Thursday, 5 April 2018

தாமதமாய் வரும் காதலையும் புரிந்து கொள்ளவைத்த பாக்யலஷ்மி….




அப்படி எனக்கும் ஒரு காதல் வந்தது. ஈர்க்கும் அழகிய கனவுகள் இதழ் விரிக்கும் பதின் பருவத்திலோ, காதல் தீவிரமாய் ஆட்கொள்ளும்  இளமையிலோ அது என்னிடம் வந்து சேரவில்லை. எல்லாத் துணையையும் நிழலையும் இழந்து போன இந்த நடுவயதில் நானொரு காதலியாக மாறினேன்.

நாம் அதிகம் விரும்புபவர்களால் மட்டுமே நம்மை அதிகம் வேதனைப்படுத்தவும் முடியும். வாழ்க்கையில் ஒரு இடத்திலும் தோற்று போகாத என்னை நான் விரும்பிய மனிதர் தோற்கடித்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே இக்கட்டான  சூழலிலேயே வாழ்ந்து வந்ததால் காதலின் மகத்துவம் ஒன்றையும் நான் அனுபவித்திருக்கவில்லை. பதினெட்டு பத்தொன்பது வயதில் இசைக்கச்சேரிகளில் பாடப் போகும்போதும், டப்பிங் தியேட்டர்களிலும் துண்டு சீட்டில் ஐ லவ் யூஎன்று எழுதித் தந்திருக்கிறார்கள். ஆனால் அதை எப்படித் தொடர வேண்டுமென்று தெரியவில்லை. தொலைபேசி இல்லை. தனியே வெளியே வர அனுமதியில்லை. கனவுகளிலும் பெரியம்மா கம்புடன் கூடவேயிருந்தாள்.

முதல் முதலாய்  ஐ லவ் யூஎன்று எழுதிய காகிதத் துண்டு கையில் கிடைத்த நாளை இன்றும் நான் நினைத்துச் சிரிப்பேன். அது கிடைத்தபோது ஒரு படபடப்பு ஏற்பட்டது. என் முகத்தின் கள்ள லட்சணத்தை பெரியம்மா சட்டென உணர்ந்தாள். அப்புறமென்ன, பெரியம்மா அடியின் தாண்டவத்தையே நடத்தினாள். கொம்பு உடையும் வரை அடித்தாள். ஏதாவது ஒரு பையனோடு பேசியதால்தான் அடி வாங்கியிருந்தேன்.  அந்தப் பயத்தினால் அது போன்ற பேப்பர் துண்டுகளையும் என் காதலையும் காற்றில் பறக்க விட்டுவிடுவேன்.
சுதந்திரமாய் நான் இல்லாது போனதால் காதலின் சுகம் என்னவென்று ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. சுதந்திரமாய் வாழ வாய்ப்பு கிடைத்தபோது பருவம் முடிந்திருந்தது.

காதல் வயப்பட்ட பிள்ளைகளைப் பார்க்கும்போது எனக்கு அற்பமாயிருந்தது.  அவர்கள் முட்டாள்களாகவே எனக்குத் தோன்றுவார்கள்.

இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று இல்லையென்றே நான் நம்பினேன். ஆண் பெண் உறவு வெறும் உடல்ரீதியான உறவென்றே தவறாக நினைத்திருந்தேன். ஆனால் எனக்கும் என் நாற்பதாவது வயதில் காதல் வந்தது. எனக்கு அவருடனான காதல், அவருக்கு என்னிடம் இருந்ததாவென்று தெரியவில்லை.  அதனால் நான் பேர் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். எப்போதாவது மட்டுமே தொலைபேசியில் பேசவும், அபூர்வமாகவே பார்க்கும் நண்பர்களாகவும் இருந்தோம். எப்போதும் புத்தகங்களைப் பற்றியே அவர் பேசுவார்.  அதனால் அவர்மீது எனக்கு மிகவும் மரியாதையிருந்தது. திருமண பந்தத்தை உடைத்து வெளியே வந்து வாழும் நாட்கள். ஒரு நாள் நானும் பிள்ளைகளும் பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். நாங்கள் அந்த ரயிலில் பயணம் செய்கிறோமென்று நான் சொல்லியிருந்தேன். வண்டி எர்ணாகுளத்திற்கு வந்தபோது மாலை ஆறு மணி. அவர் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்து ஏறினார்.  குழந்தைகளுக்கு சாப்பிடவும் குடிக்கவும் நிறைய வாங்கி வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் வரேன் என்று சொல்லி இறங்கினார். நேரமாகியும் வண்டி கிளம்பவேயில்லை. அவர் திரும்பவும் வந்தார். 

வண்டி நான்கு மணி நேரம் கழிந்துதான் கிளம்புமாம். நீங்கள் திருவனந்தபுரம்போய் சேரும்போது ஒன்றரை மணியாகும். என்ன செய்வீங்க லஷ்மி?”

என்ன செய்யறது? ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிப் போவோம்,
 இல்லன்னா விடியும்வரை ஸ்டேஷனிலேயே இருப்போம்
அவர் மீண்டும் இறங்கிப் போனார்.
கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார்.
நானும் வரேன் உங்ககூட
ரயிலில் அவர் குழந்தைகளோடு பேசி, சிரிப்பும் விளையாட்டுமாய் இருந்தார். டாய்லெட்டுக்குப் பத்திரமாய் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். வண்டி திருவனந்தபுரம் வந்தபோது அவர் சொன்னதுபோல ஒன்றரை மணி. ஒரு டாக்ஸி பிடித்து எங்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர் திரும்பிப் போனார்.

அப்போதெல்லாம் எனக்கொன்றும் தோன்றவில்லை. ஏனென்றால் அப்படி எனக்கு உதவ நிறையபேர் இருந்தார்கள். உதவுபவர்களிடம் காதல் தோன்றுவது இயல்பானதில்லையல்லவா? அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. பேசிக் கொள்ளவுமில்லை. நான் அதைக் குறித்து யோசிக்கவுமில்லை. 

2001 காலகட்டத்திலெல்லாம் பின்னணிக் குரல்கொடுத்து ஏராளமான கதாபாத்திரங்களுக்கிடையில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு சினிமாவிலிருந்து மற்றொரு சினிமாவிற்கும் ஓடிக் கொண்டிருந்தேன். ரெக்கார்டிங் அறையில் நுழையும்போது நான் எல்லாவற்றையும் மறந்திருந்தேன். அந்த அறையின் உள்ளே போகும்போது நான் என் துக்கத்தை வாசலின் வெளியே வைத்துவிட்டுப் போவேன். பிறகு டப்பிங் முடியும் வரை நான் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்.  கடைசியில் எல்லாம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது அது என்னைத் தேடி வந்து சேரும். யாரும் எனக்காகக் காத்திருக்க ஆளில்லை என்ற உணர்வு என்னைப் பைத்தியமாக்கியது. வாழ்க்கை மிகவும் நிச்சயமற்ற நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருமுறை சென்னைக்கு போயிருந்தபோது வேலை முடிந்து நான் அறைக்குத் திரும்பினேன். இரவு ஒன்பது மணியிருக்கும், நிறைய நாட்களுக்குப்பிறகு அவர் கூப்பிட்டார். வழக்கம் போல பலதையும் பேசினோம். மூன்று நான்கு நாட்களாய் நான் சென்னையிலிருந்தேன். அப்போதெல்லாம் கூப்பிடுவார். அதன்பிறகு அவருடைய தொலைபேசி அழைப்பிற்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
முடிவாக ஒரு நாள் அவர், என்னை மிகவும் காதலிப்பதாகச் சொன்னார்.

முதல் முறையாக என் வாழ்வில் வார்த்தைகளால், குரல் வழியாக என்னைக் காதலிப்பதாகச் சொல்வதைக் கேட்கிறேன். அதுவும் நான் கேட்கும்படியாக. நிசப்தையாக அவர் சொல்வதை நான் கேட்டபடியிருந்தேன். நான் பேசினால் அவருடைய குரலின் சுகம் தடைபடுமோவெனப் பயந்தேன். ஆமாம், நான் காதலியாக மாறியிருந்தேன். பிறகும் நாங்கள் பேசினோம். பலவற்றையும் பேசினோம், சினிமா, புத்தகம், சங்கீதம், நான் வேலை பார்த்த படங்கள், மேலும் என்னுள்ளில் இருக்கும் பக்குவமின்மையைப் பற்றியும் அவர் பேசினார். முதல் தடவையாகத்தான் ஒரு மனிதன் என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறார். காதல் ஒரு பெண்ணை அழகாக்கும் என்பது சரிதான். ஆமாம், முதல் தடவையாக நான் அழகாயிருக்கிறேன் என்று அவர்தான் சொன்னார். அதுவரை யாரும் என்னிடம் சொன்னதில்லை. என் கணவர் உட்பட. இவர் சொல்வது கேலியோ என்றுகூட தோன்றும். எனக்கும் அப்படியொரு நம்பிக்கையில்லை. நான் காதலெனும் நதியில் மூழ்கிக் கொண்டிருந்தேன். அதுவரை திருத்தமாய் அலங்கரித்துக் கொள்ளவும் விருப்பமில்லாதவளாகத்தான் இருந்தேன். புடவை அழகாய் கட்டவோ, முகம் திருத்திக் கொள்ளவோ நான் முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. புடவைக்குப் பொருத்தமான ரவிக்கை போட வேண்டுமென்றோ அது எனக்கு பொருந்துகிறதா என்றெல்லாம்கூடப் பார்க்க மாட்டேன். நான் சுத்தமாய் என்னை வைத்திருப்பேன், அவ்வளவுதான். அவர் எனக்குப் பொருந்தும் நிறங்களைச் சொல்லித் தந்தார். நான் வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றியும், இசை பற்றியும் உலக சினிமாக்களைப் பற்றியும் சொல்லித் தந்தார்.

அவரும் என்னைப் போலவே முன்கோபியும் கௌரவக்காரராகவும் இருந்தார். குடிக்க மாட்டார், புகையில்லை. இப்படி எனக்குப் பிடித்த நிறைய குணங்கள்தான் என்னை அவரோடு நெருக்கமாக்கியிருந்தன. நாங்கள் அன்பிலாழ்ந்தோம், சண்டையிட்டோம், கோபப்பட்டோம். மகிழ்ந்திருந்தோம். மனோகரமானது அந்த நாட்கள். வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.
நான் என்னைக் கவனிக்கத் தொடங்கினேன். என் குணங்களையும் குணக்கேடுகளையும் பற்றி யோசித்து நான் தெளிவடையத் தொடங்கினேன். நான் மாறிக் கொண்டிருந்தேன். உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும். அதுவரை ரெக்கார்டிங் அறையிலும் வெளியிலும் எல்லா நேரங்களிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எல்லாரையும் கூர்ந்து நோக்கும் ஒரு பாக்யலஷ்மியாக மட்டுமே நானிருந்தேன். எப்போதாவது சிரித்தால் எல்லோரும் என்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருந்தது. அதனாலேயே எனக்கு முன்பாக எப்போதும் யாரும் தீண்ட முடியாத கோட்டினை அழுத்தமாய் வரைந்து வைத்திருந்தேன். முடியை இழுத்துப் பின்னி, ஒருவித ஆணவத்தோடு டப்பிங் தியேட்டருக்கு நான் வருவதைப் பார்க்கும்போது பலரும், இதென்ன இப்படி வருது என்று என் காதுபடச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் காதல், இழுத்துப் பின்னிய என் கூந்தலை விரித்துவிட வைத்தது. நெற்றியில் சிவந்த பொட்டு வைக்கச் சொன்னது. முகத்திலொரு புன்னகையைக் கொண்டு வந்து, மற்றவர்களை நம்பச் சொல்லிக் கொடுத்தது. ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்தில்லாமல் ஒருவரால் வாழ முடியாது என்று நான் நம்பியிருந்தேன்.

நாம் வாழ வேரொருவர் பின்னால் நின்று தாங்க வேண்டிய தேவையில்லை. நம் சக்தியுடன் தைரியமாய் நம்மை நாமே அன்பு செலுத்த வேண்டுமென்றும், எவ்வளவு அன்போடிருக்கும் அம்மா அப்பா வாய்த்தாலும் புருஷனிருந்தாலும் பிள்ளைகள் இருந்தாலும் நம் உடலையும் மனதையும் ஆரோக்யத்தோடு காக்க வேண்டியது நாம் மட்டுமே. யாரும் கடைசிவரை கூடவே இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. யாருமில்லையென்றாலும் நீ உன்னுடைய ஆத்ம தைரியத்தைக் கை விடக்கூடாது. நமக்கு மற்றவரிடம் அன்பு செலுத்த மட்டுமே உரிமையிருக்கிறது; வேதனைப்படுத்த அல்ல. இப்படியாக பல விஷயங்களை அவர் எனக்குச் சொல்லித் தந்தார்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்ற முயற்சித்தார்.
அடிமைத்தனத்தைச் சகிக்க முடியாமல் ஒரு தைரியத்தில் திருமண பந்தத்திலிருந்து வெளியேறினாலும் மற்ற சில காரியங்களில் கொஞ்சமும் தைரியமில்லாதவளாக இருந்தேன்.

2001 வரை நான் அப்படியொன்றும் ஊடகங்களில் தோன்றியதில்லை. எனக்குப் பேசத் தெரியாது.  ஊடகங்களிலும் மேடையிலும் பேசவும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் என்னை அவர் கட்டாயப்படுத்தினார்.

மேடைகளில் பேச வேண்டிய தகவல்களைக் கற்றுத் தந்தார். முதலில் பார்த்துப் படிக்கச் சொல்வார். பார்த்து வாசிப்பது அசிங்கமில்லையா என்று கேட்டால், எவ்வளவோ பெரிய ஆட்கள் பார்த்துப் படிப்பதை நீ பார்த்ததில்லையா என்று கேட்பார். எந்த விஷயம் குறித்துப் பேசினாலும் என் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களை விட நான் கூடுதல் அருகதை உள்ளவள் என்று தோன்ற வேண்டும். ஒரு களி மண்ணைச் சிற்பமாக மாற்றும் முயற்சியிலிருந்தார். நான் தலைகீழாக மாறினேன். எனக்கே என்னைப் பற்றி மரியாதை செலுத்த வேண்டிய விதத்தில் உருவத்திலும் பாவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல சமூகத்திலும் எனக்கொரு ஆளுமையை அவர்தான் ஏற்படுத்தி தந்தார்.

பிறகு என்ன ஏற்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை.
மெல்ல மெல்ல அவர் என்னிலிருந்து விலகத் தொடங்கினார். தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. பார்க்கவும் முடியவில்லை. இதற்கிடையில் எனக்கொரு விபத்து ஏற்பட்டது. ரொம்பவும் பெரிய விபத்து. ஒரு டாங்க்ர் லாரியில் இடித்து வண்டி சுக்கு நூறானது. எனக்கொன்றும் ஆகவில்லையென்றாலும் அந்தச் சாலையில் ஆட்கள் வந்து சேர்ந்தபோது சட்டென நான் கலவரப்பட்டேன். ஆனால் எனக்குக் கொஞ்சமும் பயம் தோன்றவில்லை. எனக்கு கூப்பிட்டுச் சொல்ல ஒருத்தர் இருக்கிறார். அதுதான் என் தைரியம். உடனே நான் அவரைக் கூப்பிட்டேன். என்னை அதிர வைக்கும் பதில்தான் அவரிடமிருந்து வந்தது.

என்னால் இப்போது வர முடியாது.

அந்த நொடியில் நான் நொறுங்கிப் போனேன்.
வாழ்க்கையில் ஒரு இழப்பு ஏற்பட்டால் நான் முழுவதும் தனிமையிலாவேன். நான் ஒரு அனாதைதான் என்றெல்லாம் தோன்றியது. விபத்தை விடப் பெரிய அதிர்ச்சியைத்தான் அவருடைய பதில் என்னில் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஓடி வந்து உதவியது வேறு ஆட்கள்.

இந்த நிகழ்வு என்னை மிகவும் துவளச் செய்தது.  உனக்கு ஏதாவது ஆயிடிச்சா?’ என்றுகூட அவர் கேட்கவில்லை. இதைப் பற்றிப் பிறகு கேட்டபோது மிகவும் உதாசீனத்தோடுதான் அவர் பதில் சொன்னார். ஆனாலும் நான் என்னைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவருடைய சூழல் அப்படியிருக்கலாம்.

பிறகொரு நாளில் என் சின்ன மகன் ஒரு பைக் விபத்தில் மாட்டிக் கொண்டு மரணத்தோடு மல்லுகட்டி மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் நான் அவரிடம்தான் சொன்னேன்.  நான் ஒட்டு மொத்தமாய் உடைந்து போயிருந்த நேரமது. எல்லோரிடமும் தைரியமாகவேப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்லமுடியாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போதும் அவர் வந்துவிடுவார் என்று முழுக்க நம்பினேன். எல்லாம் சொல்லி அழவேண்டுமே! ஆனால் அன்றும் அவர் வரவில்லை.  ஒரு மாதத்திற்குப் பிறகுதான் என் மகனைப் பார்க்க வருகிறார்.

ஒரு நாள் கட்டாயப்படுத்திக் கேட்டபோது சொன்னார்.
யோசிச்சு பார் லஷ்மி, என்னையும் உன்னையும் ஒன்றாகப் பார்த்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்னை விட்டுவிடு, உன் வாழ்க்கையை அது அதிகம் பாதிக்கும். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணும் ஆணும் ஒன்றாயிருந்தால் ஏற்படும் விளைவுகளை யோசித்து பார். இன்றுவரை உனக்கு ஒரு கெட்டபேரும் ஏற்படவில்லை. இனியும் அது ஏற்படக்கூடாது. இந்தச் சமூகம் நம்மைப் புரிந்து கொள்ளாது

நான் மனதோடு கேட்டுக் கொண்டேன், என்னை மிகவும் நேசிக்கிறேன் என்று சொன்னபோது இதெல்லாம் யோசிக்க வில்லையா? ஒரு ஆளை நேசிக்கவும் வேண்டாமெனவும் இவ்வளவு சுலபமாக முடியுமா?
நான் யோசிக்கிறேன், எங்களுக்கு நிறைய எல்லைகள் இருக்கிறது. குறிப்பாக எனக்கு. ஒரு உறவு வேரறுந்து போகும்போது மற்றொன்றில் வேர்பிடிப்பது சர்வ சாதாரணமானதுதான். அப்படி நான் போய் விழக்கூடாது. இனியொரு திருமணம் எனக்குப் பயமாக இருந்தது. ரகசிய உறவில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.
எல்லா ப்ரியத்தையும் மனதில் ஒதுக்கி அடைகாத்து நாங்கள் பிரிந்தோம்.

அதொரு கடினமான தீர்மானமென்று பிறகு நான் புரிந்துகொண்டேன். அவருடைய அவஸ்தை எனக்குத் தெரியாது. ஆனால் நான் உண்மையில் துடித்துப் போனேன். யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமல் நிரந்தரமாக பத்மநாபசாமி கோவிலில் தூண்களின் மறைவில் உட்கார்ந்து அழுதேன். கடவுளிடம் பேசினேன். உறவுகளில் எதற்காக என்னை இப்படி சிக்குற வைத்து வேதனைப்படுத்த வேண்டும்? முதலில் அப்பா, பிறகு அம்மா, அண்ணன், கணவரின் அப்பா, கடைசியில் இவரும். நான் நேசிப்பவர்களெல்லாம் ஏன் என்னை விட்டுப் போகிறார்கள்? யாருக்கும் என்னை வேண்டாமா?

அவர் எனக்கு ஏன் இவ்வளவு அன்பையும் கொடுத்தார்?

எதற்காக என்னை விட்டுப் போனார்?

 யாருடைய அன்பும் இல்லாமலே இந்தப் பெருவாழ்வை நான் வாழ்ந்து தீர்த்திருப்பேனே!

இதுவரை நான் ஒன்றும் கேட்டதில்லை. எல்லாக் கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொள்கிறேன். இவரை மறக்க எனக்கு உதவு தெய்வமே!

சத்தமிட்டு அழுதேன். கையில் கிடைத்த தூக்க மாத்திரைகளின் உதவியோடு தூங்க ஆசைப்பட்டேன். கேரளாவிலும் சென்னையிலும் மனநல மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் பார்த்தேன். அவர்கள் தந்த மருந்துகளையெல்லாம் சாப்பிட்டேன். இலக்கில்லாமல் கேரளா முழுக்க கார் ஓட்டி அலைந்து திரிந்தேன்.

இந்த நாட்களில்தான் புத்தகத்தின் ஆரம்பத்தில் சொன்ன பாலமந்திரத்தைத் தேடிப் போயிருந்தேன். ஆனாலும் எப்போதாவது  சுகமா லஷ்மி?’ என்று அவரிடமிருந்து ஒரு மெசேஜ் வருமென்று காத்திருந்தேன். ஆனால் அதன்பிறகு ஒருபோதும் அப்படியொரு மெசேஜ் வந்ததேயில்லை. நான் இல்லாமல் போனது அவருக்கு ஒரு பெரிய இழப்பேயில்லையோ? அவர் என்னை காதலிக்கவேயில்லை என்ற நினைவு அப்போதெல்லாம் வந்து,  என்னை மேலும் வேதனைப்படுத்தியது.

எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வெளிக்காட்டிக் கொள்ள மற்றவர்களிடம் அதிகதிகமாகச் சிரித்துப் பேசத் தொடங்கினேன்.

என் முகம் மாறிவிடக் கூடாது, யாருக்கும் ஒன்றும் தெரிந்து விடக் கூடாது. மனம் பாரம் தாங்கமுடியாமல் கனம் கூடி நின்றது. 15 வருடம் ஒரு மனிதனின் மனைவியாய் வாழ்ந்துவிட்டு பிரிந்தபோதுகூட எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நினைத்து லயித்திருக்க எதையும் என் கணவர் எனக்காய் பரிசளித்திருக்கவில்லை.

எல்லாம் சகிக்கும் சக்தி தர வேண்டி லலிதா சகஸ்ரநாமமும் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். அதீத துக்கம் மேலெழும்போது அவருக்கு சடசடவென மெசேஜ் அனுப்புவேன். ஆனால் ஒருபோதும் அதற்குப் பதில் வந்ததில்லை. ஒருவேளை நான் அனுப்பியது பதில் தர முடியாத செய்திகளாக இருக்கலாம். இல்லை, நான் பதிலுக்கு அருகதையற்றவளா, இல்லை அவர் என்னை மறந்திருக்கலாம்.

வாழ்க்கையில் தனிமைப்பட்டு விடக்கூடாதென நினைத்துதான் நான் அவரை நேசித்திருந்தேன். பணமோ  சொத்தோ பாதுகாப்போ எதுவும் வேண்டாமெனக்கு. இதெல்லாம் எனக்காக நானே ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஆத்மார்த்தமாக நேசித்ததுதான் நான் செய்த குற்றம். எதுவும் எதனுடைய தொடக்கமுமல்ல. முடிவுமல்ல என்று எங்கேயோ படித்திருக்கிறேன். ஆனால் இது என் தொடக்கமாயிருந்தது.

கடைசியும்தான். இனி ஒருமுறையும் யாரும் என்னை இப்படி நேசிக்கவும் வேதனைப்படுத்தி அழ வைக்கவும் அனுமதிக்க மாட்டேன். நம் மனசுதான் நம்முடைய உற்ற நண்பன். அந்த நண்பனை அளவில்லாமல் துக்கப்படுத்தினால் அந்த வலி தாங்கமுடியாமல் அது நம்மிலிருந்து நழுவி விடும். கடைசியில் அது போய் சேர்ந்திருப்பது ஏதாவது பைத்தியக்கார விடுதியிலாக இருக்குமென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் மனதை நான் ஒருபோதும் வருத்தப்பட வைக்கமாட்டேன்.

ஒருவேளை இந்தப் பிரிவை அவர் முன்பே தீர்மானித்திருந்திருக்கலாம். என்னை அதற்காக அப்படியாக அவர் தயார்ப் படுத்தியிருக்கலாம். இரண்டரை வருடம் நான் மன அளவில் தளர்ந்து போயிருந்தாலும் இன்று நான் அவர் சொல்லித் தந்ததுமாதிரியே வாழ்கிறேன். எல்லோரையும் நேசிக்கிறேன். ஆனால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, பிள்ளைகளிடமிருந்தும் கூட.

பல இக்கட்டுகளையும் சமாளித்து வந்த பெண்ணல்லவா நான். இது அவ்வளவு பெரிய பிரச்சனையா? சுயமாக ஆசுவாசப்படுத்தி என்னை நிதானப்படுத்த முயன்றேன். மற்ற சமூக, பண்பாட்டு பிரச்சனைகளை நோக்கி மனதைத் திருப்பிவிட்டேன்.  நிறைய பயணம் செய்தேன்.  மூகாம்பிகையிலும் குடஜாத்ரியிலும் போய் தியானித்தேன். அவரைப் பார்க்க சாத்தியப்பாடுகளிருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் தவிர்த்தேன்.  ஒருபோதும் அவரை நினைக்காமலிருக்க, அவர் கொடுத்ததையெல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பைத்தியகாரத்தனம் தான் என்று புரிந்தாலும் அவரை மறக்க என்னால் முடியவில்லை. 

இந்தக் காதலும் இழப்பும் அவருக்கு வலியேயில்லையென்றால் நான் இப்படி அவஸ்தைப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆனாலும் ஒரு சுகமான வலியாக அந்தக் காதலை நான் மனதில் பொத்தி வைத்திருக்கிறேன். இனி ஒருபோதும் மற்ற யாரையும் இதுபோல நேசிக்க வாசல் திறந்து விடக் கூடாது என்று ஆசைப்பட்டு அவரை நேசித்து நேசித்து மறக்க முயற்சி செய்கிறேன்.

No comments: