Monday, 18 November 2013

இத்ரமாத்ரம்


நேற்றிரவு பிள்ளைகள் எல்லோரும் விடுமுறைக்காக திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள். ஹரியும் வம்சியும் சென்னையில் ஒரே வீட்டில் இருந்து வந்திருந்தாலும் இருவரின் அனுபவங்களும் வெவ்வேறு தளத்தில் இருந்தன. வம்சி நான்கு நாட்களில் நிறைய கற்றிருந்தான். கண்கள் பனிக்க அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே குழந்தையாய் மாறி அம்மா பெரிய தேர் பாக்க போலாமா என்று கேட்டான்.உடனே கிளம்பினோம். இரவு எட்டு மணிக்கு ஏழெட்டு பேர் ஒன்றாகக் கிளம்பி நடக்க ஆரம்பித்தோம். திருவண்ணாமலை, மக்கள் வெள்ளத்தால் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
நிறைய நாட்களுக்குப்பிறகு நீண்டநேரம் நடந்தது மகிழ்ச்சியாகவும் மிகுந்த கால்வலியையும் கொடுத்தது.சாப்பிட்டு முடித்தபிறகு வீட்டிலேயே ஏதாவது நல்ல படம் பார்க்கலாம் என தீர்மானித்தபோது தம்பி சாம் கொடுத்தனுப்பிய மலையாளப்படங்கள் பார்க்கப்படாமலேயே இருப்பது என்னை தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது நியாபகம் வர மொத்தத்தையும் எடுத்துப் பார்த்தேன். அதில் என் சுமித்ரா (மலையாளத்தில் இத்ரமாத்ரம்) புதைத்து வைக்கப் பட்டிருந்தாள். என்னால் அந்த நிமிடத்திய படபடப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கடந்த வருடம் டிசம்பரில் கல்பட்டா நாராயணன் எழுதிய இத்ரமாத்ரம் என்ற நாவலை சுமித்ரா என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தேன். நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இறந்துவிடும் கதாநாயகி சுமித்ரா எப்படி தன் சொந்தங்களோடும் நண்பர்களோடும் ஊர்காரர்களோடும் ஸ்நேகிதிகளோடும் வாழ்ந்தாள் என்பதை கல்பட்டா சொல்லிக் கொண்டே போகிறார். வாழ்வின் மிகப் பெரிய தருணங்களை தரிசிக்கவைக்கும் அவர் மிக அனாசயமாக கதை சொல்லி ஒரு பெரு வாழ்வினை நம்முன் நிகழ்த்திக் காண்பிக்கிறார். மிகக் குறைவான பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நாவல் நம்மை பெரிதும் யோசிக்க வைக்கிறது, பேச வைக்கிறது,மெளனமாக்குகிறது.
 இரண்டுமுறை ரீரைட் செய்த பிறகு வீட்டிற்கு வந்த ஜெயமோகனோடும் கல்பட்டா நாராயணனோடும் புத்தக செழுமைக்காய் ஏழெட்டு மணிநேரம் நடத்தின கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமானது. அதன் பிறகும் அடங்காத மனது பத்துமுறைகளுக்கு மேல் அந்த டெக்ஸ்டில் வேலைபார்க்க வைத்தது. பத்து நாட்களுக்குப் பின் சுமித்ரா என்னைவிட்டுபோகவில்லையானால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.அப்போது என் நண்பர் சீனிவாசன் தன் புத்தக வேலைக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய ஓவியப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அதில் என் சுமித்ராவை ஏதோ ஒரு நாளின் அடங்காத படைப்பு மனநிலையின் உச்சத்தில் படமாக்கியிருந்தார். அதை புத்தக அட்டைப் படத்திற்கு தந்தது மட்டுமல்ல கதை நெடுக வரும் கதாபாத்திரங்களை டிரைபிள் ஆர்ட் மூலம் நாவலுக்கு இணையாக உலவ விட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர்கள் பேசியும் நடந்தும் பாடியும் பார்க்கபோகிறோம் என்கிற நிமிடம் அலாதியானது. கதையைப் போலவே முதல் காட்சியிலேயே சுமித்ராவின் மரணக் காட்சி. மரணத்தோடு நன்றாகப் பொருந்திப் போயிருக்கும் சுமித்ரா நீண்டு நிமிர்ந்து படுத்திருக்கிறாள். அதிலிருந்து ஆரம்பித்து அந்த நாவலில் வரும் புருஷு, தாசன், கீதா, சுபைதா, கெளடர், பணிச்சி, பொதுவாள், வாசுதேவன், அனுசூயா, மரியா என ஒவ்வொருவரும் படத்தில் நாவலுக்கு இணையாக வந்து சென்றார்கள். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் நெடுமுடி வேணு கெளடராக நடிப்பிலும் அனுபவத்திலும் மிளிர்கிறார். கெளடருக்கான          உடல் நிலை சரியில்லாத காட்சியில் பெய்த மழை என்னை அறைக்குள் நனைத்தது. நாய் குரைக்கும் சத்தமும் அழுகை சத்தமும் மிகவும் துல்லியமாக என் மனநிலையோடு பயணம் செய்தன.

காப்பி பூத்திருக்கும் வயநாட்டு காடுகளில் அலைந்து திரிந்த நான் என் கண்ணெதிரே அதன் அசைவுகளைப் பார்த்தது மேலும் என் வயநாட்டுக்குப்போகும் ஆசையை அதிகமாக்கியது. மலையாளப் படங்களில் வரும் யதார்த்தமும் வித்தியாசமாக கதை சொல்லும் பாணியும் புதிய முயற்சிகளும் எப்போதும் போல இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் மிக வித்தியாசமாக எழுதப்பட்ட இந்த நாவல் அப்படியே சினிமாவிற்காக தன் மொழியை மாற்றிக் கொள்ளாமல் பதிவாகியிருக்கிறது. கதையைப் போலவே அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு படமாக்கப் பட்டிருக்கிறது. மரணவீட்டில் வரும் ஒவ்வொரு பந்தங்களும் நட்புகளும் தன் பால்யத்தை சுமித்ராவோடு ஒப்பிடும்போது அந்த கதாபாத்திரங்கள் ஓவர்லேப்பில் பேசுவது மிக இயல்பாகவும் உறுத்தாமலும் இருக்கிறது.மலையாளப் படங்களில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம்.
கதாபாத்திர தேர்வில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த தாசன் கேரக்டர். மிகவும் அறிவார்ந்த தாசன் அப்படி இருந்திருக்கவேண்டாமோ. அதேபோல சுபைதா. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெடித்து விடுவாளோ என்று நினைக்கும் அளவிற்கு தடிமனான பெண் அவள். அதுதான் அவள் பிரச்சனையே. ஆனால் படத்திலோ கறுத்த மெலிந்த பெண்ணாக வருகிறாள்.
படத்தில் கீதாவும் மாதவியும் மிக அற்புதமாக ஒன்றிப் போயிருக்கிறார்கள்.வாசுதேவன் கதையில் இல்லாத அளவிற்கு நல்ல மனிதராகவும் கடைசிக் காட்சியில் பிரேதத்தை எடுத்துப்போகும் காட்சியில் வீட்டு வாசலில் உட்காரும்போதும் நடிப்பில் அசத்தி நம் எல்லோரின் பரிவையும் கோருகிறார்.
கதையும் திரைக்கதையும் ஒன்றல்ல.கதையின் மறு ஜென்மமே திரைக்கதை. மேலும் திரைக்கதை ஃபிலிம் மேக்கருக்கானது.  எப்படி வேண்டுமானாலும் அதை எடுக்கும் உரிமை அவனுக்குண்டு என்று நான் மிகவும் மதிக்கும் நேசிக்கும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சொன்னாலும் படம் பார்க்கும் போது ஒப்பிட்டுப் பார்க்காமல் என்னைப் போன்ற சாதாரணப் பார்வையாளரால் இருக்க முடியாது.
இதெல்லாம் கடந்துபோக என்னில் உறைந்திருந்த சுமித்ரா நேற்றிரவிலிருந்து என்னோடு இயல்பாய் நட்பாய் உரையாட ஆரம்பித்திருக்கிறாள்.      



Wednesday, 13 November 2013

கெங்கபுரம் விவசாயி

சென்னையில் நடந்த இருவேறு நிகழ்ச்சியின் உன்மத்தத்தில், அது கொடுத்த உத்வேகத்தில் இந்த வருடம் வம்சி பதிப்பிக்கப் போகும் 20 புத்தகங்களின் வேலைகளைப் பிரித்து அச்சுக்கும், பிழை திருத்தவும், டைப் செய்யவும், வாசிக்கவும் எனக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.என் நண்பன் ஷெளக்கத் கேரளாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கான ஒரு பார்சலை கூரியர் செய்துவிட்டு வந்திருந்தார்.அது மிகச் சரியாக என் பிறந்த நாளன்று வந்து அந்த வருடத்திற்கான சந்தோஷத்தைக் கொடுத்தது.எல்லாம் மிக அற்புதமாக பேசப்பட்ட இளம் தலைமுறையினரின் படைப்புகள். என் மொழிபெயர்ப்புக்கு விடப்பட்ட சவால்கள். நண்பனின் கைகுலுக்கி என் அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டேன்.
இப்படி ஒரு ஈரமான மனநிலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த பெரியவர் ஒருவர் என் அலுவகத்திற்கு வந்தார்.70 வயதை நெருங்கும் அவர் ஒரு இயற்கை விவசாயி.விவசாயில என்னம்மா இயற்கை செயற்கைன்னு, விவசாயின்னா விவசாயிதான் என்று எப்போதும் என்னிடம் சொல்வார். எப்போதும் துறுதுறுவென ஒரு இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் இருக்கும் அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார்.தான் வளர்க்கும் செடி வகைகள், மரக்கன்றுகள், நெல் வகைகள் பற்றி உரத்த குரலில் பேசும் அவர் என்னிடம் பேசும்போது லேசாக கண்கள் கலங்குவதை கவனித்தேன்.சோர்வுடனோ தளர்ந்தோ யாராவது வந்தால் நான் அதுபற்றி எப்போதும் விசாரிப்பதில்லை. அது இன்னும் அவர்களை சோர்வாக்கிவிடும் ஆனால் அவரே பேச ஆரம்பித்தார்.  “ரொம்ப வயசாயிடிச்சுமா. புள்ளங்க நம்மள மாதிரி இல்ல. ஊரில வந்து விவசாயம் பாக்காதுங்களாம்.நூறு கிலோமீட்டர் தூரத்தில பாண்டிச்சேரியில செட்டிலாகப்போறானாம்.முப்பது வருஷமா கண்ணுல வச்சு காப்பாத்தின பூமிய என்ன பண்றதுன்னே தெரியல. அது யார் கைல மாட்டி எப்படி இருக்கபோகுதோன்னு நெனச்சா ரொம்ப முடியலம்மா’’ உதடு கோணிப்போய் பேச்சு நின்றது. என் கண்கள் நிறைந்து முகம் திருப்பிக்கொண்டேன். வயது வந்த பெண்ணை நிராதரவாய் விட்டுவிட்டுப் போகும் தவிப்பு அது.
பிறகு என்னென்னவோ சமாதானம் சொல்லி காப்பி குடித்து பேச்சை திசைதிருப்பி அனுப்பினாலும் மனசு அந்த முதியவரின் கண்ணீருக்கடியில் தேங்கி நின்றது.

நான் தொகுத்த தென்னிந்திய சிறுகதைகள் தொகுப்பிலிருந்து இந்த நிமிடத்தில் நான் வாசிக்க நினைக்கும் கதை...

















யாருக்கும் வேண்டாத கண்

நான் சமீபத்தில் மொழிபெயர்த்த எனக்கு மிகவும் பிடித்த 
சிஹாபுதின் பொய்த்தும்கடவின் சிறுகதை - நன்றி உயிர்எழுத்து

மலையாளம் மூலம் : சிஹாபுதின் பொய்த்தும்கடவு.
தமிழில்கே.வி.ஷைலஜா.
ஓவியங்கள் : என். சீனிவாசன்


இருள் சூழ்ந்த பாதையிலிருந்து சமீபத்தில் எனக்கொரு கண் கிடைத்தது. இருட்டில் அதொரு வால் நட்சத்திரம் போல மின்னியது. அந்த மின்னலின் ஒளிக்கீற்று என் பார்வையில் படவில்லையானால் ஒரு வேளை நான் அதை மிதித்து நசுக்கி நடந்து போயிருப்பேன்.
சின்ன சந்திலிருந்து வெளிச்சமுள்ள இடத்திற்கு வந்து நின்று நன்றாகப் பார்த்த போதுதான் அதென்ன பொருள் என்று சரியாக உணர முடிந்தது. உணர்ந்தபோது அப்படியே உறைந்து போனேன். அது ஒரு கண். கண்ணே தானா? யாருடையது? எந்த மனிதனின் ஒற்றைக் கண்? எப்படி தொலைந்து போயிருக்கும்? எப்போது காணாமல் போயிருக்கும்? இப்படியான நிறைய கேள்விகள் என் முன்னால் பதில் கிடைக்காமல் அப்படியே வரிசை பிடித்து நின்றன.

கண்ணுக்கு உயிர் இருக்கிறது. அதனுடைய இமைகள் திறக்கவும் மூடவும் செய்கிறது. கருமணி பதட்டத்துடன்  யாரையோ தேடிக்கொண்டிருந்தது. முடிவில் அதன் பார்வை பரிதாபத்துடன் என்னில் நிலைத்து நின்றது. என்னைப் பார்த்த பார்வையில் அடர்ந்த துக்கத்தின் சிவப்பு பரவியிருந்தது. கண்ணில் நீர் முட்டித் ததும்பி நின்று கருமணியை உருட்டி உருட்டி எதையோ கத்திச் சொல்லத் தேம்பியது. நான் பார்வையாலேயே அதை உள் வாங்கிக் கொண்டேன். எனக்கு உள்ளுக்குள் இதொரு நுட்பமான ப்ரச்சனையாக மாறிவிடுமோ என்ற எண்ணமும் சட்டென புகுந்தது.
இப்படியான ரகசியத்தை என் மனைவியிடம்தான் முதலில் பகிர்ந்துகொண்டேன். இரவு உணவிற்குப்பிறகு சாந்தமான சூழலில் நான் கைக் குட்டையில் பொதிந்து வைத்திருந்த கண்ணை அவள் முன் பிரித்துகாட்டினேன். நடந்த சம்பவங்களையெல்லாம் சுருக்கமாக சொன்னேன். அதை கேட்ட நிமிடத்தில் அவள் பயந்து நடுங்கினாள். நான் சாதாரணமாகச் சொன்னேன்.
இதில அப்படி பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இந்த கண்ணுக்கு ஒரு உடமை இருப்பாங்க இல்ல. நாம இதை அவங்ககிட்ட சேத்திடலாம்
எப்படி?”
விடிஞ்சதும் நாம இத போலீசில ஒப்படைச்சிடலாம். கண்ணுக்கு உரியவங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம இருக்க மாட்டாங்க.”
நீங்க இவ்வளவு அறிவில்லாத மனுஷனா இருக்கீங்களே. போலீஸ் ஸ்டேஷன்ல உடனே உங்கள லாக்கப்பில் தள்ளிடுவாங்க அதுக்கப்பறம் கண்ணோட மீதி பாகங்கள் எங்கன்னு உங்ககிட்டயிருந்தே சொல்ல வச்சிடுவாங்க. சும்மா ஆகாத வேலைக்கெல்லாம் போகாதீங்க. இது எங்க இருந்து கெடச்சதோ அங்கேயே கொண்டுபோய் போட்டுடுங்க. அதுதான் புத்திசாலித்தனம்.”
பிறகு நானொன்றும் சொல்லவில்லை. அவள் பேசியவற்றின் முதல் பாகம் யோசிக்க வேண்டியதும், இரண்டாம் பாகம் மிகக் குரூரமாக இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது. மனைவி என்  மனதைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே. அவள் சொன்ன புத்திசாலித்தனத்தோடு என்னால் ஒருபோதும் ஒத்து போக முடியாது. இந்த கண்ணை நடுத்தெருவில் போட்டுவிட்டு வரும் நினைப்பே எனக்கில்லை. கண்டெடுத்த இடத்திலேயே மீண்டும் போட்டுவிட்டால் நாய்களோ, நரிகளோ அதைப் பார்த்தால் என்ன ஆகும்?
கண்ணின் கருணாமயமான பார்வை என்னை மிகவும் கரைய வைத்தது. அதில் பயம் கலந்த பாவத்தையும்  ஒரு வேண்டுகோளையும் உணர முடிகிறது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் நீர் நிறைந்து தளும்பத் தொடங்கியது.


அழாதே... உன்னை உரியவரிடத்தில் நான் எப்படியும் சேர்த்து விடுவேன்நான் தேற்றினேன்.
மகிழ்ச்சியில் அதன் இமைகள் படபடவென அடிக்கவும், அதிக நேரம் அந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திருக்கவும் செய்தன.
மறுநாள் நகரத்தின் புகழ்பெற்ற மாலை நேரப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தேன்.
... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு பொருளைக் கண்டெடுத்திருக்கிறேன். பொருளைத் தொலைத்தவர்கள் சரியான அடையாளத்தைச் சொல்லிப் பெற்றுக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும். மிக அவசரம்...
விளம்பரத்தைப் பார்த்து பலரும் என்னைத் தேடி வந்தார்கள். சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தார்கள்.
அவர்களில் புரோகிதரும், வியாபாரியும், கவிஞர்களும் விமர்சகர்களும், திருடர்களும், பிக்பாக்கெட் அடிப்பவர்களும் சினிமாக்காரர்களும் இருந்தார்கள்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து யாரும் அப்படி ஒரு கண்ணைத் தொலைத்திருக்கவில்லை என்பது தெளிவானது. புரோகிதர் அவருடைய டைரியைத் தொலைத்திருந்தார். அதில் இருக்கும் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை எனக்குத் தர அவர் தயாராக இருந்தார். வியாபாரியோ விற்பனை வரி விதிப்பவர்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தொலைத்திருந்தார். என் காலில் விழ குனிந்து உடம்பைக் குறுக்கி கெஞ்சிய அவரும் என் முன்பாக பணக்கட்டுகளை நீட்டினார்.
கவிஞனோ தான் புதிதாய் எழுதிய முக்கியமான கவிதையின் முதல் படியைத் தொலைத்திருந்தான். சொந்த துக்கத்தின் அடர்த்தியான வண்ணம் கொண்டு எழுதப்பட்ட அந்த வரிகள் நியாபகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாத  தூரத்தில் மாய லோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டிருந்தன. அந்த காகிதத் துண்டுகள் கிடைத்தால் உலகின் உன்னத வரிகளாக  அவை அங்கீகரிக்கப்படுமாம்.
நிராசையோடு கவிஞன் ஒரு பைத்தியகாரனைப் போல திரும்பிப் போனான். ஒவ்வொருவரின் தேவையும் வேறு வேறாக இருந்தது. ஆனால் என் கையிலோ ஒற்றைக் கண் மட்டும் மலங்க மலங்க விழிந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்பத்திரிகை விளம்பரத்திற்குப்பிறகு நான் அதிக நாட்கள் காத்திருந்தேன். யாரும் வரவில்லை. தவறி விழுந்துவிட்ட அக்கண் மேலும் துக்கத்தின் கணத்தில் எனக்கு பாரமேற்படுத்தியது.
நம்பிக்கையை கைவிட வேண்டாம். நானில்லையா உனக்கு? நான் சரியான உடமையிடம் உன்னைச் சேர்த்துவிடுவேன் கவலைப்படாதே
இதற்கிடையில் கையில் கிடைக்கும் எல்லா விதமான பத்திரிகைகளையும் சல்லடை போட்டு வாசிக்கத் தொடங்கி இருந்தேன். எங்கேயாவது, யாராவது கண்ணைத் தொலைந்த செய்தியோ அல்லது விளம்பரமோ தென்படுமாவெனத் தேடத் தொடங்கியிருந்தேன். ஆனால் அப்படி எந்த செய்தியும் இல்லை. பிறகு அது வீண் வேலை என்று புறந்தள்ளினேன்.
வாரங்கள் கடந்தன. அக்கண்ணின் எதிர்பார்ப்பு மங்கலாகத் தொடங்கியிருந்தது.
இம்முறை மாவட்ட தலைநகரிலிருந்து வரும் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன். முன்பு ஏற்பட்ட அனுபவங்கள் இன்னும் அதிகமாக என்னைத் தேடி வந்தன. அதைத் தவிர வேறெந்த தகவலும் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியாகப் போய்கொண்டிருந்த நாட்களின் இடைவேயில் ஒருநாள் அக்கண்ணிடம் கேட்டேன்.
கண்ணே, யாரும் உன்னைத் தேடி வரவில்லை. அப்படி கண்ணைத் தொலைத்த ஆள் பூமியில் இருக்கிறானா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் இப்படியே காத்திருப்பது? உன் பார்வை மங்கிப் போகும் முன் நீ யாருக்காவது பயன்பட வேண்டுமே? அதனால் உன்னை நானொரு கண் வங்கியில் ஒப்படைத்து விடட்டுமா?”
கண்ணின் கருமணியின் உருட்டலிலும், ரப்பைகளின் படபடப்பிலும் அது மிகவும் துக்கத்தில் இருக்கிறதென்பதும் கண் வங்கி என்பதே அதற்கு பிடிக்கவில்லை என்பதும் புரிந்தது. ஆனாலும் கண் அதற்கு சம்மதித்தது.
மறுநாள் காலை நாங்கள் கண் வங்கிக்குப் போனோம். வங்கியின் பொறுப்பாளரைப் பார்த்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அவர் மிகவும் பயத்துடன் அக்கண்ணை எடுத்து திருப்பி திருப்பிப் பார்த்தார்.
மிக நீண்ட தன் முப்பது வருட அனுபவத்தில் இப்படியான ஒரு கண்ணை அவர் பார்த்ததில்லையாம். அந்த பயத்துடனே பேசினார்.
உங்களோட உதவி செய்ய நினைக்கிற இந்த மனசுக்கு நன்றி. ஆனா உயிரில்லாத கண்களை மட்டுமே இங்க வாங்கறோம். ஆனால் இதுக்கு உயிர் இருக்கு. உயிரற்ற கண்களை வாங்க வேண்டுமானால் கூட அதனுடைய சொந்தக்காரனின் முன் கூட்டி எழுதப்பட்ட சம்மதப்பத்திரமும் இரண்டு பேருடைய சாட்சிக் கையெழுத்தும் தேவைப்படும். இக்கண்ணுக்காக நான் தூக்கில் தொங்க முடியாது சார். மன்னிக்கணும்.”
நான் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணைப் பார்த்தேன். என்னை எதிர்கொள்ள சக்தியற்று அது இமைகளைத் தாழ்த்தியது.
கண் வங்கியின் படிகளில் இறங்கும்போது என் வாழ்நாளில் அனுபவித்திராத அனாதை உணர்வு  ஏற்பட்டது. இந்த உலகமே கைவிட்டது போல ... எங்கு போனாலும் புதியதைப் பார்ப்பது போல... எங்கே பார்த்தாலும் எல்லோரும் என்னிலிருந்து எதையோ மறைத்து வைப்பது போல... ஒன்றுமே புரியவில்லை எனக்கு.
அன்று முழுவதும் அக்கண்ணுடன் நகரத்தில் அலைந்து திரிந்தேன். இந்த கண்ணை எப்படியாவது காப்பாற்ற முடியுமா என விசாரிக்கத் தொடங்கினேன். அப்படி அலைந்ததில் நான் பசியையும், தாகத்தையும்நேரத்தையும், காலத்தையும் மறந்தேன்.
காற்றிலும், புழுதியிலும் அலைந்து கலைந்த முடியும் கருத்து சோர்ந்த முகமுமாக நான் அன்று வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். மனைவி விளக்கணைக்காமல் அதிர்ச்சியும் கவலையுமாக எனக்காகக் காத்திருந்தாள்.
என்ன, இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க?” பதட்டத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு அமைதியாக நான் பதில் சொன்னேன்.
இந்த கண்ணோட சொந்தக்காரன நான் இன்னும் பாக்கல. எல்லாம் போகட்டும். கருணையின் அடிப்படையில் கூட இதை யாரும் வாங்கவோ, ஏற்றெடுக்கவோ முன் வரவில்லை...”
மனைவியின் முகபாவனை சட்டென மாறியது. அவள் கோபத்தில் வெடித்து சிதறினாள்.
ஓஹோ... அப்ப இதான் உங்க பிரச்சனையா? நீங்க இன்னும் அந்த அருவெறுப்பான ஜந்துவை தூக்கி எறியல இல்ல? ஏன் இப்படி இருக்கீங்க?”
இதற்கு மேல் எதையும் கேட்க முடியாத நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
இரவு முழுவதும் கண்ணும், அதனுடைய அனாதைத் தன்மையும் என் இதயத்தைக் கீறி வலியைக் கோரியது. இந்தக் கண்ணைக் கைவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லாமல் போய்விட்டதே. வெளியேறும் வழிகள் மூடப்பட்ட பெரும் குகையில் அகப்பட்டது போல தோன்றியது. கடவுளே, இதை விட நீ என்னைக் கொன்றிருக்கலாம். கடவுளே, என்னைக் கொன்று விடு...
யோசனையின் நடுவே நிலவின் கீற்றொன்று சட்டென வந்து விழுந்தது. செய்தித் தாளில் கொடுத்த விளம்பரத்தை மீண்டும் ஒருமுறை மனதிற்குள் வாசித்தேன்.


... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு பொருள் கிடைத்திருக்கிறது. அந்தப் பொருளின் அடையாளங்களை சரியாக சொல்லும் பட்சத்தில்...
பொருள் என்றால் அதற்கு உயிர் இருக்க வேண்டும் என்றில்லை. உயிருள்ள எதையும் நாம் பொருள் என்று சொல்வதில்லையே? நான் விளம்பர வார்த்தைகளின் பிழைக்காக வருந்தினேன். இந்த உலகத்தில் ஒரு வார்த்தையின் தவறுதல் ஏற்படுத்திய மிகப் பெரிய விளைவுகளை எல்லாம் சிந்தித்து பார்த்தேன். மறுநாள் என்ன ஆனாலும் ஆகட்டும் என நினைத்து மற்றொரு விளம்பரம் கொடுக்க தீர்மானித்தேன்.
... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு கண்ணைக் கண்டெடுத்திருக்கிறேன். கண் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. மிக அவசரமாக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
விளம்பரம் வெளிவந்த நாளிதழ் எனக்கும் முன்பாக மனைவியின் கையில் கிடைத்தது. அவள் விளம்பரப் பக்கத்தை கோபமும் அழுகைமாக என் முன் விட்டெறிந்தாள். பிறகு வேகவேகமாக நடந்த  அவள் அறைக்குள் சென்று கதவை சாத்தி பெருங்குரலெடுத்து ஓவென கத்தி அழுதாள்.
நான் கைக்குட்டையில் பொதிந்து வைத்திருந்த அக்கண்ணைப் பார்த்தேன். இதயம் மரத்துபோனவனாக அதிக நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். என் வீட்டுக் கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் அடைந்திருந்தது. நானோ கண்ணின் சொந்தக்காரனுக்காகக் காத்திருந்தேன். வாசலில் காலடி ஓசை கேட்கிறதா? கதவை யாராவது தட்டுகிறார்களா? நான் காத்து காத்திருந்தேன். என் காத்திருந்தலின் தூரம் கூடிக் கொண்டே போனது.
யாருமே வரவில்லை. முட்கள் கடிகாரத்தை உரசியபடி கடந்தன. என் கண்கள் நிறைந்து காட்சிகள் கண்ணீரில் கலங்கின.
நான் ஏதும் செய்ய இயலாதவனாக அக்கண்ணைப் பார்த்தேன். அது தன் இமைகளை முடிக்கொண்டு படுத்திருந்தது. நான் மீண்டும் மீண்டும் கூப்பிட்டேன். என் குரல் கம்மித் தேய்ந்து போனதேயொழிய அக்கண் திறக்கவேயில்லை. நான் அதனுடைய மேல் ரப்பையை உயர்த்திப் பார்த்தேன்.
காட்சிகளற்ற என் மனதில் எல்லாம் தகர்ந்தடங்கியது. அதில் கருமணி இல்லை.
இப்போது தொலை தூரத்திலிருந்து ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்கிறது.
அதனூடாக போலீஸின் விசில் சத்ததையும் என்னால் துல்லியமாகக் கேட்க முடிந்தது.