Sunday 4 February 2018

”சிதம்பர நினைவுகள்” – புத்தக அனுபவம்!

            பொதுவாகவே வம்சியின் புத்தகங்கள் என்னை வசீகரிக்கும் – நல்ல வாசிப்பானுபவம், எழுத்தாளர்கள், வடிவமைப்பு, எழுத்துரு என எல்லா வகையிலும்! ஜெயமோகனின் ‘அறம்’. பாரதி மணியின் ‘புள்ளிகள். கோடுகள், கோலங்கள்’ போன்ற புத்தகங்கள் இதில் அடக்கம்!
டிசம்பர் 2003 லிருந்து டிசம்பர் 2016 வரை ஒன்பது பதிப்புகள் கண்ட ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகத்தை, இந்த வருடம்தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன் – பெயரும், முதல் கட்டுரையும் சொந்த ஊரின் நினைவுகளாக இருக்கின்றனவே என்றுதான் வாங்கினேன் – மற்றபடி, புத்தகத்தைப் பற்றி வேறெதுவும் நான் அறிந்திருக்கவில்லை! கவிஞர் பாலசந்திரனின் கட்டுரை ஒவ்வொன்றிலும் அவரது வாழ்வானுபவம் வாசகனின் மனதைக் கரைக்கிறது – மொழிபெயர்ப்பென்றே தெரியாத அளவுக்கு உணர்வுகளைக் கடத்தும் ஷைலஜா அவர்களின் நடை பிரமிக்க வைக்கிறது!
“ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று.
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்திவைத்துக் காத்திருக்கும்.
எப்போதும்.”
முகவுரையில் உள்ள பாலசந்திரனின் இவ்வரிகள் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்பட்டு, நம்மை வியப்பிலாழ்த்துகிறது!
எல்லோர் வாழ்விலும் அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிலருக்கே அவற்றை எழுத்தில் வடிக்க வாய்க்கிறது. அதிலும் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த உரைநடைக்கு ஒரு கலை நயத்தோடு கூடிய இலக்கியத் தரம் கிடைத்துவிடுகிறது. அப்படித்தான் சுள்ளிக்காடு பாலசந்திரனின் இருபது கட்டுரைகளும் வாழ்க்கையை உள்ளபடி, அதன் ஏற்ற இறக்கங்களுடன், அன்பு, இரக்கம், கோபம், வெறுப்பு, காதல், ஈர்ப்பு என எல்லாவற்றுடனும் ஒளிவு மறைவின்றி படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறபோது, படைப்பாளிகள் மறைந்து, நாமும் ஒரு பார்வையாளனின் நிலையை அடைந்து விடுகிறோம்!
பாலசந்திரன் வித்தியாசமான மனிதர் – வாழ்க்கையுடன் உண்டான போராட்டங்களில், சமரசத்துக்கே இடம் தராமல், பல தழும்புகளுடன் வெற்றி பெரும் போராளி! ஏற்றங்களை விட சறுக்கல்களில் அதிக அனுபவம் பெறுபவர் – சிறிதும் தயக்கமின்றி அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், மூன்றாம் மனிதனாக எட்டி நின்று நம்முடன் வேடிக்கை பார்ப்பவர். சமூகத்தின் மீதான கோபம், ஏழ்மையின் வலி, காதலின் சுவையும், கசப்பும், மனித மன விகாரங்கள், விஸ்வரூபங்கள், மனித நேயம் அனைத்தையும் உள்ளபடி, எந்தவித மறைப்புகளும் இன்றி எளிதாக எழுதிச் செல்கின்றார். வாசகனால் அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாதவை அந்த அனுபவங்களின் ஆழமான பதிவுகள். உண்மைதானா அல்லது புனைவா? என்ற சந்தேகம் எழும்போதெல்லாம், அந்த அனுபவங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் அந்தக் கேள்வியையே அர்த்தமற்றதாக்கி விடுகின்றன!
சிதம்பரம் கோயில் பின்னணியில், வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் கதையில் தன்னம்பிக்கை ஆனந்த நடமாடுகிறது. அப்பாவின் அஸ்தியுடன் நதியில் நாமும் கரைந்தோடுகிறோம். தீயில் கருகிய காதல், திருப்பித் தரும் முத்தத்தில் நிறைவு பெறுகிறது.
அம்மாவை நினைத்து, “அவமதிப்பவனாக……. பாசமற்றவனாக…….நன்றி இல்லாதவனாக…….குற்ற உணர்ச்சியில் எனக்கு மூச்சு முட்டியது” என்கிறார்.
“பசிதான் பரம சத்தியம். பைத்தியம்கூடப் பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.”
முதல் கர்ப்பத்தைக் கலைத்துவிட நேரும்போது அவர் படும் வேதனை
“உலகின் முடிவுவரை பிறக்காமல் போக இருக்கும் என் மகனே,
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத் தவிர –
ஆனாலும் மன்னித்துவிடு என் மகனே.”
மார்த்தா அம்மாவின் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட காரணம், சிவாஜியுடன் சந்திப்பு, ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் வாங்கிய அறை, அமைதியாக இரவு முழுதும் கடற்கரையில் தங்கிய சாந்தம்மா, விஷக்கன்னி லைலாவின் தற்கொலை, ஸ்ரீவத்சனின் கவிதையும், தரித்திரமும், தான் மோகித்த ராதிகா, தற்கொலை செய்துகொள்ளும் மனநோயாளி – இப்படி அவரது அனுபவங்கள் நம்மைப் புரட்டிப் போடுகின்றன!
தேங்காய் எண்ணை வாசத்துடன் வக்கணையாகச் செய்யும் அவியல் குறிப்பும் உண்டு!
படிக்க வேண்டிய நல்லதொரு மொழிபெயர்ப்புப் புத்தகம் – வாழ்வியல் கட்டுரைகள் - வாழும் வரை நினைவில் வாசம் செய்யும் அனுபவப் பதிவுகள்!
அன்புடன்,

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

No comments: