
சீனிவாசன் அவர்களின் அழகிய கோட்டோவியங்கள் பத்து பக்கம், எஸ் ராமகிருஷ்ணனின்
ஆழமான முன்னுரை இவையெல்லாம் போக நூறு பக்கங்களே இருக்கும் ‘சுமித்ரா’ நாவலை இரண்டாவது
முறையாக படிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். என்ன செய்வது , கல்பட்டா நாராயணனின்
, “இத்ரமாத்திரம்” எனும் மலையாள நாவலை , சுமித்ரா என்ற பெயரில், கே வி ஷைலஜா அவர்களின்
தமிழ் மொழி பெயர்ப்பில் வாசிக்க வாசிக்க, ஒரு கவிதை புத்தகத்தை வாசிப்பதுபோல் இருந்தது.
நூறு பக்க நாவலைப் படிக்க வேண்டுமானால் படிப்பவர்களின் வேகத் திறனைப்பொறுத்து ஒன்று
அல்லது இரண்டு மணி ஆகும். எவ்வளவு வேகமாக படிப்பவர் என்றாலும், அதே கவிதை புத்தகமாக
இருந்தால் வாரம் அல்லது மாத கணக்கு ஆகும் அல்லவா? கவிதைகளை படிக்கும்பொழுது ஒவ்வொருவரும்
செய்யும் செயல்பாடுகள் ஒன்றுதானே. நிலை குத்திய பார்வையில் உள்ள ஒரு பைத்தியக்காரனாக
(பிடித்துப்போய்த்தான்) இருந்தேன். படித்துவிட்டு கொஞ்சம் தொண்டையில் எச்சில் விழுங்கினேன்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். தலையைச் சொறிந்துகொண்டு எனக்குத் தெரிந்த அந்தப் பெண்களை
போல் , அந்த உறவினரைப் போல், இறந்துபோன தெரிந்த ஒருவரைப்போல் என்று நினைவுகளை கொஞ்சம்
பின் நோக்கி கடத்தினேன்.
ஒரு மரணம் பற்றி சொல்லிவிட்டு, அதற்கான காரணம் என்ன என்ற தேடலில் வாசகனை
ஒரு துரித மனப்பான்மையில் படிக்கவைக்காமல், மரணமடைந்தவளின் சுற்றியிருப்பவர்களுடைய
வாழ்வியலை முகத்தில் அடிக்கும் உண்மை நிகழ்வுகளுடன், அவர்களின் அகங்களை காட்சிப்படுத்திக்
கொண்டு செல்லும் நாவல். முதல் முறை படித்து மூன்று மாதங்களாகியும், சுமித்ராவும், அவளுக்கு
பிடித்த பழங்கலம் இடமும், அவளது தலைவலியும், மாதவியும், வயநாட்டு ஆண்களும் , அவர்களை
பற்றி காப்பிச்செடிகள் தெரிந்து வைத்திருந்த ரகசியமும், எதிர்த்து வந்து நின்றாலும்
அடையாளம் தெரியாத வாசுதேவனும், அண்ணனும் தம்பியும் சேர்ந்து வியாபாரம் மட்டும் செய்யவில்லை
என சொல்லும் கீதாவும், எல்லோருக்கும் வேலை செய்யும் தாசனும் , அழுமூஞ்சி அனுசூயாவும்,
தனக்குமுன் ஆறு கால்கள் வட்டமிடும் சமயம் நிலைகுலைந்து நடுங்கிய தாமோதரன் சாரும், வெற்றிலை
போட்டுக்கொண்டு வெண்கல செம்பு விற்கும் பொதுவாளும், குத்துக்காலிட்டு அமரும் கருப்பியும்,
அவள் சார்ந்த மக்களும் ஞாபகத்தில் அழியாமல் இருந்தார்கள். மனிதர்களல்லாமல், சுமித்ரா
தூங்கும்பொழுது எப்படி தனது கைகளை வைத்துக்கொள்வாளோ அப்படித்தான் மரணம் நிகழ்ந்தும்
படுத்திருக்கிறாள், பணிச்சிகள் மூத்திரம் அடிக்க எப்படி நிற்பார்கள், பணியன்கள் குழந்தைகளுக்கு
கந்தக சாலா என்றோ, சீராக சாலா என்றோ பெயரிடவில்லை, குள்ளர்கள் வயதானவர்கள் என்று தெரிந்ததில்
, குழந்தைகள் உற்சாகம் இழந்தார்கள், சித்திரை மாதங்களில்தான் அங்கு அதிக பிரசவங்கள்
நடந்தன, போன்றவைகளும் படத்தின் காட்சிகளை போல மனதில் ஒன்றிவிட்டிருந்தன. ஆதலால் இரண்டாம்
முறை வாசிக்கும்பொழுது, முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பித்தாலும், வயநாட்டில் யாரை
மறந்துவிட்டோம் , எந்தக் கவித்துவத்தை திரும்பவும் அசைபோடலாம் என்று எந்த பக்கத்தை
வேண்டுமானாலும் சுதந்திரமாக புரட்டி வாசித்தேன்.
இந்தமுறை புருஷோத்தமன், சுமித்ராவிடம் கொண்ட அன்பை, அவள் அவனை ஆணாக
மதித்து கால்சட்டை போட்டுவிட்ட விதத்தை , நிர்மலாவில் அவன் சுமித்ராவை அடையாளம் கண்டதில்
நானும் தெரிந்து உணர்ந்தேன். நீண்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்த சுமித்ராவின் மீது
வெறுப்பு ஏற்பட்டு காறித்துப்ப துணிந்த மரியாவின் காரணம் மறந்துவிட்டிருந்தது. மீட்டெடுத்துக்கொண்டேன்.
தண்ணீரின் முதல் குளிர்ச்சியை தாங்க முடியாத அப்புவின் வீட்டில் சுமித்ரா இருந்திருக்கிறாளா,
ஒரே போர்வைக்குள் தூங்கினாளா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். கௌடரின் இருமலும்
, அது ஆரம்பிக்கும் நாளை சுமித்ரா வட்டமிட்டு நினைவு படுத்தி நெய்யரிசி கஞ்சி எடுத்துக்கொண்டு
செல்வதையும் அறிந்து , ஒரு தோழியின் இழப்பு அவருக்கு எப்படி இருக்கும் என வருந்தினேன்.
சுபைதாவுக்கு யானைக்குட்டி என்ன செய்தது என்ற ரகசியம் அறிந்து, முதல் முறை வாசித்தபொழுது
அவமான வலியை எப்படி இனம் காணாமல் இருந்துவிட்டேன் என்று அதிசயித்தேன். வாசுதேவனை விளக்கமாக
சொல்லும் , அவர்கள் பரஸ்பரம் பார்த்ததில்லை அத்தியாயத்தில், "ஒருவேளை அப்படி ஒரு
மனநிலை வாய்த்தால் பிரியத்தின் மேல்தான் அவள் மனம் சாயும்" எனும் வரிகளில் மனம்
லயித்தேன். "போபனையும் மொழியையும்" படிப்பதை விட்டுவிட்டு சுமித்ரா மரம்
வெட்டுபவனின் உடல் அசைவுகளை எண்ணியதை நான் மறந்திருக்கவில்லை. ஆனால் செய்யதலி, சூப்பியிடம்
கோவேறு கழுதைகள் எப்படி உருவாகிறது என்று சொல்லி சிரித்ததை மறந்துவிட்டிருந்தேன்.
“ஒரு பண்பாடு முழுமையாக அழிந்தபின் அதில் ஒரு நூல் மட்டும் எஞ்சுமென்றால்
அந்நூலில் இருந்து அப்பண்பாட்டை ஏறத்தாழ மீட்டுவிட முடியும் என்றால் அதுவே காவியம்”
என்று ஜெயமோகன் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அப்படி பார்த்தால்,
செவ்வாயில் காலூன்றி வாழ நேரிடும் பிற்கால மனிதன் வயநாடு என்ற கிராமத்தையம், மனிதர்களையும்,
சூழலையும், பண்பாட்டையும் சுமித்ரா அல்லது இத்ரமாத்திரம் நூலை வைத்துக்கொண்டு உருவாக்கிவிட
முடியும் என நினைக்கிறேன்.
வ.சௌந்தரராஜன்
02/11/2018
No comments:
Post a Comment