Friday 30 March 2018

மரணம் அழுத்திச் சொல்கிறது





மரண வீடு உருவகங்களின் வசிப்பிடம். அங்குள்ள காட்சிகளில் எல்லாம் மிகையான அழுத்தம் இருக்கிறது.  பிரத்யேகமான சாயல் இருக்கிறது. மரண வீட்டின் திண்ணை நிழலில் உட்கார்ந்து அஞ்சாங்கல் விளையாடும் குழந்தைகள் வாழ்வின் ஸ்திரத் தன்மையைப் பற்றி எதையோ உணர்த்துகிறார்கள். வந்ததிலிருந்தே நிறுத்தாமல் அழும் ஒரு குழந்தை அங்கு வியாபித்திருக்கும்  ஏதோ கேட்டுணரமுடியாத சுருதிக்கேற்ப அழுதது. காப்பி மரத்தினிடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கறுப்புப்பூனை, மிகச் சரியான இடைவெளி விட்டு தொழுவத்திலிருந்து எழும் கறவைப் பசுக்களின் சப்தம், தலையைத் திருப்பி திருப்பி துர்சப்தத்தைக் கேட்ட கோழிகள் என எல்லாமுமாகச் சேர்ந்து அசாதாரணமான சூழலை உருவாக்கின. அங்கேயிருந்து தன் மகளின் முகத்தைப் பார்க்கும் அப்பாவின் கண்கள் என்றென்றைக்குமாய் இழந்தே ஆகவேண்டிய ஒருத்தியல்லவா இவள் என்ற எண்ணத்தில் தயங்கும்.  அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரியன்பின்             அலைகள்  நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள். கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.  அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. ஒவ்வொருவரின் இறுதி பரிணாமமாக மாறி இருக்கும் அந்த பூத உடல் கௌரவத்தோடு இருக்க உங்களை நிர்பந்தித்தபடி இருக்கும். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு  பின்புலம். மரண  வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின்  புன்னகை  மேலும் மர்மமாகப் பரவி வருவதைத் தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

பழங்கலத்தின் திண்ணையின் கீழ் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருக்கும் சுருண்ட முடியும்  நடுத்தர வயதுமுடைய கருப்பியின் தனிமையான கண்ணீருக்குத்  தீவிரம் அதிகம்.   கருப்பியின் ஒரு முடி இழையில் எத்தனை சுருள்கள் இருக்கிறதென்று ஒரு நாள் சுமித்ரா பிரித்துப் பார்த்தாள். ஒவ்வொரு முறை பிரித்த போதும் முன்னால் பிரித்த பாகம் முன்னைவிடச் சுருண்டது. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தச் சுருண்ட முடி எப்படி கண்டங்கள் தாண்டி, பெருங்கடல் கடந்து மலைப்பாதை ஏறி கல்பட்டாவில் பஸ்ஸிறங்கி உன் தலையில் வந்து உட்கார்ந்தது என்று சுமித்ரா அவளுடைய குளிர்ந்த சிரிப்பினூடே பலமுறை கேட்டிருக்கிறாள்.

மாலை நேரங்களில் பழங்கலத்தின் தூணில் சாய்ந்து நின்று சுமித்ராவும், தடுக்கில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கருப்பியும் எவ்வளவோ நாட்களைக் கடத்தியிருக்கிறார்கள். பணியன் - பணிச்சிகளைப்போல நீண்ட நேரம் குத்துக்காலிட்டு உட்கார பூமியில் வேறு யாராலும் முடியாது. பணிச்சிகள் நடவு நட்டுவிட்டு உட்கார்ந்தால் அறுவடை காலம்வரை அப்படியே உட்கார்ந்து விட்டு, பின் நெல் அறுக்க அரிவாள் சாணை பிடிக்க மட்டுமே எழுந்திருப்பார்கள் என்று  சுமித்ரா கருப்பியைப் பரிகசித்திருக்கிறாள். சின்னதாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில்  இறுகக் கட்டிய வேட்டியை உதறி மீண்டும் சரியாகக் கட்டி உட்கார்ந்து விடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பாத்திரம் கழுவித்தரவோ, இலை அறுத்துக் கொண்டு வரவோ போவதைத்தவிர மீதி நேரங்களில் திண்ணையிலோ, காப்பிச் செடியின் நிழலிலோ குத்துக் காலிட்டு உட்கார்ந்து விடுவார்கள். உட்கார்ந்த பிறகு எழுந்திருக்க மிகவும் யோசிப்பார்கள். தங்குவதற்கு இடம் இல்லாததால், கிடைக்கும் இடத்தில் உட்காரவும், உடல் மறைக்க ஒரே ஒரு துண்டு மட்டுமே மார்பில் கட்டும் வழக்கமுள்ள பணிச்சிகள் இப்படி உட்காருவதையே இருப்பிடமாக்கியும் பழகியிருந்தார்கள். திருமணமான புதிதில் சுமித்ரா, “இந்த பணிச்சிகள் உள்ளாடைகளுக்குப் பதில் குத்துக் காலிட்டு உட்காரப் பழகிக் கொண்டார்கள்,” என கீதாவுக்குக் கடிதமெழுதியிருக்கிறாள்.

வாசுதேவன் வீட்டில் இல்லாத நேரங்களில் கருப்பி சுமித்ராவின் முடி சிக்கெடுக்க, தலை உலர்த்த என ஒத்தாசைக்கு வருவாள். ஒரு நாள் குளிக்கலன்னாலும் எனக்கே என் பக்கத்தில் நிக்க முடியல. நீ குளிச்சு எத்தனை நாளாச்சு? இல்ல எப்பவாவது குளிக்கற பழக்கமிருக்காஎனக் கேட்கும் சுமித்ராவுக்கு, ஆனாலும் இவளிடமிருந்து எந்த நாற்றமும் வராதது ஆச்சர்யமாக இருக்கும். சுமித்ரா ஆற்றில் குளித்து முடித்து மேலேறி வரும்போது பணிச்சிகளின் குழந்தைகள் இடுப்புத்துணியோடு நாலைந்து முறை பல்டி அடித்து, தண்ணீரைக் கலக்கி விளையாடி, அப்படியே வெயிலில் நின்று, மெல்ல நடுக்கம் நீங்கி, காய்ந்த பிறகு அதே துணியோடு பட்டறைக்கோ, களத்திற்கோ போவார்கள். ஒன்று மட்டும்தான் அவளுக்குப் பிடிக்காது. வழியில் யாரும் இல்லையென்று தெரிந்தால், சற்றே முன்னால் சாய்ந்து நின்று கால் அகற்றி அணைகட்டி நிறுத்தின தண்ணீரைத் திறந்து  விடுவது போல  மூத்திரம் அடிப்பார்கள். உட்கார்ந்துதான் போனால் என்ன? மற்ற நேரங்களில் மட்டும் இப்படி குத்துக் காலிட்டு உட்காருகிறீர்களே! கேட்க நினைத்தாளே தவிர இதுவரை கருப்பியிடம் கூடக் கேட்டதேயில்லை.

எல்லா பணிச்சிகளும் சோம்பேறிகள் என்று சுமித்ரா சொல்வாள். நகர்ந்து உட்காரக்கூட தோன்றாமல் ஒரே இடத்தில் இப்படி உட்கார்வதில் என்ன சுகம் இருக்கிறதோ?

சுமித்ராவைத் திருமணம் செய்து புளிக்கல் வீட்டுக்குக் கூட்டி வரும்போது கேசவனுக்கு மூன்று வயதிருக்கும். அவனை முற்றத்தில் சாய்ந்து நிற்கும் பலாமரத்தில் ஏறி விளையாட விட்டுவிடுவாள் கருப்பி. பட்டறையிலிருந்து வரும் வழியில் பாலுக்கர பொயிலியிலிருந்து ஒளித்து, பறித்து வந்த ஆரஞ்சையோ கொய்யாவையோ எடுத்து வந்து சமையலறை கூரைகளின் மூங்கில் கழிகளில் தட்டி இனிமையாய் கூப்பிடுவாள்.

எளாம்ப்ராட்டி” (இளம் தம்புராட்டி)
இந்த அழைப்பின் பொருளென்னவென்று சுமித்ரா வாசுதேவனிடம் கேட்டபோது அவர், வீட்டுக்குப் பெரியவரை பாப்பன்என்றும் அவருடைய மனைவியை பாப்பத்திஎன்றும் கூப்பிடுவார்கள். நீ சின்ன எஜமானி அம்மா,  இளம் தம்புராட்டி. நான் இளம் தம்புரான். அதைத்தான் அவர்கள் எளாம்ப்ராட்டி - எளாம்ப்ரான் என்று கூப்பிடுகிறார்கள் என்றார். சுமித்ரா அன்றே கீதாவுக்கும் சுபைதாவுக்கும் கடிதமெழுதிளாள். ஏண்டி கழுதைகளா, நான் இங்க இளைய தம்புராட்டி தெரியுமா? உங்களைப் போல வீட்டு வேலைக்காரி இல்லை. செய்த வேலைக்கு மாமியார் இன்னைக்கு எவ்வளவு மார்க் போடுவாங்கங்கறது தானே உங்க கவலையா இருக்கும்? ஆனா எனக்கு கட்டளை இட்டபடி நடந்தால் போதும். இதோ இப்பகூட ஒரு அடிமைப்பெண் இரண்டு கிண்ணங்களில் வைத்துத் தந்த, இப்போதுதான் பறித்தெடுத்த கொய்யாக்காவை நான் பொறுமையாக சுவைத்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியுமா, வயநாட்டில் விளையும் கொய்யாவுக்குள் அப்படி ஒரு குளிர் இருக்கும். அதே அளவு இனிப்புமிருக்கும். அங்கே விரல் அளவில் பழுக்கும் காய் இங்கே தொடை அளவு பெருத்திருக்கும். ஃப்ரஷ்நெஸ்னா உங்களுக்கு அங்க சூடுதானே. இங்கே  குளிர்.  கொடுத்து வைத்திருக்க வேண்டும் கழுதைகளா

கீழே பட்டறையிலிருந்து குலை நடுங்கும் அலறல் சத்தம் கேட்டு மாதவியை கூட்டிக் கொண்டு சுமித்ரா போனபோது, அடுப்புத் திண்ணையில் கைகள் குத்திநின்றபடி அலறிக் கொண்டிருந்தாள் கருப்பி. கருப்பி அலறாதஎன்று அதட்டியபடி பக்கத்தில் அவள் அம்மா காளியும் நின்று கொண்டிருந்தாள். பிரசவிக்கும் பெண்களிடமிருந்து வரும் அனைத்து அழுக்குடனும் மேலும், நிர்வாணத்துடனும், வெட்கத்துடனும் மன்னிப்புக் கோரும் கண்களுமாய் கருப்பி அன்று இவளைப் பார்த்தபடி கிழிந்த பாயில் படுத்துக்கிடந்ததை சுமித்ரா எப்போதும் நினைப்பதுண்டு. அதற்கான பிராயசித்தமாகக் கூட இருக்கலாம், சுமித்ராவின் நிழலாகக் கூடவே இருந்தாள்  கருப்பி. அவளால் முடிந்த  நாட்களில் ஒரு நாளும்  சுமித்ராவின் வீட்டிற்குப் போகாமலிருந்ததில்லை.

கருப்பியின் வெள்ளை வெளேறென்ற புளியங்கொட்டைப் பற்களைப் பார்த்து டூத்பேஸ்ட்காரர்களுக்கு ஒரு எதிர்விளம்பரம் கொடுக்க வேண்டுமென்று சுமித்ரா நினைப்பாள். எவ்வளவு தேய்த்தாலும் மஞ்சள் நிறம் மாறாத வாசுதேவனின் பல்லையும், உமிக்கரியையோ, மாவிலையையோ, வேப்பங்குச்சியையோ கூட பார்த்தேயிராத கருப்பியின் பல்லையும் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் சுமித்ரா. அது அவர்களுடைய உணவு பழக்கத்தினால் கூட இருக்கலாம். பழைய வயநாட்டின் நீளமான வரப்புகளில் நண்டு வளைகள் மிகுந்திருந்தன. தென்னங்குச்சியின் மெலிதான முனையோ, நாணல் தண்டோ எடுத்து குத்திக் கிளறினால் ஏற்படும் குடைச்சல் சகிக்கமுடியாமல், அந்த குச்சியைப் பிடித்தபடி நண்டுகள் வெளியே வரும். அதைப் பிடித்து, சுட்டு அல்லது அவித்து கூடவே ஏதாவது தழையோ, தாம்போ பறித்து குழம்பு வைத்து, பூசணி இலையை வதக்கி, கஞ்சி வடிக்காத சோற்றுடன் சாப்பிட்டார்கள். பின்னாட்களில் ரசாயன உரம் வயநாட்டின் நண்டுகளை அழித்தது. தழை தாம்பின் சௌந்தர்யத்தையும் கருக்கியது. பணியர்கள் பித்தம் பிடித்த முகமுள்ளவர்களாக மாறினார்கள். அவர்களின் வெள்ளை பற்கள், உடைந்த மஞ்சள் பற்களாக மாறிப் போயின. கடிப்பதெல்லாம் விஷமான பின் குள்ளநரிகள்கூட வயநாட்டில் அபூர்வமாயின. நரிகள் ஊளையிடுவது  கூட தூரத்தில் கேட்கும் சப்தத்தில் ஒன்றானது.

கருப்பியின் வாழ்க்கையில் நடந்த எல்லா  நிகழ்வுகளிலும் சுமித்ராவுக்கும் பங்கிருந்தது. மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகே கருப்பியின் பாஷையை சுமித்ரா புரிந்து கொண்டாள். அதற்காக கருப்பியை விட சுமித்ரா அதிகம் விட்டுக் கொடுத்திருந்தாள்.

கருப்பி, இப்படியே பண்ணான்னா உன்னோட பணியன் கொராம்பிய நான் அடிச்சே அவனைக் கொன்னுருவேன்

தோட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கும், மைசூர் வாழையும், இஞ்சியும் திருடுவது எல்லை மீறிப் போனபோது கொரம்பியை வாசுதேவனே போலீசில் பிடித்துக் கொடுத்தார். சுமித்ரா வாசுதேவனின் காலில் விழுந்து அவனைக் காப்பாற்ற சொல்லி அழுதாள். கொரம்பனை போலீஸ் காலில் அடித்து நடக்க முடியாமல் கூட்டிப் போனதைப் பார்க்க பாவமாக இருந்ததால் வாசுதேவனே அவனை ஜாமீனிலும் வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது.

கொரம்ப’ - பணியன்கள் மழையில் வேலை செய்யும்போது பயன்படுத்தும் குடையின் பெயர் கொரம்ப’. ஒரு வேளை இந்த பூமியின் மிக பெரியதும், பாரமானதுமான குடையே அதுவாகத் தானிருக்கும்.  ஒரு சிறிய குடில் மாதிரியான குடை.

மூங்கில் வாரைகளைக் கிழித்துச் சின்னதாகப் பின்னி, மடித்து, உள்ளே *கூவ இலை வைத்து, இரண்டு தட்டாகப் பின்னி, ஆஜானுபாகுவான ஒரு ஆளுக்கு  நெஞ்சு வரை உயரமிருக்கிற பெரிய குடை. மழையையும், காற்றையும் தடுத்து, உள்ளே உட்கார்ந்தால் மாடத்திற்குள் உட்கார்ந்தது போல பாதுகாப்பு தரும். வசதியாக உட்கார்ந்து அழும் குழந்தைகளைப் பார்த்தால் பிரசவிக்காத பெண்களுக்குக் கூட பாலூட்டத் தோன்றும். அப்படி ஒரு குடை அது. காற்றுக்கு ஈடு கொடுத்து குளிர் தெரியாமல், மிகவும் வசதியாக அதற்குள் நின்று பணிச்சிகள் நாற்றெடுக்கவும், நடவும் செய்தார்கள். சந்தோஷத்தில் காற்றில் பரவ சிரிக்கவும், துக்கத்தில் தேம்பி அழவும் செய்தார்கள். சுமித்ரா அந்தக் குடையை உயர்த்திப் பிடித்துப் பார்த்திருக்கிறாள். இருபத்தைந்து ராத்தல் கனம் இருக்கும். ஏன் இப்படி குடையின் பெயரை மனிதர்களுக்கு வைக்கிறீர்கள் என்று கருப்பியிடம் சுமித்ரா கேட்டிருக்கிறாள். கேட்கும் போதே அதுவும் நல்லதுதானே என்றும் அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

நாங்க அப்படித்தாம்மா வெள்ளி, பூச்சி, கரப்பான், கரையான், கைம வெளியன், தொண்டி, தேன், தும்பி, சொரியன் பேக்கன், மாரி, பொந்து, முனியன், இப்படித்தான் பேரு வைப்போம்.   இந்தப் பூவுலகின் பூச்சிகள், உலோகங்கள், நெல் விதைகள், நிறங்கள், ஊனம் தான் அவர்களின் பெயர்களாகியிருந்தன. பூச்சி, உலோகம், விதை, நிறம், ஊனம் போல அவர்களும் குளிப்பதில்லை! சரியாக உடைகள் மாற்றுவதில்லை. நாட்கள் போகப்போக தவிட்டின் நிறத்திலும், தழையின் நிறத்திலுமாக மாறியிருந்தன அவர்களது ஆடைகள்.     கண் முன்னால் புதிய மல் துணிகள் சேற்றின் நிறத்தினை   அடைந்தன. பிரபஞ்ச ஆரம்பத்திலிருந்த நிறம். இன்னுமதிகமாக கசங்கவோ, பழையதாகவோ முடியாத நிறம்.

* கூவ இலை - அரரொட்டி மாவு கிழங்கின் இலை.


ஒருநாள் கருப்பி சுற்றிலும் யாருமே இல்லாதிருந்த போதும் குரல் தாழ்த்தி, அந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். அவளுடைய மூத்த அண்ணன் கைம, அதீத போதையில் புருஷன் கொரம்பியை அடித்து வெளியில் தள்ளிவிட்டு அவளைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தான். முன்பெல்லாம் அவர்கள் அப்படியொன்றும் பாதுகாப்பின்மையோடு வாழ்ந்ததில்லை. நோயையும், வலியையும், சந்தோஷங்களையும், சந்தேகங்களையும் அவர்கள் கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு நிம்மதியாய் வாழ்ந்தார்கள். குலத்தலைவர்களான மூப்பர்கள் மேற்பார்வையில் உடுக்கை அடித்து, பீப்பி ஊதி கடவுள் பக்தியில் தங்களை மறந்திருந்தார்கள். அவர்களின் கடவுள்கள் வெற்றிலைத் தோட்டத்திலோ, கள்ளிச் செடியின் அடியிலோ, ஜாதி இந்துக்களின் கடவுள்களிடமிருந்து தொடமுடியாததொரு தூரத்தில் தாழ்மையோடும், அதே சமயம் அருள் வந்தால் உக்ரத்தோடும் உறைந்திருந்தார்கள். பரவாயில்லை, அழ வேண்டாம். இனி அப்படி நடக்க நீ அனுமதிக்காதே. பொம்பளங்க   நாம என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் நடக்காம பாத்துக்கணும்.என்று சுமித்ரா சமாதானம் சொன்னாள். ஒரு காலை திண்ணையிலும் மறுகாலை மடக்கியும் உட்கார்ந்திருந்த அவளிடமிருந்து பிளேடை வாங்கி நகம் வெட்டிக்கொண்டே அதன் பின் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் கருப்பி. வெகு நேரம் தலை குனிந்து அமைதியாயிருந்தார்கள் அவர்கள். எதற்கோ இருவருக்குமே அப்படியொரு மௌனம் தேவைப்பட்டது. 


No comments: