Thursday 15 February 2018

'முத்தியம்மா' தொகுப்பு விமர்சனம் - பத்மநாபபுரம் அரவிந்தன்.



   கே.வி. ஷைலஜாவை சிறந்த மொழிபெயர்ப்பாளராக அனைவரும் அறிவோம். ஜாலங்களற்ற யதார்த்தமான வார்த்தைகளால் அவர் செய்யும் மொழிபெயர்ப்புகள் மூல நூலின் தரத்தையோ, வாசிப்பானுபவத்தையோ ஒரு போதும் குறைக்காததாய் இருக்கும்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடாகட்டும், எம்.டி ஆகட்டும் மற்றும் என்.எஸ். மாதவன், கல்பட்டா நாராயணன், சிஹாபுதின் பொய்த்தும்கடவு எனும் பலரின் மலையாள எழுத்துக்களையும் அதே கவித்துவமான நடையில் ஷைலஜாவால் தமிழுக்குத் தர முடியும் என்பதனை அவர் தம் மொழிபெயர்ப்புகளில் நிரூபித்துள்ளவர்.
ஷைலஜாவின் மொழிபெயர்ப்பை வாசித்த அனைவருக்கும், அவர் தமிழில் சுயமான படைப்பை தர வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். நானும் அவர்களிடம் பலமுறை இதனை தெரிவித்துள்ளேன்.
முத்தியம்மாவை ஒரு சுழி போட்டு துவங்கி இருப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.
இந்த புத்தாண்டின் விடிவே எனக்கு பவா அண்ணா, ஷைலஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ந்தது. நானும் என் குடும்பத்துடன் திருவண்ணாமலை போயிருந்தேன். அன்றுதான் நான் 'முத்தியம்மா' தொகுப்பை வாங்கினேன்.
காரில் சென்னை வரும் வழியிலேயே படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை (கட்டுரை) முத்தியம்மா வாசித்து முடித்து சற்று நேரம் அக்கதையினை காட்சிகளாக மனதுள் ஓட்டிப் பார்த்தேன். ஒருவரின் மனதினையும், எண்ண ஓட்டங்களையும் மிக சரியாக உள்வாங்கும் ஒருவரால் மட்டுமே இத்தனை தத்ரூபமாய் எழுத முடியும். சபாஷ் ஷைலஜா..
யாருக்கும் தான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரும் இடங்களும் நினைவுகளும் மறக்காது. அதிலும் பசுமை உறைந்து கிடக்கும் ஷைலஜாவின் கேரளாவின் நினைவுகளுள் நம்மையும் கைபிடித்து தன் பாட்டி வீட்டுக்கே அழைத்து செல்கிறார்.
வேறிடத்தில் எத்தனை ஆழமாய் வேரூன்றி கிளைபரப்பி பூக்களை சொரிந்தாலும் அடிவேரின் ஒரு பகுதியில் பிறந்து வளர்ந்த ஊரின் வாசம் கமழத்தான் செய்யும். அது அத்தனைக் கிளைகளிலும் பூக்களிலும் மிஞ்சும்.
இப்பொழுது மாதம் இருமுறை ஹெலிகாப்டரில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் நான் ஒவ்வொரு முறை அதில் ஏறும் போதும் , என் மனதுள் பால்ய காலத்தில் எப்பொழுதாவது ஊரின் மேலே பறந்து செல்லும் ஹெலிகாப்டரைக் காண அண்ணாந்து பார்த்தபடியே பத்மநாபபுரம் தெருவில் ஓடிய ஒரு சிறுவனின் நினைவும், உலகில் எங்கு சென்றாலும்.. பல சமயங்களில் வேளிமலையும், அடர் வனமும், எப்பொழுதும் நீர் நிரம்பி கிடைக்கும் பெருமா குளமும் மனதுள் வந்து நிற்கும். ஷைலஜாவின் ' நினைவில் காடுள்ள மிருகம் நான்' , அதனை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
கடைசியில் சச்சிதானந்தனின் வரிகளான ," நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது ..என் நினைவில் காடுகள் இருக்கின்றன", என்று மிகப் பொருத்தமாய் முடித்துள்ளார்.
நினைவிலிருந்து காடுகளை இழந்த மிருகங்களாகிப்போன மனிதர்கள் இதனைப் படிக்கும் போது தன் பால்யகாலத்தையும், பிறந்து வளர்ந்த ஊரையும் மனதுள் துழாவிப் பார்ப்பார்களென்பது நிச்சயம்.
இயக்குனர் பாலு மகேந்திராவின் மீது பவாவும், ஷைலஜா மற்றும் வம்சியும் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு சகலமும் அழகாய் சொல்லிப்போகிறார்.
தன் தம்பியாய், மகனாய் இருந்த நா. முத்துக்குமாரின் மரணம் தந்த பெருவலியும், அவரது நினைவுகள் தந்துகொண்டிருக்கும் துயரும் மிக உருக்கமாக நம்மை உறைய வைக்கிறது.
உமா பிரேமனைப் பற்றிய கட்டுரை ரொம்பவே மனதினை பாதித்தது. அதனை படித்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் மம்முட்டி ஷைலஜாவிடம் வாசித்துக் காட்டிய, குடியை பற்றிய ஷாஜி குமாரின் நையாண்டிக் கவிதையை சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.
அக்கவிதையினைப் படித்து முடித்ததும் சற்று நேரம் சிரித்தேன். ஆயினும் அக்கவிதை சொல்லும் நிஜம் என்னையும் யோசிக்க வைத்தது.
ஏனெனில் நானும் எப்பொழுதும், '' குடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை..  ''அதே போல குடியின் முடிவில்'' நான் ஒருபோதும் என்னானாலும் உருளைக்கிழங்கை மட்டும் தொடமாட்டேன்'', இக் கவிதையின் சம்பவம் எனக்கும் பலமுறை நிகழ்ந்துள்ளது.
யோசிக்க வைத்த கவிதை. குடி மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதனை சுய அனுபவத்தில் அறிந்தவன் நான்.
இப் புத்தாண்டிலிருந்து குடியை நான் மட்டுப்படுத்தி விட்டேன். இருபத்தி எட்டு நாட்கள் கடலில் குடிக்காமல் இருக்க முடிகிற எனக்கு விடுப்பில் வந்ததும் ஏன் அளவிற்கதிகமாய் குடிக்க தோன்றுகிறது?.. நான் ஏன் அக் கவிதையில் வருவது போல ' உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுக்க வேண்டும்', என்றெல்லாம் யோசிக்க வைத்தது.
கவிதையை எழுதிய ஷாஜி குமாருக்கும், வாசித்துக் காட்டிய நடிகர் மம்முட்டிக்கும் அதனை மொழிபெயர்த்து படிக்க வைத்து யோசிக்க வைத்த ஷைலஜாவிற்கும் நன்றிகள் பல.
மொத்தத்தில் தொகுப்பு முழுக்க பல விதமான விஷயங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷைலஜா தொடர்ந்து மொழிபெயர்ப்புடன் சிறந்த புனைகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதவேண்டுமென ஒரு நண்பனாய் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் 
பத்மநாபபுரம் அரவிந்தன்

No comments: