Monday 18 November 2013

இத்ரமாத்ரம்


நேற்றிரவு பிள்ளைகள் எல்லோரும் விடுமுறைக்காக திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள். ஹரியும் வம்சியும் சென்னையில் ஒரே வீட்டில் இருந்து வந்திருந்தாலும் இருவரின் அனுபவங்களும் வெவ்வேறு தளத்தில் இருந்தன. வம்சி நான்கு நாட்களில் நிறைய கற்றிருந்தான். கண்கள் பனிக்க அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே குழந்தையாய் மாறி அம்மா பெரிய தேர் பாக்க போலாமா என்று கேட்டான்.உடனே கிளம்பினோம். இரவு எட்டு மணிக்கு ஏழெட்டு பேர் ஒன்றாகக் கிளம்பி நடக்க ஆரம்பித்தோம். திருவண்ணாமலை, மக்கள் வெள்ளத்தால் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
நிறைய நாட்களுக்குப்பிறகு நீண்டநேரம் நடந்தது மகிழ்ச்சியாகவும் மிகுந்த கால்வலியையும் கொடுத்தது.சாப்பிட்டு முடித்தபிறகு வீட்டிலேயே ஏதாவது நல்ல படம் பார்க்கலாம் என தீர்மானித்தபோது தம்பி சாம் கொடுத்தனுப்பிய மலையாளப்படங்கள் பார்க்கப்படாமலேயே இருப்பது என்னை தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது நியாபகம் வர மொத்தத்தையும் எடுத்துப் பார்த்தேன். அதில் என் சுமித்ரா (மலையாளத்தில் இத்ரமாத்ரம்) புதைத்து வைக்கப் பட்டிருந்தாள். என்னால் அந்த நிமிடத்திய படபடப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கடந்த வருடம் டிசம்பரில் கல்பட்டா நாராயணன் எழுதிய இத்ரமாத்ரம் என்ற நாவலை சுமித்ரா என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தேன். நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இறந்துவிடும் கதாநாயகி சுமித்ரா எப்படி தன் சொந்தங்களோடும் நண்பர்களோடும் ஊர்காரர்களோடும் ஸ்நேகிதிகளோடும் வாழ்ந்தாள் என்பதை கல்பட்டா சொல்லிக் கொண்டே போகிறார். வாழ்வின் மிகப் பெரிய தருணங்களை தரிசிக்கவைக்கும் அவர் மிக அனாசயமாக கதை சொல்லி ஒரு பெரு வாழ்வினை நம்முன் நிகழ்த்திக் காண்பிக்கிறார். மிகக் குறைவான பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நாவல் நம்மை பெரிதும் யோசிக்க வைக்கிறது, பேச வைக்கிறது,மெளனமாக்குகிறது.
 இரண்டுமுறை ரீரைட் செய்த பிறகு வீட்டிற்கு வந்த ஜெயமோகனோடும் கல்பட்டா நாராயணனோடும் புத்தக செழுமைக்காய் ஏழெட்டு மணிநேரம் நடத்தின கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமானது. அதன் பிறகும் அடங்காத மனது பத்துமுறைகளுக்கு மேல் அந்த டெக்ஸ்டில் வேலைபார்க்க வைத்தது. பத்து நாட்களுக்குப் பின் சுமித்ரா என்னைவிட்டுபோகவில்லையானால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.அப்போது என் நண்பர் சீனிவாசன் தன் புத்தக வேலைக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய ஓவியப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அதில் என் சுமித்ராவை ஏதோ ஒரு நாளின் அடங்காத படைப்பு மனநிலையின் உச்சத்தில் படமாக்கியிருந்தார். அதை புத்தக அட்டைப் படத்திற்கு தந்தது மட்டுமல்ல கதை நெடுக வரும் கதாபாத்திரங்களை டிரைபிள் ஆர்ட் மூலம் நாவலுக்கு இணையாக உலவ விட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர்கள் பேசியும் நடந்தும் பாடியும் பார்க்கபோகிறோம் என்கிற நிமிடம் அலாதியானது. கதையைப் போலவே முதல் காட்சியிலேயே சுமித்ராவின் மரணக் காட்சி. மரணத்தோடு நன்றாகப் பொருந்திப் போயிருக்கும் சுமித்ரா நீண்டு நிமிர்ந்து படுத்திருக்கிறாள். அதிலிருந்து ஆரம்பித்து அந்த நாவலில் வரும் புருஷு, தாசன், கீதா, சுபைதா, கெளடர், பணிச்சி, பொதுவாள், வாசுதேவன், அனுசூயா, மரியா என ஒவ்வொருவரும் படத்தில் நாவலுக்கு இணையாக வந்து சென்றார்கள். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் நெடுமுடி வேணு கெளடராக நடிப்பிலும் அனுபவத்திலும் மிளிர்கிறார். கெளடருக்கான          உடல் நிலை சரியில்லாத காட்சியில் பெய்த மழை என்னை அறைக்குள் நனைத்தது. நாய் குரைக்கும் சத்தமும் அழுகை சத்தமும் மிகவும் துல்லியமாக என் மனநிலையோடு பயணம் செய்தன.

காப்பி பூத்திருக்கும் வயநாட்டு காடுகளில் அலைந்து திரிந்த நான் என் கண்ணெதிரே அதன் அசைவுகளைப் பார்த்தது மேலும் என் வயநாட்டுக்குப்போகும் ஆசையை அதிகமாக்கியது. மலையாளப் படங்களில் வரும் யதார்த்தமும் வித்தியாசமாக கதை சொல்லும் பாணியும் புதிய முயற்சிகளும் எப்போதும் போல இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் மிக வித்தியாசமாக எழுதப்பட்ட இந்த நாவல் அப்படியே சினிமாவிற்காக தன் மொழியை மாற்றிக் கொள்ளாமல் பதிவாகியிருக்கிறது. கதையைப் போலவே அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு படமாக்கப் பட்டிருக்கிறது. மரணவீட்டில் வரும் ஒவ்வொரு பந்தங்களும் நட்புகளும் தன் பால்யத்தை சுமித்ராவோடு ஒப்பிடும்போது அந்த கதாபாத்திரங்கள் ஓவர்லேப்பில் பேசுவது மிக இயல்பாகவும் உறுத்தாமலும் இருக்கிறது.மலையாளப் படங்களில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம்.
கதாபாத்திர தேர்வில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த தாசன் கேரக்டர். மிகவும் அறிவார்ந்த தாசன் அப்படி இருந்திருக்கவேண்டாமோ. அதேபோல சுபைதா. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெடித்து விடுவாளோ என்று நினைக்கும் அளவிற்கு தடிமனான பெண் அவள். அதுதான் அவள் பிரச்சனையே. ஆனால் படத்திலோ கறுத்த மெலிந்த பெண்ணாக வருகிறாள்.
படத்தில் கீதாவும் மாதவியும் மிக அற்புதமாக ஒன்றிப் போயிருக்கிறார்கள்.வாசுதேவன் கதையில் இல்லாத அளவிற்கு நல்ல மனிதராகவும் கடைசிக் காட்சியில் பிரேதத்தை எடுத்துப்போகும் காட்சியில் வீட்டு வாசலில் உட்காரும்போதும் நடிப்பில் அசத்தி நம் எல்லோரின் பரிவையும் கோருகிறார்.
கதையும் திரைக்கதையும் ஒன்றல்ல.கதையின் மறு ஜென்மமே திரைக்கதை. மேலும் திரைக்கதை ஃபிலிம் மேக்கருக்கானது.  எப்படி வேண்டுமானாலும் அதை எடுக்கும் உரிமை அவனுக்குண்டு என்று நான் மிகவும் மதிக்கும் நேசிக்கும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சொன்னாலும் படம் பார்க்கும் போது ஒப்பிட்டுப் பார்க்காமல் என்னைப் போன்ற சாதாரணப் பார்வையாளரால் இருக்க முடியாது.
இதெல்லாம் கடந்துபோக என்னில் உறைந்திருந்த சுமித்ரா நேற்றிரவிலிருந்து என்னோடு இயல்பாய் நட்பாய் உரையாட ஆரம்பித்திருக்கிறாள்.      



1 comment:

Anonymous said...

அருமையான பதிவு ஷைலா :-) நான் இன்னும் "சுமித்ரா" பாதி தான் படிச்சிருக்கேன் ... படித்துவிட்டு படத்தையும் பார்க்கணும் !! - சுதா, பெங்களூர்