பாலக்காட்டிலிருந்து கோழிக்கோட்டிற்குச் செல்லும்
நெடுஞ்சாலையில் ஆறேழு கிலோமீட்டருக்கப்பால் தனியே பிரியும் பிரதேசமது, வேறொரு பிரதேசம். காடும்,
மலையும், கொஞ்சம் நிலமும், மலம்புழா அணையிலிருந்து வழியும் வாய்க்காலுமாய் கடவுள்
தனக்கென படைத்துக்கொண்ட சொந்த தேசத்தில் அவளுக்கு மட்டும் வலியையும் வறுமையையும் தின்று தின்று வற்றி வளர்ந்த தேகம் வாய்த்திருந்தது. கேரளப் பாரம்பரிய உடையான
வெள்ளைநிற முண்டும் ஜாக்கெட்டும் அணிந்து ஒரு ஒற்றை மேல் துண்டுடன் இளமையின், தேங்காய் எண்ணெயின்
பளபளப்பில் வளர்ந்த அடர்ந்த கூந்தல் வெண்பஞ்சாய் அலைஅலையாய் அவள்
முதுமைக்கு வழிவிட்டிருந்தது.
அன்று அவள்
காலையிலிருந்து யாரிடமும் பேசவில்லை, சாப்பிடவில்லை. வெறுமனே ஈசிச்சேரில் படுத்துக்
கிடந்தாள். எங்களின் பல
மாலைகளை சோகமாக்கிய, கலவரப்படுத்திய, கோபப்படுத்திய அவளின் வாழ்வனுபவங்கள் கண்களின் வழியே காட்சிகளாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.
நாங்கள்
எல்லோருமே வயது வித்தியாசமின்றி அவளை முத்தியம்மா என்றே
கூப்பிடுவோம்.அம்மாவின் அம்மா. கல்யாணி. குழந்தையாய் இருக்கும்போதே அப்பாவை இழந்த
எங்களுக்கு அவளே அப்பா, உலகை தைரியமாய் எதிர்கொள்ள கற்பித்த பெண்மையின் உச்சம்,
அறிவுச்சுடர், எதன் மீதுமான தீர்க்கமான பார்வை, தெளிவான பகிர்தல், அவளே எங்கள்
எல்லோருக்குமான ஏழாம் அறிவு.
அன்றும் கூலி வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த
அவளையும் தன் மூன்று குழந்தைகளையும் சேர்த்து அடித்து நொறுக்குகிறான் கணவன்.
குழந்தைகள் மேல் அடி விழக்கூடாதென அத்தனையையும் அவளுடைய உரமேறிய சரீரத்தில்
ஏற்றுக் கொள்கிறாள். முரட்டுத்தனமான அடியில் கைவிரலிலிருந்து ரத்தம் சொட்டுச்சொட்டாய் சாணித் தரையை
மேலும் கருமையாக்குகிறது. ஆனாலும்
அவள் அழவில்லை. அமைதி காக்கிறாள். அதுவே அவனை
மேலும் உக்கிரமாக்குகிறது. சோறு வடித்து
வைத்திருக்கும் மண் பானையை சுடு
சோற்றுடன் தலையில் போட்டு உடைக்கிறான். மேலும் முக இறுக்கம் கூடி வலி
தாங்குகிறாள்.
“வீட்டை விட்டு போயிடு,
சாய்ந்தரம் வர்றதுக்குள்ள உங்க அம்மா
வீட்டுக்குப் போலன்னா கெணத்திலத் தூக்கிப் போட்டுட்டு விழுந்து செத்திட்டான்னு உன் அண்ணன்ட்ட சொல்லிடுவேன்”
“...............”
“சாப்பாட்டில வெஷம் வச்சிடுவேன்”
“...............”
“அடிச்சே கொன்னுடுவேன்”
அவள் காத்த பேரமைதியும் அவனின் கையாலாத்தனமும் ஒன்றுசேர குழந்தைகள் கதறக்கதற அவளை வெளியே இழுத்து
தெருவில் தள்ளிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறான்.
எந்தத் துயரத்தின் துரத்தலிலும் தன் பிஞ்சுக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்குப் போவதில்லை
என்ற அவளின் மனக்கட்டுப்பாடு லேசாகக் குலைய ஆரம்பிக்கிறது.
அழகு
பார்ப்பதற்கும் படுக்கையை விரிப்பதற்கும் மட்டுமே வேறொருத்தி தன்
கணவனுக்குத் தயாராக இருக்கிறாள் என்பது அவள் அறியாததல்ல.சதா மழை கொட்டிக்
கொண்டேயிருக்கும் காடுகளில் விறகு பொறுக்கி
ஈரச்சுமை இடுப்பெலும்புவரை கனக்க நடந்து வரும்போதும், கணுக்கால் சேற்றில்
புதைய நிலத்தில் நாற்று நட, களையெடுக்க என
குனிந்திருந்தபோதும், லேசாய்
வெயிலடிக்கும் காலங்களில் ரைஸ்மில்லில் தவிட்டுமூட்டை தூக்கிப்போடும் போதும் தன்
சக தொழிலாளி இதையெல்லாம் சொல்லியிருக்கிறாள்.
அப்படி
சொல்பவர்களுக்கு ஒரு கசந்த
புன்னகையை மட்டுமே தந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து
விடுவதையே பழக்கமாக்கியிருந்தாள் முத்தியம்மா. மனசு முழுக்க கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், மனதின்
பிரளயம் வெளித் தெரியாதபடி கண்கள் மட்டும்
தெளிவாய் ஒளியாய் பிரகாசித்தது.
அன்றும்
வீட்டிற்கு வந்து கூரைக்கடியில் படுத்துக் கிடந்து யோசிக்கிறாள். நினைவுகளைக் கலவரப்படுத்தி
பூகம்பமாய் மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறான் கணவன். பத்து மாதமான கைக்குழந்தையை
மட்டும் விட்டுவிட்டு ஐந்தும் ஆறும் வயதான பெரிய பிள்ளைகளை மட்டும் கதறக் கதற
இழுத்துக் கொண்டு வெளியேறுகிறான்.
“இதுங்க ரெண்டையும் நான் வளத்துக்கறேன்,
அந்த சின்ன சனியனை வச்சிகிட்டு நீ இங்க என்ன பண்ணப் போறேன்னு நானும் பாக்கறேன்’’
முதல்முறையாக
மௌனம் உதறுகிறாள்.
“நான் இப்பவே இங்கயிருந்து போயிடறேன், எம்புள்ளங்களை மட்டும் எங்கிட்டயே விட்டுடு. நானே
கூட்டிட்டுப் போயி வளத்துக்கறேன்’’
“பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு
ஓடிட்டான்னு எனக்குக் கெட்ட பேர் வர்றதுக்கா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எனக்குதான இதுங்களைப் பெத்த. எனக்கு வளக்கத் தெரியும் போ’’
செருப்பைக்
கழற்றி அடிக்கிறான்.தோல்
செருப்பால் விழுந்த அடியின் வலியும் மூக்கிலிருந்து கொட்டும் ரத்தமும் உச்சி மண்டையைத் தொடுகிறது. குழந்தைகளுக்காக செருப்பணிந்த கால்களைத் தன் உதிரத்தால் கழுவுகிறாள். பெண்ணின் கதறலும் கையறு
நிலையும் ஆணை மேலும் மேலும் வெறி கொள்ளவே செய்கிறது. குழந்தைகள் கலவரப்பட்டு அலற அலற வெறிகொண்டு
தாக்குகிறான். சுயநினைவின்றிப் போனவளைத் தள்ளி விட்டு பெரிய குழந்தைகளை இழுத்துக் கொண்டு போகிறான்.
நினைவிழக்கும் முன்பு அவள் சொன்ன வார்த்தைகள் மட்டும் காலங்கள் கடந்தும் பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.
“என்ன அடிச்ச கை தாண்டா மொதல்ல குழிக்குப் போகும்’’
அவளுடைய நிராதரவைத் தகவலாய்க்
கேட்டறிந்த அண்ணன் வந்து கட்டிக்கொண்டு அழுகிறான். ”பெத்த அவன் எப்படியும் வளத்துப்பான். பெரிசானா அவங்க உன்னத்
தேடி வராம எங்க போப்போறாங்க? சின்னக் கொழந்தைய எடுத்துட்டு போலாம் வா’’ என என்னென்னவோ சமாதானம் சொல்லி அவளைத் தாய் வீட்டிற்கு அழைத்துப்
போகத் தயாராக்குகிறான்.
வெள்ளைக்கார
ஏகாதிபத்தியம் கேரளாவிலும் எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம். பெண்கள் எந்த
வயதுடையவராக இருந்தாலும் தூக்கிக் கொண்டுபோய் மிலிட்டரி கேம்புகளை அகாலத்தில் அலற
வைத்துக் கொண்டிருந்த சூழல். ஆண் வேடமிட்ட தங்கையையும் பத்து மாத குழந்தையை துணிமூட்டை
மாதிரியும் கட்டிக்கொண்டு மிலிட்டரி கேம்ப்பின் தூர வெளிச்சம் தூக்குக் கயிற்றின்
முடிச்சாய் சுண்டியிழுக்காமல் மலைப்பாதைகளிலும், ஓடைகளிலும், சில்வண்டின்
இரைச்சலையும் கடந்து மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்திலேயே பாதை கடக்கிறார்கள்
அண்ணனும் தங்கையும்.
15 வருடங்களைக் கடந்த பின்னும் தன் பெரிய பிள்ளைகளைப் பார்க்கவே முடியாமல் போகிறது அவளுக்கு. எங்கெங்கோ
அலைகிறாள். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, புதிய வீட்டிற்கு, கணவனுடைய இரண்டாவது
மனைவியின் காலடியிலெனக் கண்களின் தாய்மை தீயத்தீய எங்கெங்கு தேடியும் அவளால் தன்
குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.
தான் கையோடு தூக்கி
வந்திருந்த கடைசி மகள்தான் என் அம்மா மாதவி. அம்மா என்னயும் சேர்த்து மூன்று
மகள்களைப் பெற்றபின் அம்மாவின் இருபதாவது வயதில் என் அப்பா இறந்து போகிறார்.
அந்த ஊழிப்பேரலையின் பேரிரைச்சலைத் தாங்கமுடியாத அம்மாவுக்கு முத்தியம்மாவே
அரணாகிறாள். தங்கையின் கணவன்
இறந்த செய்தி எப்படியோ தெரிய வந்து அதுவரை பம்பாயிலிருந்த அண்ணன், முத்தியம்மாவின் ஒரே மகன்
வந்து தாயின் பிள்ளைச் சோகத்தை மட்டுப்படுத்துகிறான். கூடவே தங்கியும்
விடுகிறான்.
காலம் தன்
கருணையற்ற முரட்டுக் கரங்களால் எல்லாவற்றையும் வாரி அணைத்தபடி ஓடிக் கொண்டேயிருக்கிறது.
யாருடைய அழுகைக்கும், சந்தோஷத்திற்கும், சிரிப்புக்கும், கதறலுக்கும்,
துரோகத்துக்கும், உதாசீனத்துக்கும், நட்புக்கும், பகைமைக்கும் அது
காத்திருப்பதேயில்லை.
40 வருடங்கள். எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு எப்படி
போனதென்றே தெரியாமலும் வாழ்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு பெரும் அனுபவத்தையும்
விட்டுச் சென்றிருக்கிற கால இடைவெளி. மகன், மருமகள், பேரக்குழந்தைகள், விதவையான
மகள், அவளுடைய மூன்று பெண்கள் என அந்த ஆலமரத்தினடியில் காலம் தீட்டிச் சென்ற
சித்திரங்கள் அலாதியானவை. எப்போதாவது மூத்த மகனைப் பார்க்கத் திருவண்ணாமலைக்கு வரும் கணவனின் ரத்தம் சுண்டிய பார்வையை ஒரு நாளும் அவள்
ஏறெடுத்ததுமில்லை, உதாசீனப்படுத்தியதுமில்லை. மெளனம் காத்தாள். மெளனம் மட்டுமே
காத்தாள்.
கேரளாவின் ஏதோ ஒரு
மூலையில் தன் இளமையை முழுமையாய் அனுபவிப்பதாய் இரண்டு மனைவிகளும் ஒன்பது
குழந்தைகளுமாய் வாழ்ந்த கணவன் வலது தோளில் வளர்ந்த புற்றால் ரணப்பட்டு செத்தும் போகிறான். மரணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்னால் அவன் வலது கை வெட்டியெடுக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் செய்தியாக உள்வாங்கிக் கொள்ளும் முத்திம்மா ஒரு வறண்ட புன்னகையை மட்டுமே
காலத்தின் முன் பதிலளிக்கிறாள்.
யாரிடமும் எதுவும் பேசாமல் ஈஸிச்சேரில் படுத்திருக்கும் அவளிடம் நவீன வாழ்வில் வளர்ந்ததாய்
எண்ணிக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவியான நான் கேட்கிறேன்.
“என்ன முத்தியம்மா காலைல இருந்தே சாப்பிடல? ஒண்ணும் பேச மாட்டீங்கறீங்களே?’’
“ஒண்ணுமில்ல மகளே, பழசெல்லாம் நியாபகம் வந்திடிச்சு’’
அவள் கண்களில் பாந்தமாய் எரியும் நெருப்பாய் கோட்டோவியங்கள்
மின்னின. காலையிலிருந்தே மனதை அரித்துக்கொண்டிருந்த என் கேள்வியைத் தயங்கியபடியே
கேட்கிறேன்.
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?”
இதுவரையிலான வாழ்வின் ஒட்டு மொத்த வேதனையையும் ஒற்றைப் பந்தாய் சுருட்டி
ஒரு பெருமூச்சு விட்டபடி சொல்கிறாள்.
“தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன உங்க
அம்மாவத் தூக்கிக்கிட்டு காட்டுவழியில மிலிட்டிரிக்காரனுக்கு பயந்து மறஞ்சு மறஞ்சு
வந்தேன் பாரு, அப்பக் கழட்டியிருக்கணும் மகளே. அப்பவே கழட்டல. இப்பக்
கழட்டினா இத்தனை வருஷமும் அவனுக்காக வாழ்ந்ததாயிடும். அதனால கழட்டல. செத்தாலும் என்ன
சுமங்கலியாவே அடக்கம் பண்ணிடுங்க’’
அனுபவத்தின்
ரணத்திலிருந்து தெளிவாய்
வார்த்தைகள் பிசிறில்லாமல் அவளிடமிருந்து வருகின்றன.
அதன்பின் ஏழு வருடங்கள் கழித்து முத்தியம்மாவின் உடலை
சிதையிலேற்றும்போது கவனித்தேன். வெள்ளரி
விதைபோன்ற அவள் தாலி ஒரு கறுப்புக் கயிற்றில் அவள் கழுத்தில் புரண்டு கொண்டிருந்தது.
4 comments:
வலைப்பூ தங்களை இனிதே வரவேற்கிறது...
நல்லா இருக்கு .. வாழ்த்துக்கள் ... கலையும் இலக்கியமும் மக்களுக்கே ! அந்தவகையில் உங்களின் பயணம் தொடரட்டும்.
வணக்கம். சிறந்த தொடக்கம். வாழ்த்துகள்.
மா. தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/index.html
Hi Shylaja, indha padhivu ennai migavum negizhthi vittadhu nijam. yaravadhu oru nalla iyakunarai vaithu idhai oru kurum padamagavenum eduthu vidungalen please!
Post a Comment