் முடிக்க வச்சிருக்கு. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல மேம்என்றோஃபேஸ் புக்கில் உங்களையும் சாரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம், இது எங்க மேடம்ன்னு சொல்லகூட முடியாத மொழி தெரியாத ஊரில வந்து மாட்டின மாதிரி இருக்கு. நீங்க மட்டும்தான் வெளிச்சக் கீற்றா இருக்கீங்க என நெகிழும் மாணவிகளும் இன்னும்கூட தங்கள் பிரச்சனைக்கு என்னிடம் பேசிவிட்டால் போதும் என்று நினைக்கும் மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கை விதையை என்னிலிருந்து தூவ முடிந்த நிறைவில் நானுமிருக்கிறேன்.

   ஆனால் ஆசிரியம் என்பதில் என் முதல் அனுபவம் வலி நிறைந்ததாகவே இருந்தது. எனக்கான ஆசிரியைகள் என்னுடையவர்களாக இல்லை. என் கனவை, துள்ளலை, தோட்டத்திற்கு வெளியே பூக்க நினைக்கும் என் தாவர பகிர்தலை, நினைவுகளை யாரும் ஏறெடுத்ததேயில்லை. ஆசிரியப் பணியை வேலையாய், சம்பளமாய், ரிங் மாஸ்டரிடம் மாட்டிக்கொண்ட விலங்கினை பயிற்றுவிப்பதாய் நினைப்பவர்களிடம் உழன்ற நாட்களாகவே என் பால்யம் கழிந்தது. மழை நாட்களில் ஜன்னலுக்கு வெளியே மேகக் கூட்டங்களை, நூல் மழையை, அரிதாய் விழும் ஆலங்கட்டிகளை பார்க்கத் துடித்த என் விரிந்த விழிகளை அவர்களின் பார்வை சந்தித்ததேயில்லை.
   
   என்னுடைய 17 வருட பள்ளிக் கல்லூரி வாழ்வில் என் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒன்றோ இரண்டோ தவிர அத்தனைபேரும் என் நியாபக் அடுக்குகளை காலியாகவே வைத்திருக்கின்றனர். என்னை விட நான்கைந்து வயதே கூடின இந்திரா மிஸ் எனக்கு மிக நெருக்கமாக சிலபஸ் தாண்டி என் கவிதைகளுக்கு மொழியாய், நான் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் என் ஒவ்வொரு செயலுக்கும் இசைவாய் இருந்தார்கள். என்னோடு மைதானத்தில் விளையாடினார்கள், எனக்காக சுற்றுலா ஏற்பாடு செய்தார்கள், அதற்காக எங்கள் வீட்டில் அனுமதி பெற வந்தார்கள், என்னைக் கல்லூரியில் சேர்த்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள்.என் சினேகிதி போல, நான் நேசித்த மலர் என்னை நேசித்ததுபோல, நான் விரும்பின வாழ்வை எனக்களித்தார்கள். அவரே என் படிப்பையும் அதன் மூலம் என் வாழ்வையும் வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்ற முதல் ஆசிரியை. இந்திரா மிஸ் போல வகுப்பெடுக்கவேண்டும், அவர்போல பாடங்களைப் புரிய வைக்கவேண்டும், என்னுடைய மாணவர்கள் நான் இந்திரா மிஸ்ஸை நேசித்ததுபோல என்னோடு நேசமாய் வைத்திருக்கவேண்டுமென்று நான் ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.

   அதற்குப் பிறகான பல்கலைகழகப் படிப்பில் என்னை ஈர்த்த, குருவாய் நான் மதித்தது எங்கள் நமச்சிவாயம் சாரைத்தான். கண்களை மூடிக்கொண்டு சங்கீதம் கேட்பதுபோன்ற ஈடுபாட்டுடன் மார்க்கெட்டிங் கிளாசஸ் கேட்கலாம். மாலைகளில்  விருப்பப் பட்ட மாணவர்களுக்காக பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்பெடுத்தால் நம்மை நாமே மிக உயர்வாய் மட்டுமல்ல நம்மால் எல்லாம் முடியும் என உணர வைப்பார். எனக்குத் தெரியாமலே என் கடமையை உணரவைத்து அதற்கேற்ப என் பாதையை வகுத்து அதில் பயணிக்க தைரியமும் தெம்பும் ஏற்படுத்தியவர். ஒல்லியான உயரமான மிஸ்டர் க்ளீன் என்று பார்த்தவுடன் சொல்லவைக்கும் நமச்சிவாயம் சாரும் இந்திரா மிஸ்ஸும் மட்டும் ஏன் என் மனதில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நிலையாய் நிலைத்திருக்கிறார்கள். அவர்களின் மீதிருந்து வரும் சந்தனம் கலந்த விபூதி வாசனை கூட என் புலன்களில் தங்கிவிட்டது எப்படி? எனக்கு மீதி பதினைந்து வருடங்களில் எத்தனைஎத்தனை ஆசிரியர்கள் வந்து போயிருப்பார்கள்? ஏன் அவர்களில் ஒருவர்கூட எனக்கு நெருக்கமாகவில்லை? நான் அவர்களிடமும் எவ்வளவெல்லாம் கற்றிருப்பேன்? எனக்கு சொல்லிக்கொடுக்க அவர்களும் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? ஆனாலும் ஆனாலும் வேலிகளைக் கடந்து முளை விட்டிருந்த என் துளிரை அந்த இரண்டுபேர்தான் கண்டடைந்திருந்தார்கள். நீரூற்றி பாதுகாத்தார்கள், பூ பூக்கக் காத்திருந்தார்கள். எல்லோருக்கும் அப்படி தோள் மீது ஒரு கரம் நான் இருக்கிறேன் என்று விழவேண்டியிருக்கிறது. அது ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் வானமே எல்லையாக நீள்கிறது.

  இந்தக் கட்டுரையை அப்படியே கணினியில் அடிக்க ஆரம்பித்தபோது ஆறாங்கிளாஸில் படிக்கும் என் மகள் மானசி கூடவே வாசித்தாள். சட்டென அவளிடம் திரும்பி, ‘உன் வகுப்பு எப்படி இருக்கணும்னு நீ நெனக்கறடாஎன்று கேட்டேன். தடையில்லாமல் அவளிடமிருந்து பதில் வந்தது. ‘என்னோட க்ளாஸ் டீச்சர்ஸோட க்ளாசா இருக்கக் கூடாது, நாங்களும் கலந்துக்கறதா இருக்கணும், சப்ஜெக்ட் தாண்டி எல்லா விஷியங்களையும் விவாதிக்கணும், கரண்ட் அஃபேர்சை பேசணும், எல்லாத்துக்கும் மேல எங்களை ஃபிரெண்ட்லியா நடத்தற டீச்சர்ஸ் மட்டுமே இருக்கணும் என்கிறாள்.

   எல்லா காலகட்டத்திலும் குழந்தைகளோ பெரிய பிள்ளைகளோ அப்படியேதான் இருக்கிறார்கள். தன் மேல் விழும் மழைத்துளிக்காய் உருகி கரைகிறார்கள். ஆனால் நாம்தான் இன்றைய காலகட்ட குழந்தைகள் சரியில்லையென்றும் எந்த நேசத்தையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்றும் சொல்கிறோம். அப்படியெல்லாம் இல்லை. நிலவு எப்போதும் அழகாய்தானிருக்கிறது, தண்ணென்றுதானிருக்கிறது.  

Thursday, 27 February 2014

நாங்கள் இருக்கிறோம் அப்பா…



’’குட்மார்னிங் ஷைலு, நான் பாலு பேசறேன்’’
ஒவ்வொருமுறை என் அலைபேசியில் அவர் பெயர் வரும்போதும் நான் பதற்றமாகிவிடுவேன். இயல்பாய் பேசத்தொடங்க பத்து நிமிடங்களாவதாகும்.  எவ்வளவு பெரிய ஆளுமை அவர். எத்தனை பேருக்கு ஆதர்ஷம், கனவு, வாழ்நாள் லட்சியம், தொலைதூரத்து ஏக்கம், மட்டுமல்ல தன் மைல்கற்களை தானே தாண்டிய ஒரு அபூர்வம், அதன் வழி சிந்தாமலிருக்கும் பூரணத்துவம்.
.
‘‘ஷைலு என்னை அப்பான்னு கூப்பிடும்மா, மற்றவங்க என்னை கூப்பிடறதை விட நீ  கூப்பிடனுன்னு  ஆசையாயிருக்கம்மா’’ என்ற அவரை அப்பா என்று என்னால் கடைசிவரை  கூப்பிட முடிந்ததில்லை. ஒரு மஹா சமுத்திரத்தை எனக்குள் மட்டும் தேக்கி வைத்திட எனக்கு தைர்யம் வந்ததேயில்லை.
‘‘நான் கெளம்பறேன் ஷைலம்மா’’ என்று ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் மறக்காமல்  சொல்வீர்களே, இறுதி சந்திப்பில் மட்டும் என்னிடம் சொல்லிக்கவேயில்லயே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்தபோது ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் ஷைலு, நல்லாயிருக்கேன் என நான் நம்பும்படி சொன்னீர்களே சார்.  உள்ளுக்குள் எதை மறைத்து வைத்திருந்தீர்கள்? ஏன் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? பிறந்து சில மாதங்களிலேயே அப்பாவை இழந்த எனக்கு எதற்காக அந்த உறவின் தளிர்களை தரிசிக்க வைத்தீர்கள்? தலைகோதி கைபிடித்து எதற்காக அதன் எல்லைவரை அழைத்துசென்றீர்கள்?
ஆனாலும் ஆனாலும் எனக்குள்  இதுவரை சேமித்துவைத்திருக்கும் நினைவுகள் போதுமெனக்கு. இந்தப் பேரிரைச்சலிலும் நான் நிறைவடைந்திருக்கிறேன்.
நான் நல்ல சினிமாவை பார்க்க மட்டுமே தெரிந்தவள். அதை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடத் தெரியாது. எனக்கு அன்பை பெறவும், பொத்தி பாதுகாக்கவும் அதனை அடுத்த நெஞ்சுக் கூட்டிற்குள் கடத்தவும் மட்டுமே தெரியும், அதனால்மட்டுமே நான் அவருடைய மகளானேன். பார்க்கிற எல்லோரிடத்திலும், இது  ‘ஷைலு’ என் மக என நானே கூச்சப்படுமளவுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்.
 தன் அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காக திருவண்ணாமலைக்கு வந்த அவர் தினமும் மாலையில் ‘ வம்சி’  அலுவலகத்திற்கு வருவார். மிகவும் வித்தியாசமானதொரு காஸ்ட்யூமில் தொப்பியை கழற்றி வைத்துவிட்டு தலையில் துண்டு கட்டி அதை தோளுக்கும் சற்று கீழே தொங்கவிட்டுக் கொண்டு வந்து உட்காருவார். சென்னையில் கூட கிடைக்காத உலகத் திரைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறீர்களே என ஆச்சரியப்பட்டு கை நிறைய படங்களை அள்ளி சேகரித்துக்கொள்வார். புத்தகக் கடைக்கு வரும் நண்பர்களுக்கு அவரின் இருப்பு பேரதிர்ச்சியாக இருக்கும். என்ன சாப்பிடலாமென்றால் ‘பகோடா சொல்லம்மா, கார பொரி சாப்பிடலாம்’ என்று கேட்டு சாப்பிடும் அவரை தெருவில் போவோர்களும் வருபவர்களும் அதிசயமாய் பார்த்துகொண்டே போவார்கள். கடைக்குள்ளே வரும் வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதை நான் பார்த்ததுண்டு. ஒரு டீ குடித்துவிட்டு நாங்கள்  மலை சுற்றும் வழியிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று கதைகளாகப் பேசிக்கொண்டிருப்போம். தமிழின் ஆகச் சிறந்த கதைகள், மொழிபெயர்ப்பு கதைகள்  தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் , தன் சினிமா அனுபவங்கள்  தான் எடுக்கப் போகும் திரைப்படங்கள் என்று சுழலும் அப்பேச்சிலிருந்து துண்டித்துக்கொள்ள எப்போதும் மனசே வந்ததில்லை.
 இரு நாட்கள் எங்களுடன் தங்க வந்திருந்த சாரும் மவுனிகாவும் ஒரு மதிய உணவிற்கு பிறகு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அன்று மாலை அவரின்  கதைநேரக்கதைகளை திருவண்ணாமலை பார்வையாளர்களுக்காக திரையிட்டோம். மிகக் கண்டிப்பானதொரு வாத்தியாராய் மாறி படம் பார்ப்பதற்கு வைக்க வேண்டிய கலர், காண்டிராஸ்ட், ஒலி என  சொல்லித் தருகிறார். ஆப்பரேட்டருக்கு அது சரி வர புரியாதபோது அவரே குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதை சரி செய்கிறார். தன் படைப்பு மிகச் சரியான வடிவத்திலும் துல்லியத்திலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்ற ஒரு படைப்பாளிக்கே உரிய ஆர்வம் பிரதிபலித்த நிமிடங்கள் அவை. என்னுள் பிரமிப்பாய் நிலைபெற்றதும்கூட.
அடுத்த நாளே வாய்த்த  இரண்டு மணி நேர கார் பயணம் போதும் என் வாழ்வு அர்த்தப் பட.  மாலையும் இரவுமல்லாத  மங்கும் பொழுது அது. சில நேரங்களில் நாம் நினைக்கும்போதே மழை பெய்யுமே அது போல, என்னவென்றே தெரியாமல் காலையிலிருந்தே மனம் சந்தோஷத்தில் அலை அடிக்குமே அது போல முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சார் சொல்லும் ஒவ்வொரு கதையையும் நானும் படித்திருந்தேன். ஜி.நாகராஜன், தி.ஜா., சுந்தர ராமசாமி, அவருக்கும் எனக்கும் எப்போதும் பிடித்த பிரபஞ்சன் என அடித்த சுழல் லா.ச.ரா. வில் வந்து நிலை கொண்டது. லா.ச.ரா.வின் பச்சைக் கனவொளியில்  கிறங்கிய பேச்சின் நடுவே ’எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா  நான் கொஞ்சம் உன் மடியில் படுத்துக்கறேனே’ என பின்னிருக்கையில் என் மடியில் படுத்து உறங்கிப் போன மவுனியை எங்கள் கதாநாயகர்களும் நாயகிகளும் தொந்தரவு செய்யவேயில்லை.
இந்த ஐந்தாறு வருடங்களில் அநேகமாய் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசுவார். தன் சினிமா பட்டறையில் உச்சமாக இலக்கிய வகுப்பெடுத்த பெருமிதத்தை, தன் மாணவன் மிகக் கண்டிப்பாக நவீன இலக்கியம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை, எதோ ஒரு மாணவன் கதைகளைப் படித்தபின் எழுதிக்கொடுத்த சினாப்சிஸில் தன்னை கரைத்துக் கொண்டதை, அவருக்குப் பிடித்த அவருடைய மவுனி புள்ளிகுத்த முடியாத காரணங்களால் அவரிடம் பேசாமல் இருந்த துக்கத்தை பேசி ஆற்றிக் கொள்ள, எப்போதும் படைப்பாளியிடம் அந்தஸ்து தள்ளியே நிற்கும் மாயைக்கு தான் இரையாகாத பேராண்மையை, இந்த வயதில் தான் தனியனாய் வாழ நேரிட்ட துயரம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் அடுத்த அழைப்பிலேயே மழை நீர் முகத்தில்பட்ட குழந்தையாய் குதூகலிக்கவுமான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருந்தது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்ல தான் தான் மிகப்பொருத்தமானவன் என்றும், அவனவன் தன் வாழ்க்கையிலிருந்துதானேம்மா படம் எடுக்க முடியும், என் படங்கள் எப்போதும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாவேதான் இருக்கு என்றும்  சிலாகிப்பார். நான்தான் அவரின் சோகங்களிலிருந்து வெளிவரத்தெரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
.
2011 சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்த என்னிடம்  வந்து  உட்கார்ந்து ’ஒரு டீ சொல்லம்மா’ என்று பேச ஆரம்பித்தார். வழக்கம்போல மானசி தாத்தாவிற்காக ப்ளாக் டீ வாங்கி வர ஓடினாள். வெற்றியோட  ஆடுகளம் படம் பாத்திட்டு நேரா வரேம்மா, அய்யோ எப்படி எடுத்திருக்கான், ஜட்ஜஸ் சரியா அமஞ்சா இந்தப்படம் ஆறு அவார்டு வாங்கும், ஒரு வேளை ஜூரி அவார்டு ஜெயபாலனுக்கு கிடைக்கும். சொந்தக்குரலில் பேசியிருந்தால் தேசிய விருதே கிடைக்கும் என்றார்.  அந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட  தேசிய விருதுகள் அவ்விதமேயானது. விருது அறிவிக்கப்பட்ட அன்று அவருக்கிருந்த சினிமா நுட்பமும் சரியான திரைப்படம் குறித்த தன் அவதானிப்பும் தன்  வாழ்வை சினிமாவில் மட்டுமே வைத்து கரைத்துக்கொண்டிருக்கும் அக்கலைஞனின் அசாத்திய நம்பிக்கையும் என்னை உறைய வைத்தது.
என்  ‘வம்சி புக்ஸ்’ சில புத்தகங்களை பதிப்பிக்கும்போது ஒரு பதிப்பாளராய் பெருமிதத்தில் லேசாய் என் மனம் ததும்பிக்கொள்ளும், அதில் எப்போதும் எங்கள் பாலுமகேந்திரா சார் தான் இருப்பார். எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் தான் உருவாக்கிய கதைநேரக்கதைகளை மூன்று பாகங்களாகவும் தனக்கு எப்போதும் ஃப்ரெஷ்ஷாக பார்க்கத் தோன்றும் வீடு படத்தையும் புத்தகமாக்கி அவர் கைகளில் கொடுத்து அந்த முக சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் நான் தரிசித்துவிட்டேன். அட்டை வடிவமைப்பில் சின்ன சின்ன திருத்தங்களைக் கூட மிக நுட்பமாகப் பார்த்து தன் திரைப்படக் கல்லூரி அலுவலகத்திற்கு டிசைனரை வரச்சொல்லி, திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி சரிபார்த்து என அவர் காட்டும் பொறுமையும் படைப்பின் மீதான அக்கறையும் நாம் அவரிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டியது. வீடு திரைக்கதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்வது தொடர்பாக ஒரே நிமிடத்தில் முடிவெடுத்தோம். ‘ என் அம்மாவுக்குன்னு போடலாம்மா. சரிதானே ஷைலு’ என்றவர் மிக அற்புதமான கவிதையாய் ஒரு சமர்ப்பணம் எழுதி அனுப்பினார்.
.மனுஷ்யபுத்திரனின் கவிதை வரி போல ‘ நாளைக்கு வந்தேன்’ எனச் சொல்லும் குட்டி  இளவரசியின் மனசொத்தவர்.காலம் நேரம், ஒரு தேதி வைத்து வேலைகளை முடிப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் கூப்பிடுகிறேன்.
’சார், ஷைலஜா பேசறேன் சார்’
’அய்யோ ஷைலு  நம்புவியாம்மா நீ நானே கூப்பிடணும்னு இருந்தேன். ஐ வாஸ் சேர்ச்சிங் யுவர் நெம்பர். புது நெம்பர் உன்னோடது சேவ் பண்ணியிருந்தேன். அத எனக்கு எடுக்கத் தெரியல ஷைலு. ஐம் சாரி ஷைலு வீடு பட டிவிடியை நான் இன்னும் முன்னாடியே குடுத்திருக்கணும்மா’
‘சார் தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்ல சார், நான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கமட்டும்தான் கூப்பிட்டேன்’
’எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்கேன். ஐ ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்’
பேசி இரண்டு நாட்கள்கூட முழுமையாய் கடந்துபோகவில்லையே. என்னவாயிற்று சார் உங்களுக்கு?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், மாலையில் எங்களுடன் மூன்று மணிநேரம் இருப்பார். கூட்டம் அதிகமாகயிருக்கும் நீங்கள் வரவேண்டாமென்றால் ‘ஆஃபீஸ்ல போரடிக்குது ஷைலம்மா, என் பேரப் பிள்ளைகளோட இருக்கேனே’ என்று ஆசை ஆசையாய் வருவார். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வாசகனையும் சினிமா தாகம் கொண்டவர்களையும் பெயர் கேட்டு  ’வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா’ என்று எழுதி தேதியிட்டு கொடுத்து நெகிழவைப்பார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளத் துடிக்கும் எந்த இளமனதையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை. இனி நான் நிறைய டெலி ஃபிலிம் எடுக்கப்போகிறேன். சக்காரியாவின் கதைகள் தனக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறதென்றும் அவருடைய  ‘யாருக்குத்தெரியும்’ கதை தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றென்றும் ஜெயஸ்ரீயிடம் பேசினார். அவள் மொழிபெயர்த்த யேசுகதைகள் தொகுப்பைப் பற்றி நிறைய நேரம் அவளோடு விவாதித்தார்.
’இன்னக்கி இங்க வர்றதுக்கு முன்ன ஒரு சின்ன நாட் மனசிலப் பட்டுதும்மா, கேளு’
என்று அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப்பற்றிய குறும்படத்திற்கான கதையைச் சொல்கிறார். பிண்ணனியில் அன்னலஷ்மி என்று யாரோ யாரையோ கூப்பிடுவதைக்கேட்டு அதிர்ந்து, பின் சிரித்துக் கொண்டே பதின் வயதில் தனக்கேற்பட்ட காதலையும் அவள் தனக்கு சொல்லிக்கொடுத்த காமத்தையும் சொல்லி சிரிக்கிறார்.
நானும் பவாவும் சேர்ந்து நண்பர்களுக்காக ஒரு சிறு கல்வீடு கட்டினோம். அதன் திறப்புவிழாவை  எங்கள் மகன் வம்சியின் பிறந்த நாளன்று வைத்திருந்தோம். அந்தக் கல்வீட்டின் தரையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்த அவர், ‘என் அம்மா ஒரு சந்தோஷமான மனுஷி. அவள் வீடு கட்ட ஆரம்பித்ததும் தன் எல்லா சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள். அந்த வலியின் மிச்சம்தான் என் ‘வீடு’ ஆனால் என் மகள் ஷைலு இந்த வீட்டைக்கட்டி தன் சந்தோஷங்களை இதில் நிறைத்திருக்கிறாள். இது அசாத்தியமான ஒன்று.  என கவிதையாய் பேசிக்கொண்டே போனார். மாலையில் ஒற்றை அறை கொண்ட எங்கள் நில கெஸ்ட் ஹவுசை திறந்துவைத்தபோது நாங்கள் விரும்பி அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் அபூர்வமாய் எங்களுக்கு நிலைத்துப் போனது.
சென்னைக்கு செல்லும்போதெல்லாம் ஒருமுறை அவரைப் பார்த்து விடுவதும் ஒன்றாய் ஒருவேளை சாப்பிடுவதுமாய் திரும்பிவருவோம். என்கூட தங்க மாட்டேங்கிறீங்க என்று  அவருக்கு பெரிய ஆதங்கமுண்டு. வேறு எந்த வேலையும் இல்லாமல் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமென்று சென்னை சென்றபோது அவரிடம் நாங்கள் அங்கு வந்து தங்குவதாகச் சொன்னோம். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். நானும் பவாவும் ஜெயஸ்ரீயும் நண்பருமாய் போவதற்குள் ஒரு வகுப்பறையை ஒழித்து சுத்தம் செய்யவைத்து புதிய படுக்கைவிரிப்புகள், தலையணைகளில் ஆரம்பித்து என்னென்ன தேவையோ அவ்வளவையும் செய்து மூன்றாம் நாள் திரும்பி வரும்போது பெற்ற தகப்பனைபோல மருமகனுடன் செல்லும் என்னை கண்ணீர் மல்க கார்க் கதவை அடைத்துவிட்டு நின்ற அந்த பிரம்மாண்ட உருவம் எனக்கும் பவாவிற்கும் வாழ்நாளில் மங்கிப்போகாதது.
 இப்போது நினைவுகள் ஊற்றெடுத்து பொங்கி பொங்கி வார்த்தைகளுக்கு வழிவிடுகிறது.
திரைகலைஞர் மம்முட்டியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து பெயர் வைப்பதில் யோசனையாக இருந்த நாட்களில்  ‘மூன்றாம்பிறை’ என்ற தலைப்பு ஒத்து போகிறது. அந்த தலைப்பிற்காய் நான் அவரிடம் அனுமதி கோருகிறேன். ‘ very good ஷைலம்மா, நல்ல தலைப்பு அது, மூன்றாம்பிறையைக்  கொஞ்ச நேரம்தான் பார்க்கமுடியும். ஆனால் அந்த கொஞ்ச நேரத்திற்குள் நல்ல காரியங்கள் பலதையும் செய்வார்கள். அதயே வைய்யம்மா ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். பின்னாளில் என் வலைதளத்திற்கும் அதுவே பெயரேயானது.
’பவா என்றொரு கதைசொல்லி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் படத்தை வெளியிட்டு பேசிக்கொண்டேயிருந்தார். மொத்த உரையும் மிக நெருக்கமாக குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி எங்களைக் கூச்சத்திலும், அதீத நெகிழ்விலும் கரையவைத்தார். பத்துமுறையாவது கண்கலங்கி கைதொழுது நின்றிருப்பேன். பவாவிற்கு படைப்பாளி எப்படி குடும்பத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் படைப்பாளியின் மனைவி என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றும் அதையெல்லாம் என் மகள் ஷைலுக்கு நீங்கள் கொடுக்கக் கூடாதென்றும் தன் அனுபவத்திலிருந்து பேசித்தீர்த்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே  எஸ்.எல்.ஆர். கேமராவில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு தாத்தா பேசுவதைப் படம் எடுத்து தான் எடுத்த படத்தைத் திருப்பி பார்த்த வம்சியை அவ்வளவு கூட்டத்திலும் கவனித்திருக்கிறார். பேச்சின் நடுவே ’வம்சி நாங்களெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதை லேபில் கொண்டுபோய் கொடுத்து அவன் டார்க்ரூமில் கொண்டுபோய் கழுவி எடுத்திட்டு வற்ரவரைக்கும் பொறுமையாய் காத்திருந்து பெற்ற பிள்ளையைப் பார்ப்பதுமாதிரி பார்ப்போம். புகைப்படம் எடுத்தவுடன் திருப்பி பாக்காதே. அப்படி பாத்தா நீ எடுத்த படத்துமேல உனக்கு நம்பிக்கையில்லன்னு அர்த்தம். எடுப்பதற்குமுன் இதுதான் நான் எடுக்கபோற ஃப்ரேம்ன்னு மனசில ஃபிக்ஸ் பண்ணு என்று அவனுக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தார்..
வம்சியையும் மானசியையும் அப்படி பிடிக்கும் அவருக்கு. பிள்ளைகளை வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாலை வாக்கிங் போய்விட்டு வரும்போதே காய்கறிகள் வாங்கிவந்து தானே ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து தாத்தாவும் பேரபிள்ளைகளுமாய் சாப்பிட்டு விளையாடின நாட்களை இனி நான் அவர்களுக்கு மீண்டும் தர முடியாமல் காலம் உறையவைத்துவிட்டதே.
 நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் கேட்டார்,
 ‘வம்சி என்ன பண்ணபோறான்மா?’
அவன் இப்ப சிக்ஸ்த் படிக்கிறான் சார், பரோடாவில் போய் டிசைன்ஸ் படிக்கணும்னு சொல்றான் சார்
இல்லம்மா அவன் என்னமோ எங்கிட்ட வந்திடுவான்னுதான் தோணுது
காலம்தான் எந்த கருணையும் இல்லாமல் ஓடுகிறதே. இரண்டு வருடங்களுக்கு முந்திய ஒரு டிசம்பர் 31 இரவு பத்து மணியிருக்கும். குழத்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சட்டென்று வம்சி சொல்கிறான் ’அம்மா நானொரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்’
சின்ன சின்ன மன அசைவிலும் உடல் மொழியிலும் சிதறின துளிகளைக் கொண்டு ஒரு மனிதன் ஒரு குழந்தையை எப்படி அவதானித்திருக்கிறார் என்று நான் மீண்டுமொருமுறை ஆச்சரியப்பட்டு போனேன்.
நானும் ஜெயஸ்ரீயும்  அவரைபோய் பார்த்த ஒரு மதிய வேளையில், நான் மொழிபெயர்த்த  ‘சுமித்ரா’ நாவல் பற்றி பேச ஆரம்பித்தோம். இந்த நாவல் படமாக வந்ததையும் அது சரியாக எடுக்கப் படவில்லையென மூல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் வருத்தப்பட்டார் என்றும் சொன்னேன். மிக கடுமையாகக் கோபம் வந்துவிட்டது அவருக்கு, கதை மட்டும் தான் எழுத்தாளனுக்கு சொந்தம், அது படமாவது ஒரு ஃபிலிம் மேக்கருக்கானது. அது அந்தக்கதையின் மறு ஜென்மம். அது பற்றி எழுத்தாளன் பேசவேகூடாது என்றார். பேச்சு அப்படியே அப்போதுதான் பலசூறாவளியில் அகப்பட்டுவந்த ‘ விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி வந்தது. கமல் ஒரு அசாத்தியமான கலைஞன்,  இந்த படத்தில கமல் வச்ச ஒரு ஷாட்டைக் கூட என்னால வைக்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார்.
வம்சியைப் பற்றி எப்போதும் விசாரித்துக் கொண்டேயிருப்பார்.
’ஷைலு வம்சி இப்ப என்ன பண்றான்?’’
நிறைய வேர்ல்டு கிளாசிக்ஸ் பாக்கறான் சார். அவனுக்கு போட்டோகிராபிதான் விருப்பமா இருக்கு சாந்தினிகேதன் போய் படிக்கப் போறானாம் சார்’.
’வெரி குட், ஆனா அதுக்கு எதுக்கு அவன் அங்கேயெல்லாம் போணும், இன்னும் மூணு வருஷம் முடிச்சிட்டு தாத்தாகிட்ட வரச்சொல்லம்மா. அவன நான் பாத்துக்கறேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா உருவாக்கிக் காட்டறேன்.
கடைசிவரை தாத்தாவின் கை பிடித்து சினிமா மொழி கற்க என் மகனுக்கு வாய்க்காமலே போய்விட்டது.
’ஷைலு அவங்கிட்ட ‘ சந்தியாராகம்’ படம் இருக்கா?’
’இல்ல சார்’
’அப்படியா’ என டேபிளுக்குக் கீழே குனிந்தவர் ஒரு டிவிடியை எடுத்து பொறுமையாய் ‘ என் அன்பு பெயரன் வம்சிக்கு, வாழ்த்துக்களோடு தாத்தா பாலுமகேந்திரா’ என்று தன் அழகான கையெழுத்தில் எழுதி ’வம்சிகிட்ட கொடம்மா’ என்றார். அவர் எழுதி முடிக்கும்வரை எழுந்துநின்று பெருகும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் நின்றிருந்தேன். எனக்குத் தெரியும் தமிழ்நாட்டில் அந்த படம் கிடைக்காமல் தேடியலையும் எத்தனை சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்று.
 மகனே தாத்தா கை பிடித்து அழைத்து செல்லவில்லையென்றாலும் உனக்கான திசையையும் நீ முன்னெடுத்து செல்ல வேண்டிய அக்கினி குஞ்சினையும் உன்னிடம்தான் விட்டு சென்றிருக்கிறார். அதை இதயத்தில் ஏந்திக் கொள்.
’ஷைலு வாம்மா நாம படம் பாக்கலாம்’ என கூட்டிப் போய் தான் இதுவரை எடுத்த தலைமுறைகள் படத்தின் சில காட்சிகளை எனக்கு போட்டுக் காண்பிக்கிறார். அதே அறையில் உட்கார்ந்து  ஒரு க்ரீன் டீ குடித்துக் கொண்டெ பெயரிடப்படாத அக்கதையை முழுமையாகக் கேட்ட நியாபகங்கள் நெஞ்சில் முட்டுகிறது. படத்தில் சுப்புத்தாத்தாவாய் மெல்ல மெல்ல நடந்து, கண்களின் ஓரம் ஈரம் காட்டி உட்கார்ந்திருக்கும் சாரைப் பார்த்து, கால் தடுக்கி விழும் தாத்தாவைப் பார்த்து பதறி விழுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாய் அவை மாறிப் போகும் உன்மத்தத்தில் பல காட்சிகள் தெரியாமல் கண்ணில் நீர் முட்டுகிறது. எழுந்து வெளியே வருகிறோம். சினிமா பட்டறையில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறார்கள். அதை உடனே உணர்ந்தவர், ’இவங்க பேரு ஷைலு, பெஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர். என்னோட படம் மியூசிக்குக் கூட போகாத கட்டத்தில நான் இதுவரைக்கும் யாருக்கும் போட்டு காண்பிச்சதில்ல, சினிமால இருக்கற எந்த கொம்பனுக்கும் நான் காட்டமாட்டேன். ஆனா நான் ஷைலுக்கு காட்டுவேன், பிக்காஸ் ஷீ ஈஸ் மை டாட்டர்’ என்கிறார்.
’ஷைலு’ என பிரியம் ஊறின வார்த்தைகளில் என்னை அழைக்க இனி யார் இருக்கிறார்கள்? மெல்ல என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வரும் கால்கள் எங்கே?
கண்ணாடிப்பெட்டிக்குள் என்னைப்பார்த்து பேசாமல் படுத்திருக்கும் அவரைப்பார்த்த துக்கத்தில் அருகில் நின்ற ‘சுகா’வின் கழுத்தைக்கட்டிக்கொண்டு வெடித்து அழுகிறேன்.  சுகாவும் என்னுடன் சேர்ந்து  பதில் தெரியாது உடைந்து அழுகிறார்.
ஆனால் அப்பா, என் அன்பான அப்பா, ‘ ஷைலு நான் என் கடைசிகாலத்தில் திருவண்ணாமலையில்தான் இருக்கப் போகிறேன். நீயும் பவாவும்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சொன்னதை ஒரு மகளாக  நான் நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் மகனிடமும் அகிலா அம்மாவிடமும்  வேண்டி உங்கள் இன்னொரு மகன் பாலாவிடம் பெற்ற அஸ்தியை கையில் ஏந்தியபடி மனசும் உடம்பும் பதறப்பதற நிற்கிறோம். நானும் பவாவும் சிறிது சிறிதாய் செப்பனிட்டு பிள்ளைகளுக்காகவும் நண்பர்களுக்காகவும் உருவாக்கியிருக்கும் எங்கள் நிலத்தில் அதை விதைத்து, எங்களோடு நீங்கள் கலந்திருக்கிறீர்கள்.
கொழும்பில் மட்டகளம்பு மாகாணத்தில் அமிர்தகழி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த அந்த கால்களும் திரும்பி சொந்த மண்ணிற்குப் போகவே முடியாமல் போனதற்காய் கடைசி நிமிடம்வரை அழுது தீர்த்த கண்களுமாய்  என் ஆசான் நாடற்றவனாக மின்சார மயானம் நோக்கிப் போகிறார் என்று சோமீதரன் கதறினான். அது இல்லை.
உங்களை இதயத்தில் ஏந்திக் கொண்ட பல ஆயிரம் பிள்ளைகளாய்  நாங்கள் இருக்கிறோம்.  எப்போதும் நீங்கள் சொல்வதுபோல இந்த பிரபஞ்ச சக்தி எங்களை உங்களிடமே எப்போதும் தக்க வைத்திருக்கும்.  


                                  
  






Wednesday, 8 January 2014

2014 வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள்


மிகுந்த நிறைவோடிருக்கிறேன். நான் நினைத்தமாதிரி வேலை பார்த்து எல்லா புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறேன். இதன் மூலம் தங்கள் படைப்புகள் தந்து என்னை நம்பினபடைப்பாளிகளுக்கு நேர்செய்திருக்கிறேன். நான்நிறைந்திருக்கிறேன். அந்த மனநிலையில் வம்சியின் புதியபுத்தகங்களின் அட்டைவடிவமைப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.