சென்னையில்
நடந்த இருவேறு நிகழ்ச்சியின் உன்மத்தத்தில், அது கொடுத்த உத்வேகத்தில் இந்த வருடம்
வம்சி பதிப்பிக்கப் போகும் 20 புத்தகங்களின் வேலைகளைப் பிரித்து அச்சுக்கும், பிழை
திருத்தவும், டைப் செய்யவும், வாசிக்கவும் எனக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.என் நண்பன்
ஷெளக்கத் கேரளாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கான ஒரு பார்சலை கூரியர் செய்துவிட்டு
வந்திருந்தார்.அது மிகச் சரியாக என் பிறந்த நாளன்று வந்து அந்த வருடத்திற்கான சந்தோஷத்தைக்
கொடுத்தது.எல்லாம் மிக அற்புதமாக பேசப்பட்ட இளம் தலைமுறையினரின் படைப்புகள். என் மொழிபெயர்ப்புக்கு
விடப்பட்ட சவால்கள். நண்பனின் கைகுலுக்கி என் அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டேன்.
இப்படி
ஒரு ஈரமான மனநிலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த பெரியவர்
ஒருவர் என் அலுவகத்திற்கு வந்தார்.70 வயதை நெருங்கும் அவர் ஒரு இயற்கை விவசாயி.விவசாயில
என்னம்மா இயற்கை செயற்கைன்னு, விவசாயின்னா விவசாயிதான் என்று எப்போதும் என்னிடம் சொல்வார்.
எப்போதும் துறுதுறுவென ஒரு இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் இருக்கும் அவர் மிகவும் சோர்வுடன்
இருந்தார்.தான் வளர்க்கும் செடி வகைகள், மரக்கன்றுகள், நெல் வகைகள் பற்றி உரத்த குரலில்
பேசும் அவர் என்னிடம் பேசும்போது லேசாக கண்கள் கலங்குவதை கவனித்தேன்.சோர்வுடனோ தளர்ந்தோ
யாராவது வந்தால் நான் அதுபற்றி எப்போதும் விசாரிப்பதில்லை. அது இன்னும் அவர்களை சோர்வாக்கிவிடும்
ஆனால் அவரே பேச ஆரம்பித்தார். “ரொம்ப வயசாயிடிச்சுமா.
புள்ளங்க நம்மள மாதிரி இல்ல. ஊரில வந்து விவசாயம் பாக்காதுங்களாம்.நூறு கிலோமீட்டர்
தூரத்தில பாண்டிச்சேரியில செட்டிலாகப்போறானாம்.முப்பது வருஷமா கண்ணுல வச்சு காப்பாத்தின
பூமிய என்ன பண்றதுன்னே தெரியல. அது யார் கைல மாட்டி எப்படி இருக்கபோகுதோன்னு நெனச்சா
ரொம்ப முடியலம்மா’’ உதடு கோணிப்போய் பேச்சு நின்றது. என் கண்கள் நிறைந்து முகம் திருப்பிக்கொண்டேன்.
வயது வந்த பெண்ணை நிராதரவாய் விட்டுவிட்டுப் போகும் தவிப்பு அது.
பிறகு
என்னென்னவோ சமாதானம் சொல்லி காப்பி குடித்து பேச்சை திசைதிருப்பி அனுப்பினாலும் மனசு
அந்த முதியவரின் கண்ணீருக்கடியில் தேங்கி நின்றது.
நான் தொகுத்த தென்னிந்திய சிறுகதைகள் தொகுப்பிலிருந்து இந்த நிமிடத்தில் நான் வாசிக்க நினைக்கும் கதை...
No comments:
Post a Comment